செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 5!

சார்பெழுத்துக்கள்: நால்வகைக் குறுக்கங்கள்
Tamil grammer
Tamil grammerImage credit: AI Image
பெ. சிவக்குமார்

வணக்கம்!  என்னுடைய பெயர் பெ.சிவக்குமார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குலசேகரநல்லூர் என்னும் குக்கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன்.நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தமிழ் மொழியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரிக்கு வந்த பிறகு தான் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை  எழுத சிறப்பாகக் கற்றுக் கொண்டேன்.  கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். என்னுடைய எழுத்துகள் எப்பொழுதும் வாசகர்களின் மனதில் “பசுமரத்தாணி போல” பதியுமாறுதான் எழுதுவேன்.  என்னுடைய படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவைகளாக இருக்கும். என்னுடைய படைப்புகளை வெளியிடும் கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Updated on

ஹலோ குட்டீஸ்! முந்தைய பாடத்தில் சார்பெழுத்துகளில் குற்றியலுகரம் மற்றும் குற்றியலிகரம் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் மீதமுள்ள சார்பெழுத்துக்கள் வகைகளான நால்வகைக் குறுக்கங்கள் குறித்து அறிந்துகொள்வோமா?

நால்வகைக் குறுக்கங்கள்:

ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர். ஆனால் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை. சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.

ஐகாரக்குறுக்கம்:

ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தமக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

வையம், சமையல், பறவை எனச் சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தமக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஔகாரக்குறுக்கம்:

ஔ, வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தமக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. ஔவையார், வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தமக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஔகாரம் ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 3
Tamil grammer

மகரக்குறுக்கம்:

அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தமக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகர மெய்யானது தமக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. போலும் என்னும் சொல்லைப் போன்ம் என்றும், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசைச் சீர்மைக்காகப் பயன்படுத்தினர். இச்சொற்களில் மகரமெய்யானது ன், ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக் குறுக்கம்:

அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும். 

இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும் என நாம் படித்திருந்தோம். அவற்றில் நாம் பத்து வகையான சார்பெழுத்துக்களையும் இதோடு நிறைவு செய்கிறோம். படித்த ஒவ்வொரு இலக்கணங்களையும் நீங்கள் அசை போட்டுக் கொண்டே இருந்தால் தமிழ் உங்கள் வசப்பட்டு நிற்கும் என்பது திண்ணம்.

logo
Kalki Online
kalkionline.com