

ஒரு நாள், அரசரும் தெனாலிராமனும் உலாவச் சென்றனர். இருவரும் பேசிக்கொண்டே போய்க்கொண்டிருந்ததால், தெருவோரத்தில் இருந்த அசுத்தத்தை தெனாலிராமன் மிதித்துவிட்டான்.
உடனே ஓடிப்போய், அருகிலிருந்த வாய்க்காலில் கால் கட்டை விரலைத் தேய்த்துக் கழுவிக்கொண்டு திரும்பினான்.
"நீ எவ்வளவுதான் கழுவினாலும், உன் விரலில் உள்ள அசுத்தம் முழுவதும் போகாது. அந்த அசுத்தத்தை நீக்குவதற்கு ஒரே வழி, அந்தக் கட்டை விரலை நீக்கிவிட வேண்டியதுதான்!" என்றார் அரசர்.
"நான் தான் மண்ணில் தேய்த்து, தண்ணீரில் சுத்தமாகக் கழுவி விட்டேனே. பிறகு என்ன?" என்றான் தெனாலிராமன்.
"எப்படிக் கழுவியபோதிலும், துளியளவேனும் அசுத்தம் உள்ளே சென்றிருக்கும். அந்த அசுத்தமான விரலுடன், உயர்ந்த கம்பளங்கள் விரிக்கப்பட்டிருக்கும் என் சொந்த அறைக்குள் நீ வரவே கூடாது!" என்று கூறி முகத்தைச் சுளித்தார் அரசர்.
"நம்முடைய உடலில் இருக்கும் அசுத்தத்தை முற்றிலுமாக அகற்ற முடியவில்லையே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றான் தெனாலிராமன்.
"அது அவரவர் உடலோடு ஒட்டிய அசுத்தம். பிறருடைய அசுத்தத்தைப்பற்றி அல்லவா நான் சொல்கிறேன்!" என்றார் அரசர்.
"அரசே, உங்கள் கருத்து தவறானது என்பதை நீங்கள் உணரக்கூடிய சந்தர்ப்பம் வரக்கூடும். அதுவரை காத்திருப்போம்" என்றான் தெனாலிராமன்.
சில மாதங்கள் கடந்தன. எனினும், தெனாலிராமன் அந்த நிகழ்ச்சியையும் உரையாடலையும் மறக்கவில்லை. ஆனால், அரசரோ அதை மறந்துவிட்டார்.
அழகான ரோஜா மலர்கள் கொண்ட சில செடிகளைக் கொண்டு வந்து, அசுத்தம் நிறைந்த குழியில் வைத்து, அதைச் சுற்றிலும் பசும்புல்லோடு கூடிய மண்ணைப் பரப்பி, மேல் பகுதியை மூடி வைத்தான் தெனாலிராமன்.
ஒரு நாள், அரசரிடம் சென்று, "ஓரிடத்தில் அழகான ரோஜாச் செடிகளைக் கண்டேன். ரோஜா மலர்களோ கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன! உங்களுக்கு ரோஜா மலர்களின் மீது பிரியமாயிற்றே, வந்து பாருங்கள்!" என்று அழைத்தான் தெனாலிராமன்.
அரசரும் தயங்காமல் உடனே அவனுடன் சென்றார். ரோஜா மலர்களைக் கண்டு, "அற்புதமான மலர்கள்!" என்று கூறி மகிழ்ந்தார். மலர்களைப் பறிக்க அருகில் சென்றார்.
அப்படியே அந்தக் குழியில் விழுந்துவிட்டார். இடுப்பு அளவு குழி! அரசால் எழுந்திருக்க முடியவில்லை.
"இராமா, என்னை வெளியே தூக்கி விடு!" என்றார் அரசர்.
"அரசே, சற்றுப் பொறுங்கள். கத்தி எடுத்து வருகிறேன்" என்றான் தெனாலிராமன்.
"எதற்காக?" என்று கேட்டார் அரசர்.
"அசுத்தமாகிவிட்ட பகுதிகளை வெட்டி விடுகிறேன். முன்பு நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே, நினைவிருக்கிறதா?" என்று கேட்டான் ராமா.
"இப்பொழுது தான் எனக்கு நினைவு வருகிறது! தவறான என் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறேன். அசுத்தமான பகுதியைத் தேய்த்துக் கழுவி விட்டால் போதும். அதை வெட்ட வேண்டியது இல்லை. மற்றவர்கள் பார்ப்பதற்கு முன் என்னை தூக்கி விடு!" என்று கேட்டுக்கொண்டார் அரசர்.
தெனாலிராமன் உடனே அரசரை தூக்கி விட்டான். அருகில் இருந்த தெனாலிராமன் வீட்டுக்குச் சென்று, அரசர் குளித்து உடை மாற்றிக்கொண்டார். அதற்குள் அரண்மனையிலிருந்து ராஜ உடைகள் வந்து சேர்ந்தன. அவற்றை அணிந்துகொண்டு அரசர் புறப்பட்டுச் சென்றார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது குட்டீஸ்களே?
தனக்கு வந்தால் தான் எதுவும் தெரியும். மற்றவர்களுக்கு என்றால் எதை வேண்டுமானாலும் கூறக்கூடாது என்பதுதானே? யோசிக்காமல் எதையும் கூறக்கூடாது என்பதனை இதன் மூலம் கற்றுக்கொண்டீர்கள் அல்லவா?