
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம் மயூரசர்மன் எனும் பக்தனிடம் கேட்ட தானமும், அதற்கு அந்த பக்தனின் நிலைப்பாட்டையும் தனது, 'வில்லிபாரதம்' சொற்பொழிவில் அழகாக விளக்கினார் நாகை முகுந்தன்.
''மயூரசர்மன் என்பவன் ஸ்ரீகிருஷ்ணரிடம் பரம பக்தி கொண்டிருந்தான். ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணர் அவனைப் பார்க்க வந்து சேர்ந்தார்.
'மயூரசர்மா! நான் ஒன்று கேட்பேன். கொடுப்பாயா?' என்று கேட்டார்.
'நீங்கள் என்ன கேட்டாலும் கொடுப்பேன்' என்றான் அவன்!
'உனது ஐந்து வயது மகன் எனக்கு வேண்டும். கொடுப்பாயா?'
'தருகிறேன்!'
'அவன் முழுதாக எனக்குத் தேவையில்லை. அவனது வலது பாகம் மட்டும் போதும்!'
'மனப்பூர்வமாகத் தருகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்!'
'சிறுவனை நிற்க வைத்து அவன் தலையில் ஒரு ரம்பத்தை வைத்து நீ ஒரு பக்கமும், உனது மனைவி ஒரு பக்கமும் பிடித்துக் கொண்டு அரிந்து தர வேண்டும்!'
'உங்கள் விருப்பப்படியே குறை இல்லாமல் செய்கிறோம்!'
'அவனை சரிபாதியாக நறுக்கி, வலது பாகத்தை மட்டும் எனக்குக் கொடுக்க வேண்டும்!'
'அப்படியே செய்கிறோம்!'
'அப்பொழுது நீயும் அழக்கூடாது. உன் மனைவியும் அழக் கூடாது!'
'அழ மாட்டோம்!'
'உன் மகனும் அழக்கூடாது!'
'ஒப்புக் கொள்கிறோம்!'
'இந்த நிபந்தனையின் பேரில்தான் நான் உனது மகனின் வலது பாகத்தை ஏற்றுக் கொள்வேன். இல்லையெனில் மாட்டேன்!'
'உங்கள் நிபந்தனைகளின்படியே நடக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அவர்கள் தங்கள் மகனைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அவனை நிற்க வைத்து நறுக்க ஆரம்பித்தார்கள். பெற்றோரின் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. ஆனால், சிறுவனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணன், 'என் நிபந்தனைகளின்படி நீங்கள் நடக்கவில்லை. அதனால் உனது சிறுவன் எனக்கு வேண்டாம்' என்றார்!
'நாங்கள் இருவரும் அழவே இல்லையே?' என்றான் மயூரசர்மன்!
'ஆனால், உனது மகனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறதே!'
அதைக்கேட்ட அந்தச் சிறுவன், 'ஸ்வாமி, என் உடலின் வலது பாகம் பண்ணிய புண்ணியத்தை, இடது பாகம் பண்ணவில்லையே என்றுதான் எனது இடது கண் அழுகிறது' என்றான்!
அதைக்கேட்ட ஸ்ரீகிருஷ்ணர், அந்தச் சிறுவனை கட்டித் தழுவிக்கொள்ள, அவன் முன் போல் ஆனான்" என்று, நாகை முகுந்தன் சொற்பொழிவாற்றியபோது, அந்த அரங்கமே ஆனந்தக் கண்ணீரில் மிதந்தது!
– ஆதினமிளகி, வீரசிகாமணி