காணாமல் போன அந்த 47 பேர்கள்!

காணாமல் போன அந்த 47 பேர்கள்!
Published on

சிறுகதை

துடுப்பதி ரகுநாதன்                                                ஓவியம் : தமிழ்

ந்தியா அந்த முகநூல் பக்கத்தை ரேவதியிடம் காட்டினாள்.

அதில் சந்தியா ரோஜாப் பூச் செடியின் அருகில்  ஒரு மலர்ந்த ரோஜாப் பூவில் தன் கன்னத்தை  உரசிக் கொண்டு நிற்கிறாள். அந்த செடியில் பூவுக்கு கீழே வரிசையாக சில மொட்டுகள்!

இன்று மலர்ந்த இந்த ரோஜா வாடி உதிரலாம்!

நாளை இன்னொரு  மொட்டு மலரத் தான் செய்யும்!

இந்தக் காதல் கூட அப்படித்தான்!

என்று ஒரு பதிவு போட்டிருந்தாள்.  அதற்கு 325 லைக்குகள்! 47 கமெண்ட்ஸ்கள்!

"சூப்பர்! சூப்பர்!"

"அருமை! அருமை!"

"புரட்சி கருத்து!"

" நீங்கள்தான் புரட்சிக் கவி!…"

"காதலுக்கு சரியான விளக்கம்!"

இப்படிப் போகிறது  நிறைய கமெண்ட்ஸ்!

இன்னும் சிலர்

"நீங்க கீர்த்தி சுரேஷ் மாதிரி இருக்கிறீர்கள்!"

"நீங்க சினிமாவுக்குப் போனால் நயன்தாராவுக்கு மார்க்கெட் போய்விடும்!" என்பது போல சில!

அவைகளைப் பார்க்கப் பார்க்க ரேவதிக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது!  கிராமத்தில் இருக்கும் பாட்டி அடிக்கடி சொல்லும் அந்த  பழமொழி நினைவுக்கு வந்தது!  'பருவத்தில் பன்னிக் குட்டி கூட அழகாகத்தான் இருக்கும்!' – என்று! அதை நினைத்து ரேவதி சிரித்துக் கொண்டாள்.

சந்தியாவுக்கு இருபது வயசு. வசதியான குடும்பம். நல்ல சாப்பாடு. திடமான உடற்கட்டு.  மாதம் ஒரு முறை பியூட்டி பார்லருக்குப் போய், அனைத்து வித்தைகளையும் செய்யச் சொல்லி தன்னை அழகுப் படுத்திக்கொள்வாள்.

அதன்பின் செல்போனில் விதவிதமாக போட்டோக்கள் எடுத்து தன் முகநூலில் பதிவிட்டு அதற்கு கீழே நாலு வரியில் கவிதை என்று தினசரி  எதையாவது  போடுவாள். அவள் எழுதுவது எல்லாம் கவிதையா என்று சந்தியாவுக்கே  தெரியாது! ஆனால் அதற்கு 300 லைக்குகள், 40, 50 கமெண்ட்ஸ் வரும்!  அவள் போல் ஒரு சிறந்த கவிதாயினி இன்று தமிழ் நாட்டில் இல்லை என்பதுபோல் அனைத்தும் பாராட்டாக இருக்கும்!

சந்தியாவும், ரேவதியும் ஒரே வங்கி கிளையில்  வேலை செய்கிறார்கள். ரேவதி கிராமத்துப் பெண். மலையாள நிறம். சுருக்கமாகச் சொல்வதானால் பழைய சினிமா நடிகை பத்மினியின் மறு பிறப்பு.

இருவரும் நல்ல தோழிகள். இருவரின் பொழுதுபோக்கு முகநூல் தான்! ஆனால் இருவரின் அணுகுமுறையும் நேர் எதிர் துருவங்களாக இருக்கும்!

ரேவதி தன் படத்தை இதுவரை முகநூலில் ஒரு முறைகூட போட்டதில்லை!  அவளுக்கு பக்தி, விரதம் போன்றவைகளில் அலாதியான ஈடுபாடு! லேடீஸ்  ஹாஸ்டலில் தங்கியிருக்கிறள் என்று பேர்தான்!

மாலை நேரத்தில் அவிநாசி ரோட்டில் இருக்கும் தண்டு மாரியம்மன் கோயிலில்  ஒருநாள்! மறுநாள் பெரிய கடைவீதியில் இருக்கும் கோனியம்மன் கோயிலில் ஒரு நாள்! வெள்ளி தவறாது ரேஸ் கோர்ஸில் இருக்கும் சாரதாம்பாள் கோயில்!

பார்க்கத்தான்  பழைய நடிகை பத்மினி மாதிரி! செயல்களில் எல்லாம் அவள் கிராமத்து பாட்டியேதான்! வாரத்திற்கு  மூன்று நாட்கள் விரதம் இருப்பாள்!

கல்லூரியில் காலடி வைத்தவுடன் இந்தக் காலத்து இளம் பெண்கள் எல்லாம் மேலை நாட்டு நாகரிகத்தில் மூழ்கி தலைகீழாக மாறி விடுகிறார்கள்! ஆனால் ரேவதியிடம் மட்டும் அதில் ஒரே ஒரு மாறுதல் தான்!

மற்ற இளம் பெண்களைப்போல அவளும் ஒரு ஸ்மார்ட் போன்  வைத்திருக்கிறாள். அவளுக்கும் முகநூலில் ஒரு கணக்கு உண்டு!

அவள் முகநூல் நட்புகளில் அவள் சொந்த பந்தம். உள்ளூர் தோழிகள்! கல்லூரியில் படித்த தோழிகள்  என்ற ஒரு சிலரே!

அந்தக்  காலத்தில் இருந்த கடிதத் தொடர்பை இப்பொழுது செல்போனில் அவள் வைத்திருக்கிறாள்! அவ்வளவுதான்!

நேரம் கிடைக்கும் பொழுது அவளும் பதிவு போடுவதுண்டு! சமீபத்தில் கோவை லட்சுமி நரசிம்மர் கோயிலை புதுப்பித்து வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் செய்தார்கள்!

லட்சுமி நரசிம்மர் ஸ்வாமி, மிக சக்தி வாய்ந்த சாமி. அவரை வேண்டி அசைவம் உண்ணாமல் வெள்ளி தவறாமல் விளக்கேற்றி வந்தால், நினைத்த காரியம் நடந்தே தீரும் என்பது ரேவதியின் நம்பிக்கை!

சூரியனைக் கண்ட பனி போல் அவள்  குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகள் அவள் வேண்டிய பொழுது   விலகி இருக்கிறது!  தன்னைப் போல் மற்றவர்களும் தங்கள் இக்கட்டுகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது அவள் ஆசை!

அவள் முகநூல் பதிவுகள் எல்லாம் பக்தியைப் பற்றித்தான் இருக்கும்! லட்சுமி நரசிம்மரை வேண்டி வெள்ளி தவறாது ரேவதி  விளக்கேற்றிய மூன்றே மாதங்களில் அவர் தந்தைக்கு வந்த கேன்சர் நோய் குணமாகி விட்டது!  அதனால் அவளுடைய முகநூல் ப்ரோபைல் பிக்சராக  லட்சுமி நரசிம்மர் படத்தைத்தான் இன்று வரை வைத்திருக்கிறாள்!

அவள் கஷ்டப்பட்டுப் போடும் பதிவுகளுக்கு பத்து லைக்குகள், இரண்டு மூன்று கமெண்ட்ஸ்கள் தான் வரும்! லைக்ஸ் போடுபவர்கள், கமெண்ட்ஸ் தருபவர்கள் எல்லாம் கிழம் கட்டைகளாகத்தானிருக்கும்!

சந்தியா விதவிதமான  தன் கவர்ச்சிப் படங்களைப் போட்டு அவள் எழுதும் கவிதைகளுக்கு நானூறு லைக்ஸ், ஐம்பது கமெண்ட்ஸ் பாராட்டி  வரும்!

அவள் ப்ரோபைலில் எப்பொழுதும் அவளுடைய கவர்ச்சிப் படம் இருக்கும். புதிய டிரஸ் வாங்கினால் உடனே அதைப் போட்டு ஒரு படம் எடுத்து ப்ரோபைல் படத்தை  மாற்றிவிடுவாள்!

சந்தியா தனக்கு வரும் லைக்ஸ், பாராட்டுகள் எல்லாம் பெருமையாக ரேவதியிடம் தினசரி சொல்வாள்.  அவளுக்கு முகநூலில் ஐயாயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள்! அவள் கருத்தை ஏற்று அவளை மதித்து நட்போடு தினசரி தொடர்பில் இருப்பவர்கள் மட்டும் 47 பேர்கள் என்று பெருமை அடித்துக் கொள்வாள்! அதோடு நிற்காமல் அன்று ரேவதியை  கிண்டல் செய்து மனம் புண்படும்படியும் பேசிவிட்டாள்!

ரேவதிக்கு சற்று கோபம் வந்து விட்டது!

"சந்தியா!… விபரம் தெரியாமல் பேசித் திரியாதே!… இந்த நட்பெல்லாம் வெறும் பொழுது போக்குக்குத்தான் பயன்படும்! நம் வாழ்க்கைக்கு ஒரு போதும் பயன்படாது!…"

"போடி!… முகநூலில் உனக்கு பிரண்ட்ஸ் அதிகம் இல்லை!… உன்னை பாராட்டுபவர்களும் இல்லை!… அதனால் என்னைப் பார்த்து உனக்குப் பொறாமை!…"

"அப்படியா!… நான் சொல்லற மாதிரி ஒரே ஒரு பதிவு  போட்டுவிட்டு பத்து நாட்கள் கழித்து… உன் ஃப்ரண்ட்ஸ் பற்றி அப்புறம் வந்து சொல்!…. நீ சொல்வதை எல்லாம் நான் கேட்கிறேன்!…" என்றாள் ரேவதி சற்று கோபமாக.

"சரியடி!… சொல்லு… நீ சொல்லற  மாதிரி ஒரு பதிவு போட்டுப் பார்க்கிறேன்!… என்னதான் ஆகும் என்று பார்க்கலாம்!…. "

" என் அன்பு முகநூல் நட்புகளே!…

உங்களுக்கு ஒரு  தாழ்மையான  வேண்டுகோள்!… நான் சென்ற வாரம் ஸ்கூட்டியில் போகும் பொழுது  எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடந்து விட்டது!… அதில் எனக்கு மூக்கு அடிபட்டு முகவாய் கிழிந்து விட்டது. மருத்துவமனையில்தான் இருக்கிறேன்……………. பிளாஸ்டிக்  சர்ஜரி மற்றும் காஸ்மெட்டிக் அறுவைச் சிகிட்சை நிபுணர் மனோகர் வந்து பார்த்தார்… நான் பழைய நிலைக்கு வரவேண்டுமானால்  ஒரு அறுவை சிகிட்சை செய்ய வேண்டும் என்கிறார்.. அதற்கு இரண்டு லட்சம் செலவு ஆகும் என்று சொல்கிறார்… நான் உறவுகளை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருவது உங்களுக்கே தெரியும்!…  அதனால் மருத்துவ மனையில் இருந்து கொண்டு பணம் புரட்ட முடியவில்லை! என் உறவுகளே எனக்கு நீங்கள் தானே?…  என் வங்கி சேமிப்பு கணக்கு எண் கொடுத்திருக்கிறேன்…உங்களால் முடிந்த தொகையை உடனே அந்தக் கணக்கில் வரவு கொடுங்கள்!… நான் வெளியில் வந்தவுடன்… முல்லை நகரில் என் பெயரில் இருக்கும் பிளாட்டை விற்று வட்டியோடு உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்தி விடுகிறேன்!..

என்றும் உங்கள் நட்பை உயிராக நினைக்கும் உங்கள் சந்தியா!…

என்று ஒரு பதிவு போடு… ஒரு வாரம் கழித்து உன் முகநூல் நட்புகளைப் பற்றி வந்து என்னிடம் சொல்லு!.."  என்றாள் ரேவதி சற்று கோபமாக!

அதேபோல் ஒரு பதிவை உடனே தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டாள் சந்தியா. ஒரு வாரம் போனதே தெரியவில்லை!

சந்தியாவுக்குத் தெரிந்து, ஒரு 47 பேர் இவள் பதிவைப் பார்த்த பத்தாவது நிமிஷத்தில் பதில் போட்டுவிடுவார்கள்! அதில் சில பேர் பாராட்டுப் பத்திரமே வாசித்திருப்பார்கள்! அந்த 47 பேர்களிடமிருந்து  ஒரு பதிவுகூட வராதது உள்ளபடியே சந்தியாவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது!

உடனே அந்த 47 பேர் முகநூல் பக்கத்திற்குப் போய் பிரண்ட் லிஷ்டைப் பார்த்தாள். அப்பொழுதுதான் தெரிந்தது எல்லோருமே அவளை 'அன்பிரண்ட்' செய்திருப்பது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com