இது தமிழுக்குக் கிடைத்த கெளரவம்

இது தமிழுக்குக் கிடைத்த கெளரவம்
Published on

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இ.பா.விற்கு ஒரு கெளரவம்

– மாலன்

சில தினங்களுக்கு முன் இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்வப்போது அவருடன் போனில் பேசுவது உண்டு. கடந்த வாரம் ஒருமுறை அப்படிப் பேசும் போது, நீ பேசுவது 'லெளட் ஸ்பீக்கரில்' கேட்பது போல் இரைச்சலாக இருக்கிறது. நேரில் வாயேன் என்றார். நாளை வருகிறேன் என்றேன். ஆனால் போக முடியவில்லை. வரவில்லை என்று தகவலும் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் போன் செய்து விட்டார். "வரேன்னியே" என்றார்.

நான் அவரைப் பார்க்கப் போன போது ஒரு ஆடும் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். எதிரே டிவி இருந்தது. ஆனால் அது அணைக்கப்பட்டிருந்தது. அருகில் ஒரு லாப்டாப். அதுவும் மூடி வைக்கப்பட்டிருந்தது. கைக்கு எட்டுகிற தூரத்தில் செல்போன் சீந்துவாரின்றி கிடந்தது. இ.பா. ஆழ்வார் பேட்டையில் ஒரு ஃபிளாட்டில் தனியாக வசிக்கிறார். நாம் தனியாக இருக்கும் போது பொழுதை எப்படிக் கடத்துகிறோம்? டிவி பார்த்து; அல்லது இணையத்தில் மேய்ந்து; அல்லது கை பேசியை நோண்டிக்கொண்டு. அல்லது படுத்துத் தூங்கி. ஆனால் இ.பா உட்கார்ந்த நிலையில் புத்தகம் படிக்கிறார். இ.பா வின் வயது 92!

புத்தகம் தாரா ஷகோ பற்றியது. தாரா ஷகோ ஔரங்கசீப்பின் அண்ணன். ஷாஜகானின் மூத்த மகன். அவர்தான் மொகலாயச் சக்ரவர்த்தியாகி இருக்க வேண்டியது. சிந்தனையில் ஔரங்கசீப்பிற்கு நேர் எதிர். ஔரங்கசீபை ஒரு Orthodox Muslim என்று சொல்லும் வரலாறு தாராஷாகோவை முற்போக்காளர் என்கிறது. சூஃபி தத்துவம், இந்து வேதாந்தம் இரண்டையும் இணைக்கும் 'இரு கடல்களின் கூடல்' ( The Confluence of the Two Seas)  என்ற நூலை எழுதியவர்.

என்னைப் பார்த்ததும் இ.பா. "மாலன்!" என்று உற்சாகமாகக் கூவி வரவேற்றார். 'பார்த்து எத்தனை வருஷமாச்சு!' என்றார். 'அப்படியே இருக்க, பிசிராந்தையார் இருந்தது போல" என்று புன்னகைத்தார்.( இவ்வளவு வயதாகியும் நரை இல்லாமல் இருக்கிறீர்களே என்று யாரோ புறநானுற்றில் பிசிராந்தையாரிடம் கேட்கிறார்கள். சிறந்த குணங்களைக் கொண்ட மனைவி, குழந்தைகள், அறம் அல்லாதவற்றைச் செய்யாத அரசன், கொள்கையின்படி வாழும் சான்றோர்கள் பலர் இருக்கும் ஊரில் வசிக்கும் எனக்கு எப்படி நரைக்கும் என்கிறார் பிசிராந்தையார்)

அவரது ஊரில் இருந்தது போன்ற அரசரோ, சான்றோர்களோ இந்த ஊரில் இல்லையே என்றேன். பேச்சு அரசியலை நோக்கித் திரும்பியது. 1970களில் இ.பா 'பரகால ஜீயர்' என்ற புனைப்பெயரில் கணையாழியில் அரசியல் விமர்சனங்கள் (அடேங்கப்பா என்ன பகடி, கேலி) எழுதி வந்தார். கணையாழி பற்றிய நினைவுகளில் இருவரும் சிறிது நேரம் திளைத்தோம்.

அந்தக் களிப்பில் உரையாடல் தில்லிக்குப் போனது. அங்கிருந்து போலந்திற்கு. இ.பா. சிலகாலம் போலந்து மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார்.

இ.பா போன்றவர்களிடம்தான் இவையெல்லாம் சாத்தியம். சங்க இலக்கியம் பற்றியும் பேசலாம், சமகால இலக்கியம் பற்றியும் பேசலாம். சரித்திரம் பேசலாம்.  ஔரங்கசீப் பற்றிப் பேசுவதைப் போல ஆழ்வார்களைப் பற்றியும் பேசலாம். அத்தனை பேச்சுக்கு நடுவில் ஜரிகை இழைபோல நயமான நகைச்சுவை இழை ஒன்று ஓடும்.

காரணம் இ.பா.வின் விரிந்த வாசிப்பு, சிந்தனை ஆழம். இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' என்ற நாவலுக்கு தி,ஜானகிராமன் முன்னுரை எழுதினார். அதில் தி,ஜா சொல்கிறார்; "1960க்குப் பிறகு அறிமுகமான சில முன்னணிப் படைப்பாசிரியர்களில்  இந்திரா பார்த்தர்சாரதிக்கே உரிய தனி வேகம் இது  அழுத்தமும் சிந்தனையாழமும் கலந்த வேகம். அபூர்வமான சேர்க்கை. சிந்தனை ஆழம் என்றால் படிப்பதற்கு இரும்புக் கடலையாக இருக்க  வேண்டிய அவசியமில்லை.சரளமாக வாசிப்பது கட்டாயம் கஷ்டமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.  இந்திரா பார்த்தசாரதியைப் படிக்கும் போது இது புரியும்"

அண்மையில் (மார்ச் 29 அன்று)  சாகித்ய அகாதெமி இந்திரா பார்த்தசாரதிக்கு ஃபெலோஷிப் அளித்து கெளரவிக்கிறது. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச கெளரவம் இது. 'இலக்கியத்தில் சாகா வரம் பெற்ற படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கெளரவம். எல்லா இந்திய மொழிகளுக்கும் சேர்த்து மொத்தம் 21 பேர் வரைதான் ஃபெல்லோவாக இருக்க முடியும். சாகித்ய அகாதெமியின் பொதுக்குழுதான் இந்த கெளரவத்திற்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். ஆர்.கே. நாராயண், குஷ்வந்த் சிங், தகழி சிவசங்கரன் பிள்ளை, சிவராம் காரந்த், எம்.டி. வாசுதேவன் நாயர், அம்ருதா ப்ரீதம் போன்ற ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்கே இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது. 54 ஆண்டுகளில் தமிழில் இந்த கெளரவம் பெற்றவர்கள் நான்கு பேர்தான். ராஜாஜி (1969), தெ.போ. மீனாட்சி சுந்தரம்(1975), கே.ஆர்.சீனிவாச ஐயங்கார்(1985), ஜெயகாந்தன் (1996). இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இ.பா. இந்த கெளரவம் பெறுகிறார்.

இந்த கெளரவம் பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்று இ.பாவைக் கேட்டேன். எனக்கு இந்த கெளரவம் அளிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி. அதைப் பெற நான் உயிருடன் இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

நச்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com