உக்ரைன் போரும் உள்நாட்டு விலைவாசியும்

உக்ரைன் போரும் உள்நாட்டு விலைவாசியும்
Published on

தலையங்கம்

ன்றைக்கு ஒட்டுமொத்த தேசமும் சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஒரு பிரச்னை விலைவாசி உயர்வு. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
கொரோனாப் பெருந்தொற்றினால் வீழ்ந்த பொருளாதாரம் மெல்ல நிமிர்ந்த நிலையில் அது தொடர முடியாமல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் யுத்தம், உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை விளைவித்துள்ளது. அதன் எதிரொலியாக நம் நாட்டில் பணவீக்கத்தின் காரணமாக, அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துவகையான பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உணவுப்பொருட்கள், சமையல் எண்ணெய் மட்டுமல்லாது, காய்கறிகள், பழ வகைகள், மாமிசம், மளிகைப் பொருட்கள் என்று அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்தபடியே உள்ளது.

இந்நிலையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு இதற்கு முக்கியக் காரணம். இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் விலை உயர்வையும் கீழிறங்கிக்கொண்டிருக்கும் பண மதிப்பையும் இந்தியா எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சில்லறை விற்பனை பணவீக்கத்துக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச அளவு இது; மார்ச் 2026 வரையில் 4% என்ற அளவிலேயே நிலையாகப் பராமரிக்க வேண்டும். அதிகபட்சமாக 2% கூடவோ குறையவோ செய்யலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் கனவாக ஆகிவிடுமோ அன்ற அச்சம் எழுகின்றது.
உக்ரைன் –ரஷ்யப் போரினால் மற்ற நாடுகளைவிட மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் நாம்தான். இதற்குக் காரணம், இந்தியாவுக்கு இறக்குமதியாகும் சூரியகாந்தி எண்ணெயில் ஏறக்குறைய 90% ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிலிருந்து பெறப்பட்டுவந்தது. ஆக, இந்தப் போரின் விளைவு எப்படியிருந்தாலும் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது நாம் தான்.

அதிகரித்துவரும் விலைவாசியானது நுகர்வு, முதலீடு இரண்டிலுமே நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தெளிவாக வெளிப்படையாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
மாறாக, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களைப் போலத் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் இந்த நேரத்தில் குறைக்கப்பட்டிருப்பது மக்களிடம் பெரும் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com