கற்றுணர்தல்

கற்றுணர்தல்
Published on

ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  – 14

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

சீமைத்தம்புரானின் வயலில் 'கவலை'யைப் பொருத்திய தினம். கவலையைப் பொருத்த வந்தவர்களுக்கும், நிலத்தில் வேலை செய்பவர்களுக்கும் மதியச் சாப்பாடு தம்புரானின் வீட்டில் தயாராக இருந்தது. முதலாளிக்காக நீர் நாயின் மலத்தைக்கூட கொண்டுவரத் தயாராயிருந்த பொந்தன் மாடன் சீமைத்தம்புரானின் கூடவே ஓடி நடந்து எல்லா வேலைகளையும்  வலிய செய்தபடி இருந்தான். மாடனின் மனதில் மழையடிக்கச் செய்திருந்த கார்த்துவும் விருந்திற்கு வந்திருந்தாள். 19 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்தான் இது. அத்தனை வருடங்களுக்கு முன்பு என்பதால் இப்போது போல உடை உடுத்துவதிலும், பழகுவதிலும் நாகரிகம் தெரியாதவர்களாக இருந்தார்கள். நிலத்திலும், காட்டிலும், மலையிலும் வாழ்பவர்களைத்தான் அன்று கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். 'பொந்தன் மாடன்' என்ற படம் பார்த்தவர்களுக்கு இது பற்றி தெரிந்து கொள்ளமுடியும். அந்த படத்திற்கான விருந்துக்காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

உடன் இருப்பது நடிகனான மம்முட்டி என்பது வேலைக்காரர்களாக நடிக்க வந்தவர்களுக்குத் தெரியாது.  அவர்கள் இந்தக் காட்சியின் தனித்தன்மைக்காக மலைக் காட்டிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். உண்மையைச் சொல்லப் போனால் அவர்களுடையது நடிப்பல்ல, வாழ்க்கை. தினமும் அவர்கள் செய்யும் கூலி வேலையையும், வயல் வேலையையும் இன்று நகரத்தில் செய்கிறார்கள். அதற்கும் கூலி உண்டு, இதற்கும் கூலிஉண்டு. காமிரா இருப்பது அவர்களுக்கு பெரிய விஷயமில்லை. அவர்களில் யாரும் தங்கள் வாழ்க்கையில் சினிமா பார்த்ததில்லை. அதனாலேயே அவர்களுக்கு என்னையோ உடன் இருப்பவர்களையோ தெரிய வாய்ப்பில்லை. யாரென்று தெரியாததால் என்னோடு அவர்களுக்கு என் மீது ப்ரத்யேக மரியாதையோ, மரியாதைக்குறைவோ இல்லை. நம்மில் ஒருவன் என்ற நிலை மட்டுமே. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு யாரும் அங்கு வரவில்லை. வழக்கமான கூலியைவிடக் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும் என்பதாலேயே வந்திருக்கிறார்கள். பலரின் அன்றாட வாழ்வு துயரங்களை உள்ளடக்கியதாகவே இருந்தது.

படப்பிடிப்பில், 'ஸ்டார்ட்', 'கட்' என்பதெல்லாம் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இலை போட்டு காய்கறி பொரியல்களும், சாதமும் பறிமாறியவுடன் அவர்கள் சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். காமிராவையும் லைட்டையும் சரிசெய்து 'ஷாட்' தொடங்குவதற்குள் பலர் முதல் சுற்றில் பரிமாறிய சாப்பாட்டைச் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். படம் எடுக்க மீண்டும் பறிமாற வேண்டும். 'ஸ்டார்ட்' சொன்ன பிறகே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் என்று பலமுறை அவர்களிடம் சொல்லியாயிற்று. ஆனால் உணவு பறிமாறப்பட்டவுடன் சாப்பிட தொடங்கிவிடுவார்கள். நாங்கள் சொல்வதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

ஷாட் ஆரம்பிக்கும்வரை பரிமாறாமல் இருந்தபோது பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என்னிடம் கேட்டார்.

"போட்டது தீந்திடுச்சா?"

விருந்தைப் பற்றி, அதன் சுவையைப் பற்றி அவர்கள் பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள். 'ஸ்டார்ட்' என்று சொன்னவுடன் காட்சியைப் படமாக்கிக்  கொண்டிருந்தார்கள். என் இலையில் அவியல் தீர்ந்து போயிருந்தது. என்னுடன் அந்தக் காட்சியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரியவர் தான் சாப்பிடும் கையாலேயே அவருடைய  இலையிலிருந்து அவியலை வாரி என் இலையில் வைத்தார். நானும் எந்த மனச்சங்கடமுமின்றி முழுவதையும் ஷூட்டிங் முடிவதற்குள் சாப்பிட்டிருந்தேன்.

என் இலையில் அவியலை வாரி வைப்பதற்கான அவரின் மனநிலை எதுவென யோசிக்கிறேன். அவர்களில் ஒருவனாய் என்னைப் பார்த்திருக்கிறார். அது என் நடிப்பின் உச்சமா, இல்லை நான் ஏற்றிருந்த பாத்திரப் பொருத்தமா என்று எனக்குத் தெரியாது.

அவருக்கு மனதில் எந்தக் களங்கமும் இல்லாதிருந்ததால் உடன் இருக்கும் ஆளைப் பற்றிய சந்தேகமே அவருக்கு இல்லை. எங்கிருந்தோ அவர்களைப் போல வந்த ஒரு நாடோடி என்று மட்டுமே என்னை நினைத்திருக்கலாம்.

அவர் தன் இலையிலிருந்து எடுத்து வைத்த அவியல் என் நடிப்பிற்குக் கிடைத்த வெகுமதியாகவே நான் கருதுகிறேன். பொந்தன் மாடனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நான் இதை நினைப்பதுண்டு. அந்த அவியலை நான் சாப்பிட்டது ருசியாலோ பசியாலோ அல்ல. அவருடைய மனதின் களங்கமற்ற தூய்மையில் கசிந்த அன்பில் நானும் கரைந்திருந்தேன்.

சுத்தமும், நாகரிகம் கற்றவர்கள் கூடி உண்ணும் உணவு மேஜையில் நாம் இதை அனுமதித்திருப்போமா? அப்படியே எடுத்து வைத்தாலும் நாம் சாப்பிடுவோமா?

ஜாதியும், மதமும், வர்ணமும், வர்க்கமும், சுத்தமும், சுத்தமின்மையும் அந்த மனிதனின் களங்கமின்மைக்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போயிருந்தது.  இப்படியான களங்கமில்லாத மனங்களால்தான் எல்லா மதில்களையும், எல்லைகளையும், கோடுகளையும் இல்லாமலாக்க முடியும்.

அதனினும் மேலாக நாம் எப்போது பங்கிட்டு உண்ணக் கற்றுக் கொள்வது? கேட்காமலேயே தேவைக் கருதி, பார்த்தவுடனேயே அவர்கள் பங்கு வைக்கிறார்கள். தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்பது பற்றியெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. பக்கத்திலிருப்பவனின் இலையில் உணவில்லாதபொழுது அவர்களால் சாப்பிட முடியவில்லை.

அன்பைப் பகிர்ந்து கொடுக்கக்கூட மனம் பதறும் இக்கால கட்டத்தில் நாகரிகமற்றவன் என்று நாம் கருதும் பொந்தன் மாடனின் தோழனிடமிருந்து கற்று அவர்களைப் போல பகிர்ந்துண்ணப் பழகலாம்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com