அறிவாளியானவன், சொர்க்கத்தையோ, நரகத்தையோ விரும்ப மாட்டான்.

அறிவாளியானவன், சொர்க்கத்தையோ, நரகத்தையோ விரும்ப மாட்டான்.
Published on

உத்தவ கீதை – 14

டி.வி. ராதாகிருஷ்ணன்

(ஞானயோகம், கர்மயோகம்,பக்தி யோகம்)

லவித வர்ணங்கள், பலவித ஆஸ்ரமங்கள், அவைகளின் தர்மங்கள், இதைச் செய்யுங்கள்… இதைச் செய்யாதீர்கள்… என்று வேதங்கள் பலவாறு கூறுகின்றன. அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.

எனக்கு முக்தி அடைய எளிய வழியைக் கூறுங்கள் என்று உத்தவர் கேட்க,  கிருஷ்ணன் சொல்லத் தொடங்கினார்..

முக்தி அடைய அறிவு மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் என்று நான் மூன்று மார்க்கங்களை ஏற்படுத்தியுள்ளேன்.

நீங்கள் கேள்வி எழுப்பிய பிரச்னையுள்ள குழப்பத்தை நீக்கவே இந்த மார்க்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.

முக்தி அடைய உதவும் பாதைகளில் வேறுபாடு உண்டு. ஆனால் முக்தி அடைந்த பின் வேறுபாடுகள் கிடையாது.

ஞானமார்க்கம்… கர்மம் செய்வதில் மனம் சலித்துப் போனவர்களுக்கும், கர்மத்தைத் துறந்தவர்களுக்கும் ஏற்பட்டது.

கர்மத்திலும், அதன் பலனிலும் பற்றுள்ளவர்களுக்குக் கர்ம மார்க்கம்

என்னிடத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கும், கர்மத்தில் வெறுப்பில்லாதவர்களுக்கும் பக்தி மார்க்கம்.

ஒருவரின் மனம் கர்மத்தில் சலிப்படையாதவரை சாஸ்திரங்கள், வேதத்தில்  கூறப்பட்ட கர்மங்களைச் செய்ய வேண்டும்.

என்னிடம் பக்தியும், வேறு எதிலும் ஈடுபாடுமில்லாதவனுக்கு பக்தி மார்க்கமே சிறந்தது.

கர்மத்தின் பலன்களில் பற்றில்லாமல் செய்பவன், தீமைகள் செய்யவில்லை என்றால் சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமாட்டான்.

அப்படிப்பட்டவன் பாபமற்றவனாகி, தூயவனாகி, ஞானம் பெற்று, பக்தி மார்க்கத்தில் என்னை அடையலாம்.

நரகத்தில் உள்ளவர்களும்,சொர்க்கத்தில் உள்ளவர்களும் இந்த உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள். இதற்குக் காரணம், முக்தி அடைய ஞானத்தையும், பக்தியையும்  பெற இந்த உலக வாழ்க்கையே சிறந்தது. ஆகையால் அறிவாளியானவன், சொர்க்கத்தையோ, நரகத்தையோ விரும்ப மாட்டான். இந்த உலக வாழ்க்கையையும் விரும்ப மாட்டான்.

இந்த உண்மையை உணர்ந்து மிகக் கவனமாக இந்த உயிர் உடலினின்று பிரியும் முன் இந்த உடல் முக்திக்கு வழிகாட்டும் என்பதை உணர்ந்து முக்திக்கு முயற்சிக்க வேண்டும்.

குருவியானது, தான் கூடுகட்டிய மரம் வெட்டப்படும் போது, கூட்டின் மீது பற்று நீங்கிப் பறந்து போகும். அதுபோல பக்தனும் இந்த உயிர் நீங்கும் போது உடல் நீக்கிப் பற்றில்லாமல் உயிர்நீக்க வேண்டும்.

மிகக் கஷ்டப்பட்டு இந்த 'உடல்' என்ற படகை, 'குரு' என்ற மாலுமியின் துணையோடும், 'காற்று' என்ற இறைவனின் அருளாலும், 'சம்சாரம்' என்ற (பிறப்பு / இறப்பு என மாறிமாறி வரும் சூழல்) கடலைக் கடக்க வேண்டும்.

செய்யும் செயல்களில், மனம் சலிப்படையும் போது, யோகியானவன், என்மீது பக்தி வைத்து இந்திரியங்களை அடக்கி, ஆன்மாவின் மீது என்னைத் தியானித்துத் தியானம் செய்ய வேண்டும்.

எப்படி, புதிய குதிரையை, அதன் மீது சவாரி செய்ய பழக்கப்படுத்தப்படுகிறதோ ,அப்படி மனத்தை அடக்க பயிற்சி செய்ய வேண்டும். உலகிலுள்ள பொருள்களின் தோற்றம், இருப்பு, மறைவு போன்றவற்றில் மனத்தைச் செலுத்தி பற்றுகள் நீங்கி மனம் அமைதி பெற வேண்டும்.

பின்பு, எல்லாவற்றுக்கும் மூல காரணமாகிய இறைவனைத் தியானிக்க வேண்டும். செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை (இயம், நியமம்)என்ற யோக மார்க்கத்தில் கூறியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பக்தி மார்க்கத்தில் என்னை நினைத்து தியானம் செய்யும்போது மனதிலுள்ள ஆசைகள் அழிந்துவிடும்.

மனத்தில் நானே நிலைத்திருப்பேன். இம்முறையில் மனத்திலுள்ள முடிச்சுகள் தானாகவே அவிழ்ந்துவிடும். சந்தேகங்களும்,சஞ்சலமும் நீங்கும். பூர்வ ஜென்மங்களின் செயல்வினைகள் (பிராப்தகர்மா) அழிந்து விடும்.

ஆகையால், ஞானயோகமும், கர்மயோகமும், பக்தி யோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு, என்னையே தியானம்  செய்பவர்களுக்குப் பயனற்றவை. பற்றின்மை, தவம் செய்தல், தர்மம் செய்தல், என்று எல்லா வழிகளிலும் கிடைக்கும் பலன்கள் எளிதாக என்மீது பக்தி செலுத்துபவனுக்குக் கிடைக்கும். பக்தன் விரும்பும் முக்தியும் எளிதில் கிட்டும்.

என்மீது மனத்தைச் செலுத்திய என் பக்தர்கள் வேறு எதையும் விரும்ப மாட்டார்கள். அவன் என்னையே அடைவான். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுச் செயல்படுபவர்களின் செயல்களில் குற்றம், குறைகளிருந்தாலும் அவர்கள் என்னை நினைத்துச் செயல்படுவதால் , அந்தப் பக்தர்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. காரணம் அவரின் எண்ணங்களும் செயல்களும் யாவையும் எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.

அப்படிப்பட்டவர்கள் என்னை நினைத்துத் தியானித்து என்னையே (பிரம்மத்தையே) அடைகிறார்கள்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com