காகிதக் கனவுகள் 

காகிதக் கனவுகள் 
Published on

– ரமணன்

ண்மைக்காலமாக தமிழக முதல்வர் வெளியிடும் பல அறிக்கைகளும்,
பங்குகொள்ளும் தொடக்க விழாக்களும் கல்வி குறித்துத்தான் அதிகமாயிருக்கிறது. நாட்டிலேயே  கல்வியில் தமிழ்நாடு முன்னிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாநில கல்விக்கொள்கையை உருவாக்க, வல்லுநர்கள், அறிஞர்கள் குழுவை அமைத்திருக்கிறார்.  அவர் அறிவித்திருக்கும்  "நான் முதல்வன்" "கல்லூரி கனவு" போன்ற பல திட்டங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு  விளம்பரங்களுடன் அரசு விழாவாக நடைபெறுகிறது, அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்குகொள்கிறார்கள். மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மை நிலையென்ன?

கடந்த  வாரம்  ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. அதில் மாணவர்கள் பலரின் மதிப்பெண்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவற்றில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் போன்ற பாடங்களில் இன்டர்னல், பிராக்டிகல் இரண்டிலும் எல்லாருக்குமே முழு மதிப்பெண்கள் கிடைத்திருந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு  நல்ல செய்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படும் பள்ளிகளில் இது சாத்தியம் தான். ஆனால், 'தியரி' என்று சொல்லப்படும் முக்கிய பாடப் பகுதியில் மிகக் குறைவான மதிப்பெண்கள் வாங்கியிருக்கும் மாணவர்களுக்கும் இந்த மதிப்பெண்கள்  முழு அளவில் வழங்கப்பட்டிருக்கிறது.  அதாவது, இன்டர்னலில் 10, பிராக்டிகலில் 20. ஆக இதிலேயே முப்பது கிடைத்து விட்டது. தியரியில் வெறும் 15 மதிப்பெண்கள் கிடைத்தால் போதும், பாஸ் ஆகி விடலாம்.. இப்படிப் பல மாணவர்கள்  தேர்வாகியிருக்கிறார்கள்.  இந்த   நிலையைப் பார்த்து அதிர்ந்துபோனேன். முதலில்  மனதில் எழுந்த கேள்வி  எல்லா மாணவர்களுக்கும் பிராக்டிகலில் முழு மதிப்பெண்கள் தரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக  அவிக்கப்பட்டிருக்கிறதா?

கடந்த இரண்டாண்டுகளாக  கொரோனா நோய்தொற்றால் கல்வி நிலையங்கள் இயங்க முடியாத சுழலில்  ஆன்லைன் வகுப்புகளில் சரிவரப் பங்கு பெறமுடியாத நிலையில், கீழ் வகுப்புத் தேர்வுகளில் தோல்வி அடைந்தால் வீட்டில் படிக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள், அதனால், இடைநிற்றல் அதிகமாகி விடும் போன்ற காரணங்களைச் சொல்லி ஆல்பாஸ் முறையில் எல்லா மாணவர்களையும்  அடுத்த வகுப்புக்கு அனுப்பினார்கள். இதையாவது அந்தக் காலகட்டச் சூழ்நிலையைக்கருதி  அரை மனதோடுவது ஏற்கலாம்.

ஆனால், இப்படி  அறிவியல் பாடங்களில் தியரியில் வெறும் ஐந்து-பத்து மதிப்பெண்களைப் பெற்றவர்கள்  40-45 மதிப்பெண்களுடன் பார்டரில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் எப்படிக் கல்லூரியில் மேற்கொண்டு படிக்க முடியும்? அடிப்படையே சரியில்லாதபோது என்ஜினீயரிங் போன்ற துறைகளை எப்படி எதிர்கொள்ள முடியும்?

இந்த மாணவர்கள்  கல்விக்கு மிகவும் சிரமப்படுகிற,  பின்தங்கிய, வசதிகளற்ற, மலை பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கிற  சிறு நகரங்களில் வாழும் மத்தியத்தரக் குடும்பத்து மாணவர்கள்.  தியரியில் வெறும் 10 மதிப்பெண் வாங்கும் ஒரு மாணவன் எப்படி பிராக்டிகல் என்ற செய்முறைத் தேர்வில் முழு மதிப்பெண் பெற முடியும்?  என்று  அந்த மதிப்பெண்களை வாரி வழங்கியிருக்கும் ஆசிரியர்கள் சிந்தித்திருக்க  மாட்டார்களா?

கல்லூரி கல்வி பெருவணிகமாகிப் போன  இன்றைய  சூழலில் கல்லூரிகளிலும்  பொருளாதார பலமிருந்தால்  பொறியிற்கல்லூரிகளிலும்  கூட இந்த மாணவர்கள்  சேருவார்கள். இவர்களால் அந்த வகுப்புகளில்  படிக்க முடியுமா?  என்பதை விட  நன்கொடையும் கல்லூரி கட்டணத்தையும் ஒழுங்காக  கட்ட முடியுமா? என்பது தான்  அம்மாதிரி கல்லூரி நிர்வாகங்களின் கவலையாயிருக்கும்.

பிராக்டிகல்ல எப்படியும் டீச்சர் 20 மார்க் போட்டுடுவாங்க. இன்டர்னலில் 10 கிடைச்சுடும். படிச்சு எழுதறதுல பத்து மார்க் வாங்கினாலும் போதும் பாஸ் ஆகிடலாம் என்கிற துணிவு நம்  மாணவர்களுக்கு வருவது  கல்வியில், வாழ்க்கையில் அவர்களது எதிர்காலத்துக்கு  ஆபத்தாகிவிடாதா?

இம்மாதிரி  மதிப்பெண்கள் வழங்குவதின் மூலம் 'மாணவர்களுக்கு உதவுகிறோம்'  என்ற ஆசிரியர்கள் நினைத்துச்செய்திருந்தால் அது தவறு.  அந்த ஆசிரியர்கள்  செய்திருப்பது உதவி அல்ல. மாறாக  கற்றல் திறன் இல்லாத மாணவர்களை கல்விகளத்தில்  அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி  அவன் அங்குத்  தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க வழிசெய்கிறீர்கள். அந்தத் தோல்விகள் மாணவர்களின் எதிர்காலத்தில் எதிரொலிக்கும்.

அண்மையில். வெளியாயிருக்கும் தரவுகளின்படி மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சுற்றுச்சூழலியல், சமூகவியல் என்ற அனைத்து பாடத்திலும் தேசிய சராசரியைவிடப் பன்மடங்கு குறைவாகவே தமிழ்நாட்டு மாணாக்கர்கள் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இது மிகவும் கவலைக்குரிய அம்சம். ஒரு பக்கம் தமிழ் நாட்டின் சாதனைகள் பற்றித் தொடர்ந்து பேசும் அதே நேரம் மறுபக்கம் இப்படிப்பட்ட நிலை வருவது குறித்து ஒரு சமூகமாக நாம் வருத்தம் கொள்ள வேண்டும். கூடவே நமது மாநில அரசும் இது குறித்து ஆய்வு செய்து நிலைமையை சீரமைக்க தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கல்லூரிக்கனவு திட்டத்தை அறிவித்திருக்கும் முதலமைச்சருக்கு  இப்படியொரு நிலை இருப்பது தெரியுமா? துறை அதிகாரிகளும், கல்வியாளர்களும் அவருடைய கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது  அவர்களின்  கடமையில்லையா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com