வித்யா சுப்ரமணியம்.நாடகக்கலை என்பது தொன்றுதொட்டு போற்றப்பட்டு வரும் ஒரு கலை. அன்றைய திரையுலக ஜாம்பவான்கள் பலரும் நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு அறிமுகமானவர்கள்தான். நாடக அரங்கேற்றம் என்பது எளிதான ஒன்றல்ல. அரங்கத்தில் அமர்ந்து காண்பவர்கள் முன்னிலையில் மேடையில் நடிகர்கள் வசனம் பேசி, முகபாவம் காட்டி எவ்வித பிழையுமின்றி நடிக்க வேண்டும். நடிப்பு தவிர மற்ற எத்தனையோ விஷயங்களையும் மேடை நாடகம் போடுபவர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். காட்சிகளுக்கேற்ற, உடைகள், காட்சிகளுக்கான பின்னணி திரைச்சீலைகள் மாற்றுதல், காட்சிகளுக்கேற்ப, ஒளி, ஒலியமைப்பு, இசையமைப்பு என்று எல்லாமே இரண்டரை மணிநேரம் நேரலையில் நிகழ்த்த வேண்டும். ஒரு சிறு விஷயம் தவறினாலும் சீரியஸான காட்சி சிரிப்பிற்குரியதாகிவிடும்..எத்தனையோ சிறந்த மேடை நாடகங்கள் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெற்றியடைந்திருக்கிறது. சரித்திர, புராண நாடகங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் மறைந்த நடிகர்திரு ஆர்.எஸ். மனோகர்தான். சரித்திர, இதிகாச நாடகங்களை மேடை நாடகமாக்குவதென்பது மிகவும் சவாலான ஒன்று. தந்திரக் காட்சியமைப்புகளில் ஆர்.எஸ்.மனோகர் அவர்கள் மேடையில் ஒரு மாயா ஜாலமே செய்வார். அதைக் காணவே அவரது நாடகங்களுக்கு மக்கள் ஆர்வமாகச் செல்வார்கள்..பின்னர் திரைப்படங்களைக் காண்பதில் மக்களின் ஆர்வம் திசை திரும்பியபின் மேடை நாடகங்களின் நிலை நலிந்துகொண்டே வந்தது. நாடகக் கலையே நசிந்து விடுமோ என்று கலைஞர்கள் வருந்திய நிலையும் இருந்தது. ஆனால், இன்றளவும் நாடகக்கலை மறைந்துவிடவில்லை. மக்கள் மீண்டும் நாடங்கள் காண்பதில் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கிறார்கள்..தாரிணி கோமல் அவர்கள் எழுதி இயக்கிய இதிகாச நாடகம்தான் திரௌபதி. நாரதகான சபாவின் அரங்கம் நிரம்பியிருந்தது. பிரபலங்கள் பலரின் முகம் கண்ணில்பட்டது. திரௌபதி அம்மன் கோயில் விழாவில் அரவான் பலியிடப்படுவதிலிருந்து நாடகம் துவங்குகிறது. திரௌபதியின் பிறப்பிலிருந்து, அவளது சபதம் நிறைவேறி தன் கூந்தலை முடியும் வரையான பகுதியே நாடகமாக்கப்பட்டுள்ளது..எல்லோருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் மகாபாரதம் எப்போதும் எவருக்கும் அலுப்பைத் தராது. எத்தனைமுறை வேண்டுமானாலும் எந்த வடிவில் வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் நம்மைக் காணத் தூண்டிக் கொண்டிருக்கும்..அன்றைய காலங்களில் புராண அல்லது சரித்திர நாடகங்களுக்கான பின்புலக் காட்சிகளுக்காக அவர்கள் பலவித சிரமங்களை மேற்கொண்டிருப்பதை அறிந்திருக்கிறேன். இன்று தொழில்நுட்பங்கள் அபாரமாக வளர்ந்துவிட்டதால் இப்போது அந்த சிரமங்கள் இல்லை. மேடையின் பின்புறமுள்ள எல்இடி திரையில் பளிச்சென காட்சிக்கான பின்புலங்கள் விரிகின்றன. திரௌபதியின் அவதாரக் காட்சியே அசத்துகிறது. அந்த ஹோமப் புகையும், அதன் பின்புலத்தில் தெரியும் அடர்ந்த வனமும், ஹோமத் தீயிலிருந்து திரௌபதி தோன்றுவதும், நாம் காண்பது மேடை நாடகம்தானா என்கிற பிரமிப்பை ஏற்படுத்துகிறது..எந்தவொரு இதிகாச, புராண பெண்களும் திரௌபதி அளவுக்கு கஷ்டப்படவில்லை என்பதே உண்மை. திரௌபதியின் வாழ்க்கை எவரையும் கலங்க வைக்கும். சுயம்வரத்தில் அர்ஜுனனால் வெல்லப்பட்ட விநாடியிலிருந்து ஆரம்பிக்கிறது அவளது அவல வாழ்வு. அர்ஜுனனால் வெல்லப்பட்டவளை ஐவருக்கு மனைவியாக்குகிறது அவளது முன்ஜென்ம விதி. அதன்பின்னர் அவள் பட்ட கஷ்டங்களுக்கு அளவேயில்லை. இந்த அவலங்களையெல்லாம் நம் கண்கள் கலங்குமளவுக்கு அற்புதமாக நாடகமாக்கியிருக்கிறார் தாரிணி கோமல்..தாரிணியின் திரைக்கதைக்கு மிக அருமையாக வசனங்கள் எழுதியிருப்பது திரு சதீஷ்குமார். பாரதியின் பாஞ்சாலி சபதத்திற்கு இணையாக கதாபாத்திரங்கள் பேசும் தமிழும் கவித்துவமாக அமைந்திருக்கிறது. அவரது இனிய செந்தமிழை, நடிகர்களும் சிறிதும் பிழையின்றி உச்சரித்து அற்புதமாக நடித்துள்ளனர். இப்படிப்பட்ட கலப்படமற்ற தமிழைக் கேட்பது ஆனந்தம் தருகிறது. பின்னணியில் இசைக்கவி ரமணனின் குரலில் பாரதியே வந்து பாஞ்சாலி சபதக் கவிதைகளைக் கூறுகிறாற்போலத் தோன்றியது. ராஜ்குமார் பாரதியின் இசை குறித்து பாராட்ட வார்த்தைகளில்லை..துரியோதனனாக நடித்தவரும், சகுனியாக நடித்தவரும் ஒவ்வொரு காட்சியிலும் வாங்கிய கைதட்டல்களே அவர்களது நடிப்புக்கு சான்று. பரதநாட்டியக் கலைஞர் திரு பாலகுருநாதன் ஸ்ரீகிருஷ்ணராகவே மாறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது கண்களும் புன்னகையும், உடல்மொழியும், வசனகர்த்தா எழுதாத வசனங்களையும் பேசின. முக்கியமான காட்சிகளில் அவர் தனது இரண்டு குதிக்கால்களையும் தரையிலிருந்து உயர்த்தி மெல்ல உயர்ந்தது, அசத்தலான, ஒருவித தெய்வீக உணர்வைக் காண்பவர்களுக்கு ஏற்படுத்தியது. இவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் கரவொலியால் நிரம்பியது அரங்கம்..அடுத்து திரௌபதியாக நடித்த கிருத்திகா சூரஜித். யாக நெருப்பில் தோன்றுவதிலிருந்து, கூந்தல் முடிந்த பிறகு கடைசி காட்சியில் திரௌபதி அம்மனாக காட்சியளிக்கும் வரை திரௌபதியின் ஆன்மா இவருக்குள் புகுந்துவிட்டதோ என்று தோன்றுமளவுக்கு திரௌபதியாகவே வாழ்ந்திருந்தார். நாட்டியக் கலைஞர் என்பதால் அழகாக ஆடுகிறார். அதேநேரம் வாள் வீச்சிலும் தான் சளைத்தவளில்லை என்பது போலிருந்தது லாவகமாக அவர் வாள்பயிற்சி செய்தவிதம் ..சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தபின், துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்துவரும் காட்சியில், மேடையிலிருந்து ஒருபுறமாக இறங்கி அரங்கத்தின் வழியாக அவளை மீண்டும் மேடைக்கு இழுத்துச்சென்றதைக் கண்டதும் அது நாடகம் என்பது மறந்து என் கண்களில் கண்ணீர் பெருகிற்று. அந்தக் கண்ணீர் ஒரு யுகம் பின்னோக்கிச் சென்று அந்த திரௌபதியை சேர்ந்திருக்கும்..அந்த மானபங்க காட்சியில் கிருஷ்ணனின் கரத்திலிருந்து புடைவைகள் பெருகிவரும் அந்த தந்திரக் காட்சியும், அதன் ஒளி ஒலியமைப்பும் ஏ.கிளாஸ்! அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது. மகாபாரதத்தில் தர்மயுத்தம் என்பது மண்ணுக்காக மட்டும் நடக்கவில்லை. அது திரௌபதி என்ற பெண்ணிற்காகவும், அவளது சபதம் நிறைவேறவும்கூட நடத்தப்பட்டது. அதன் சூத்திரதாரி வேறு யாருமில்லை கிருஷ்ணனேதான்..இந்த நாடகம் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரையிலும் மட்டுமல்லாது, அதன் பிறகும் தாரிணி கோமல் நடிகர்களையும், அரங்கிற்கு பின்னால் உழைத்தவர்களையும் மேடையில் அறிமுகப்படுத்தியபோதும் இடைவிடாது ஒலித்தது கரகோஷம். இதுவே நாடகத்தின் வெற்றி..இது தனிப்பட்ட ஒருவரின் வெற்றியல்ல. ஒரு சிறந்த நாடகக்குழுவின் வெற்றி. இசையமைத்த ராஜ்குமார் பாரதியில் துவங்கி, இசைக்கவி ரமணன், மற்றும் அரங்க வடிவமைப்பாளர்கள், அத்தனை நடிகர்களுக்குமான ஆடைகள் வடிவமைத்தவர், ஆபரணங்கள் தேர்வு செய்தவர், அனைத்து நடிகர்கள், வசனகர்த்தா, தொழில்நுட்பக் கலைஞர்கள், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இயக்கிய தாரிணி என இந்தக் குழுவின் ஒன்றரை வருட அசுர உழைப்பின் பலன்தான் இந்த வெற்றியும், தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த கரகோஷமும். எத்தனை திட்டமிடலும் கடின உழைப்பும் இதன் பின்னால் இருந்திருக்க வேண்டுமென்ற பிரமிப்பை அனைவருக்கும் ஏற்படுத்திவிட்டது. இரண்டரை மணிநேரத்தில் நம்மை ஒரு யுகம் பின்னோக்கி அழைத்துச்சென்ற கோமல் தியேட்டர்ஸ் குழுவிற்கு கண்டிப்பாக நன்றி கூறவேண்டும். நன்றி இந்த நாடகத்திற்கு மட்டுமல்ல, இனி நாடகக்கலைக்கு என்றும் அழிவில்லையென்று நமக்கு உணர்த்தியதற்கும் சேர்த்துதான்.