உங்கள்  வங்கி கணக்கு விபரங்கள்  யாருக்குத் தெரியும்?

உங்கள்  வங்கி கணக்கு விபரங்கள்  யாருக்குத் தெரியும்?
Published on

தலையங்கம்

ணைய வழி வங்கிச் சேவைகள் மிக வேகமாக அதிகரித்துவரும் இன்றைய சூழலில் அதில் 'ஹேக்கர்ஸ்' என்ற இணையத்திருடர்கள் மூலம் செய்யப்படும் கையாடல்களும் அதிகரித்து வருகின்றன. அதனால்தான் அனைத்து வங்கிகளும் அதன் வாடிக்கையாளர்களுக்கு "எவருக்கும் உங்கள் வங்கி விபரங்களை பகிராதீர்கள்" என்று அடிக்கடி நினைவுறுத்திக்கொண்டேயிருகின்றன.

ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையிலிருந்து  "இப்படி கணக்கு விபரங்களை  அவசியமானவர்களுக்கு கூடத்தெரிவிக்காமலிருப்பவர்கள் ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதை உணரமுடிகிறது.

தற்போது, இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள், 22  தனியார் வங்கிகள், 44 வெளிநாட்டு வங்கிகள், 43 வட்டார கிராம வங்கிகள், 1484 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 96 ஆயிரம் ஊரக கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றில் கோடிக்கணக்கான சேமிப்பு கணக்குகள் உள்ளன.

இந்த கணக்குகளில் 10 ஆண்டாக உரிமை கோரப்படாத டெபாசிட் பணம், டெபாசிட்தாரர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு ரிசர்வ் வங்கிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாற்றம் செய்யப்படுகிறது.

அதென்ன உரிமை கோரப்படாத டெபாசிட் பணம்?

ஒரு சேமிப்பு கணக்கில் 10 ஆண்டுகளாக பணம் போடவோ, எடுக்கவோ இல்லையென்றால் அந்த கணக்கில் உள்ள பணம் கோரப்படாத பணமாக கருதப்படுகிறது. இப்படி கடந்த 2021 மார்ச் முடிவில் ரூ.39,264 கோடி உரிமை கோரப்படாத டெபாசிட் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

"அது எப்படி, வங்கியில் போட்ட பணத்தை அதன் உரிமையாளர் எடுக்காமல்  விடுவார்" என்ற கேள்வி எழுகிறதல்லவா?

டெபாசிட்தாரர் இறந்துவிட்ட பிறகு அவரது வாரிசுதாரர்களுக்கு அந்த வங்கி கணக்கு பற்றிய விவரம் தெரியாவிட்டால் என்ன செய்வது? அது உரிமைகோரப்படாத டெபாசிட்டாகவே மாறிவிடும். "இப்படிப்பட்ட டெபாசிட்களின் வாரிசுதாரர்கள் விவரத்தை கண்டறிந்து பணத்தை அவர்களிடம் ஒப்படைப்பதில் வங்கிகள் பெரிய அளவில் அக்கறை காட்டுவதில்லை" என்பது வங்கிகள் மீது கூறப்படும்  புகார்.

ஆனால், டெபாசிட்தாரர்களின் வாரிசுகளின் விபரம் சரியான முகவரி இல்லாத நிலையில், வங்கிகளால் என்ன செய்யமுடியும்.?

வங்கியில் உள்ள பணத்தை வாரிசுதாரர்கள் எடுப்பதில் உள்ள சட்டச்சிக்கல்கள்  சில வங்கிகளின் நடைமுறைகளை கடைப்பிடிக்கமுடியாமல்  நேரம் இல்லாமல் எடுத்த முயற்சிகளைத் தொடராமல்  அப்படியே விட்டுவிடுகின்றனர்.

இப்போது இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், டெபாசிட்தாரரின் பணம் அவரது உண்மையான வாரிசுதாரர்களுக்கு போய் சேர நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவோம். அதே நேரத்தில், நம் பணம் நமக்கு பிறகு நம் வாரிசுகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதில் நமக்கும் பெரும் பங்கு உள்ளது. எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது என்ற விவரத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டாலே இப்படி, உரிமை கோராத டெபாசிட்கள் குறைந்துவிடும்.

ஒருவேளை இதுவரை செய்யாதவர்கள் கூட இன்றே, தங்கள் கணக்கு விவரங்களை குடும்பத்தாரிடம் தெரிவியுங்கள். நம் உழைப்பால் கிடைத்து சேமித்த பணம்  வீணாகிவிடக்கூடாது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com