ராஜாவீட்டு கன்னுக்குட்டி

ராஜாவீட்டு கன்னுக்குட்டி
Published on

 செளமியா ராஜன்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பாதுகாப்புக்கு  பொறுப்பு வகிக்கும் சிறப்புப் பாதுகாப்புக் குழுவில் திறமையான வீரர்கள்.
அதி நவீனத் தொழில்நுட்ப சாதனங்கள் மட்டுமில்லாமல் வேட்டை நாய்களும் இருக்கின்றன.
அண்மையில் அவர்களுடைய , மோப்ப நாய் பிரிவில் 'முதோல்' வேட்டை நாய்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  

மிகவும் சுறுசுறுப்பானதாக கருதப்படும் இந்த வகை நாய்கள், எல்லா காலச்சூழலுக்கு தக்கபடி வாழும் தன்மையைக் கொண்டது.

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள நாய்கள் ஆராய்ச்சி தகவல் மையத்தில் (CRIC) இந்த வகை நாய்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு முறை தலா அரை கிலோ மக்காச்சோளம், கோதுமை, துவரம் பருப்பு மட்டுமே இவற்றுடைய உணவு.

ஆனால் அவசியமானால் . ஒரு ரொட்டி சாப்பிட்டும்கூட இவற்றால் உயிர் வாழ முடியுமாம்.

முதோல் நாய்களுக்கு நீளமான தலை, கழுத்து மற்றும் மார்பு இருக்கும். கால்கள் நேராகவும், வயிறு மெலிந்தும் இருக்கும். காது கீழ்நோக்கி இருக்கும். உள்நாட்டு இனங்களில் இது மிக உயரமான நாயாக கருதப்படுகிறது. இதன் சராசரி உயரம் 72 செ.மீ. கண் இமைக்கும் நேரத்தில் முதோல் நாய்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை பாய்ந்து ஓடும் திறன் கொண்டதனால் இவை இந்தப் படையில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நாய்களின் உடல் ஒரு விளையாட்டு வீரரைப் போன்றது. வேட்டையாடுவதில் இவற்றுக்கு ஈடு இணையில்லை.

இவற்றின் கண்கள் 240 டிகிரி முதல் 270 டிகிரி வரை சுழலும்.

முதோல் வேட்டை நாய்கள் அல்லது சாம்பல் நாய்கள் பொதுவாக வேட்டை பண்பைக் கொண்டவை. இந்திய ராணுவத்தின் காலாட்படையில் தாக்குதலுக்காகவும், அச்சுறுத்தலை அடையாளம் கண்டுகொண்டு திரும்புவதற்காகவும் இந்த வகை நாய்கள் ராணுவத்திலும்  பணியாற்றுகின்றன.

முதோல் நாய்களின் ஓடும் ஆற்றல் அபராமானது, உடல் மிகவும் மெலிந்து இருப்பதால், ஓடும்போது நீண்ட தாவலாக இவற்றால் செல்ல முடியும். அடர்ந்த இருளிலும் இவற்றால் பார்க்க முடியும் என்பதால் காலாட்படை ரோந்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனிதர்களின் செவித்திறன் அல்லது கேட்கும் திறனைவிட இவற்றின் கேட்கும் திறன் அதிகம்."

இந்த வகை நாய்களை வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கலாம். கர்நாடகாவில் முதோல் தாலுகாவில் உள்ள லோகாபூரில் மட்டுமே கிடைக்கும்  குட்டியின் விலை 14,000 ரூபாய். புக் செய்துவிட்டு 2 வருடம் காத்திருக்க வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com