31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி.'இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்'. தீபக் ஷிண்டே எழுதியது..அதைப் படித்தாலே போதும். பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன் கையில் ஐந்து வருடங்களாகத் தங்கிவிட்டது. எத்தனை தடவைதான் அதே புத்தகத்தைப் படிப்பதென்று தெரியவில்லை. பல தலைமுறைகளாக இந்தியப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு வராத தீர்வு சந்திரன் பாஸ் செய்வதனால் மட்டும் வந்துவிடப்போகிறதா என்ன? ஆனால் பாக்கியிருக்கிற அந்த ஒரு சப்ஜெக்டை பாஸ் செய்துவிட்டால், சிஏஐஐபி பாதிக்கிணறு தாண்டிவிடலாம். அது வங்கி ஊழியர்களுக்கான ஒரு பரீட்சை. முதல் பகுதியை முடித்தால் ஒரு இன்கிரிமெண்ட் கிடைக்கும். இரண்டாவதை முடித்தால் இரண்டு இன்கிரிமெண்ட். அவனது பொருளாதார நிலைமை வேண்டுமானால் உருப்படும்..படிக்கும் பழக்கம் மறந்தே போய் கேவலம் இப்போது ஒரு இன்கிரிமெண்டிற்காக டப்பா அடிக்கவேண்டியிருக்கிறது. பரீட்சைக்குப் படிக்கிறேன் பேர்வழியென்று மூன்று நாள் லீவு வேறு..ஆனால், இதே பரீட்சை எழுதுபவர்களில் சிலருக்கு எதிர்பாராதவிதமாக அதிசயங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டிருந்தான். ஓரளவு உண்மையும் கூட . அவனுடன் வேலை பார்க்கும் சாம் மிகவும் அழகாக ஆங்கிலத்தில் பேசுகிறவன்தான்.. குமாஸ்தாவாக இருந்தாலும், கஸ்டமர்களிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதும், மானேஜருக்கு கடிதம் எழுதித் தருவதிலும் கெட்டிக்காரன். கரடுமுரடான புரியாத வார்த்தைகளைக் கடிதத்தில் தூவி கதிகலங்க வைப்பவன். சுருக்கமாக, அந்தக்காலத்து சசிதரூர். அதே சாம் இமானுவேல் , சிஏஐஐபியின் ஆங்கிலமொழிப் பரீட்சையில் தோற்றுப் போனான்..'நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுகிறவன், விடைத்தாளின் நுனியில் மட்டும் பதில் எழுதியிருப்பானோ?' போன்ற ஏகப்பட்ட கிண்டல்களுக்கு நடுவே, சாம் உலவி வந்தான். "நொந்துபோய், இனிமேல் பரீட்சை எழுதப்போவதுமில்லை" என்ற நிரந்தர முடிவையும் எடுத்திருந்தான்..அவன் கதை அப்படியென்றால், இந்தியன் வங்கியில் வேலை செய்கிற ஒருவர், பரீட்சையே எழுதாமல் அக்கவுண்டன்சி பாஸ் செய்துவிட்டாராம். வதந்தி எந்த அளவு உண்மையென்று தெரியாது. ஆனாலும், 'பரீட்சை நடத்துகிறவிதமே சரியில்லை… அதிர்ஷ்டம் இருந்தால் பரீட்சை எழுதாமலும் பாஸ் செய்யலாம்' என்ற பரவலான கருத்து சாமிற்கும் சாதகமாக இருந்ததால் அவனும், 'டிட் ஐ நாட் சே தட்?' என்று ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு பெரும் அவமானத்திலிருந்து தப்பியவனாய் பெருமூச்சுவிட்டான்..சந்திரன் அப்படியெல்லாம் ஆசைப்படவுமில்லை. அவன் பரீட்சை கட்டாயம் எழுதுவான். ஆனால், அவன் எழுதியதைப் படிக்காமல் பாஸ் மார்க் போட்டால் போதும். கிடைக்கிற முதல் மாத இன்கிரிமெண்டை அப்படியே பிள்ளையார் உண்டியலில் போடத் தயாராகவும் இருந்தான்..சுந்தர் வேறு ஒரு யோசனை சொல்லியிருந்தான்.."சந்திரா… மொத்தம் அஞ்சு கேள்விக்கு பதில் எழுதணும்… நீ என்ன செய்யணும்னு சொல்றேன்… விடைத்தாளில் வலதுபக்க உச்சி மூலையில் ஒண்ணுலேர்ந்து அஞ்சு வரை பக்கங்கள் குறிச்சு வெச்சுக்கோ. ஒரு கேள்விக்கு அஞ்சுபக்கம் பதில் எழுது. அப்படி செஞ்சா நீ கட்டாயம் பாஸ்தான்.." என்று குறுக்குவழி காட்டினான். அப்படித்தான் அவன் ஒருமுறை பரீட்சை எழுதிப் பார்த்தான். பதினஞ்சு மார்க்கூட தேறவில்லை..பள்ளியில் படித்த காலத்தில் டுடோரியல் துணைவன் புத்தகத்தில் 'அறிவுரை' ஒன்றை படித்த ஞாபகம்…."இரண்டு மார்க் கேள்வியையே ஐந்து மார்க் கேள்வியாகக் கேட்டால் என்ன செய்யவேண்டும்? "."அதே பதிலை குண்டு குண்டாக எழுதி அரைப்பக்கம் நிரப்பவும்"..அப்படியும் ஒருமுறை செய்துதான் பார்த்தான். தேறவில்லையே..வேலையில் சேர்ந்து கையில் தனலட்சுமி புழங்க ஆரம்பித்த பிறகு வித்யாலட்சுமி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டாள். கடந்தகாலத் தோல்விகள் நினைவுக்கு வர, எரிச்சலில் புத்தகத்தைத் தூக்கித் தரையில் போட்டான். ஒரு எழவும் மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது.. 'கல்வியா, செல்வமா?'..வீட்டில் கல்யாணத்திற்கு பெண் பார்க்கலாமா என்று கடிதம் வேறு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில், அலுவலகத்தில் கூடவே வேலைசெய்யும் காமாட்சி நினைவுக்கு வந்தாள். அப்போதே 'நான் பார்த்துவிட்டேனே மம்மி ' என்று பதில் எழுதியிருக்கலாம்தான்..அவன் வேலையில் சேருவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர்தான் அவளும் சேர்ந்திருந்தாள். ஆனால் வேலையைச் சட்டென்று கற்றுக் கொண்டுவிட்ட சுட்டி. அவனுக்கு வேலை சொல்லிக்கொடுக்க வந்தவளும் அவளேதான். தினமும் அந்த பாழாய்ப்போன மல்லிச்சரத்தைத் தலையில் சூடியபடி அவன் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுப்பாள். கோடாலி முடிச்சின் நுனியிலிருந்து குளித்த நீரின் கடைசிச் சொட்டு ரவிக்கையின் முதுகு பக்கத்தின் நனைந்து காய்வதற்கு ஆரம்பித்திருக்கும். கவனம் அங்குதான் இருக்கும். காமனுக்கு காமன் சென்ஸே கிடையாது. நேரம் காலமும் கிடையாது. கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி மாதிரி கன்னத்தில் கைவைத்துக் கொண்டு, தன் வாழ்க்கையின் அடுத்த நகர்வைப் பற்றி யோசிப்பதற்குள் காமாட்சிக்கு வீட்டில் பையன் பார்த்துவிட்டார்களாம். அர்ச்சனா ஸ்வீட் வாயில் கசந்தது. 'நீ எங்க உருப்படப்போறே' என்று தனக்குத்தானே அர்ச்சனை மட்டும் செய்யமுடிந்தது..'இந்திய திருமணப் பிரச்னைகள்' என்று யாரேனும் பரீட்சை வைக்கக்கூடாதா? வேண்டாம். அந்த பாடத்தில் பரீட்சை வைத்தால் பாஸ் பண்ணுவானா என்று தெரியாது. ஆனால், அந்த பாடப்புத்தகத்தை வேண்டுமானால் எழுதித்தர தயாராக இருந்தான்..தேவையே இல்லாமல் ரவீந்திரன் வேறு நினைவலைகளில் மிதந்து வந்தான். அவன் நேரடியாக ஆபீசர் பரீட்சை எழுதி புரொபேஷனரி ஆபிசராக வேலைக்குச் சேர்ந்தவன். பிறக்கும் போதே, பேண்டிற்குள் சொருகிய சட்டையும், பளபளவென்ற ஷூவோடு பிறந்தவன் மாதிரிதான் தினசரி அலுவலகத்திற்கு வருவான். அவனைப் பற்றி பலப்பல சலசலப்புகள் உண்டு. 'வங்கியில் வேலை செய்யும் பெண் ஒருத்தியைத்தான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்' என்கிற அவனது தீர்மானமும் அதில் ஒன்று..அதற்காகவே, புதிதாக அப்பாயிண்ட்மென்ட் கிடைத்து, விறைப்பாக அயர்ன் செய்த காட்டன் புடைவையைக் கட்டி, தலைமுடியை வழித்து வாரி, பூவை வைத்துக்கொண்டு, கண்கள் படபடக்க , பத்துமணிக்கு வரப்போகிற மானேஜருக்காக ஒன்பது மணிக்கே அப்பாவுடன் வந்து காத்திருக்கும் பெண்ணை கண்டுகொள்வான். அவர்களுக்கு வலிந்து போய் உதவி செய்வான். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை..ஒரே வாரத்திற்குள் அந்த புதுப்பெண்ணை அருகிலுள்ள ஓட்டலுக்கு அழைத்துப்போய் காப்பி, டீயென்று ஏதாவது வாங்கிக் கொடுத்து கல்யாணப் பேச்சை எடுப்பான். சிலதுகள் முகத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கின்றன. அவற்றை எடுத்து துடைத்துப்போட்டுவிட்டு அடுத்த அப்பாயிண்ட்மெண்டுக்கு காத்திருப்பான். லேட்டஸ்டாக, போன வாரம் மஞ்சரி வந்து வேலையில் சேர்ந்திருக்கிறாள். அவளுக்கு ஒரு கப் காப்பியோ இல்லையென்றால் ஆப்பிள் ஜூசோ நிச்சயம்..அவளைப் பார்த்ததும், 'நானே பார்த்துவிட்டேன்' என்று வீட்டிற்கு கடிதம் எழுத சந்திரனுக்கும் ஆசை கரைபுரண்டோடியது. தபால் கார்டு அவனது ஆபீஸ் ட்ராயரில் ரெடியாக இருக்கிறது..தடம் தவறிய சிந்தனைகளைத் தலையில் தட்டி நிறுத்தினான். மின்விசிறிக் காற்றின் வேகத்தில், தூக்கிப் போட்ட புத்தகத்தின் பக்கங்கள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தன. சொருகி வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து, விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினான்..புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்தபிறகுதான், கீழே கிடந்த இந்து பேப்பரும் காற்றின் வேகத்திற்கு , தாள்களை விரித்து அவனுக்குக் காட்டியது. 'நேத்திக்கு கிரிக்கெட் மேட்சில் இந்தியாவிற்கு என்னாயிற்றோ?" என்ற கவலை புதிதாகப் பிறந்தது. காலையிலிருந்து பேப்பர் படிக்கவில்லையென்று அப்போது தோன்றவும் செய்தது. சில சமயங்களில், இந்தியப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கான பதில் இந்து பத்திரிக்கையிலும் கிடைக்கும்! நினைத்த மறுகணம், கையிலிருந்த புத்தகம் தரையை நோக்கிப் பாய, கீழே கிடந்த பேப்பர் கைகளில் குடியேறியது..இரண்டு கைகளாலும் பிரித்து , மின்விசிறிக்காற்றுடன் போட்டியிட்டு, முட்டிக்காலால் விரிந்து கிடந்த பேப்பரின் முதுகில் செல்லமாய் முட்டி, ராஜாளிப் பறவையின் சிறகுகளாய் பத்திரிக்கையை விரித்தான்..விளையாட்டுப் பக்கங்களிலிருந்து புரட்டிக் கொண்டே வந்தவனுக்கு, மூன்றாம் பக்கத்தில் 'உலகின் மிகப் பெரிய நாய்' எனும் ஆங்கிலப்படத்தின் விளம்பரம் கண்ணில்பட்டது..'எங்கே? அட நம்ம நாகேஷ் தியேட்டர்தான்.' தினமும் மதியக் காட்சி மட்டும் – அதுவும் பதினொரு மணிக்கு. வாட்சைப் பார்த்தான். சரியாக இன்னும் ஒரு மணி நேரத்தில்..!.'கங்கா ஓட்டல் ஸ்டாப்பில் 12பி பஸ்சில் ஏறினால் பத்து நிமிடத்தில் போய்விடமுடியாதா என்ன? '.மொத்தம் மூன்று மணி நேரத்திற்குள் படம் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம். 24 மணி நேரத்தில் ஜஸ்ட் மூன்று மணி நேரம் சினிமா பார்ப்பதில் என்ன குடி முழுகிப் போகப்போகிறது? தவிர, இன்னும் இரண்டு நாள் லீவு பாக்கி இருக்கிறதே… அப்போது படித்து முடித்துவிடலாம். அட.. அப்படியே நன்றாக எழுதிவிட்டாலும், பாஸ் பண்ணுவது என்ன நிச்சயம்? சாம் இமானுவேல் பாவம்தான்..சேரிலிருந்து எழுந்தான். நியூஸ்பேப்பர் அம்பாய் தரையில் பாய்ந்து மடங்கியது..ஒரு புதன்கிழமை காலைக் காட்சிக்கு அதுவும் ஒரு ஆங்கிலப்படத்திற்கு எவ்வளவு பேர் வந்துவிடப்போகிறார்கள்? எவ்வளவு குறைவாக ஊகித்தாலும் அது சரியான விடைதான். சீட் நம்பரைக் கேட்டவுடன், டிக்கெட் கொடுக்கிறவன் சதுர ஜன்னல் வழியாக அவனை முறைத்தான்..அரங்கினுள் நுழைந்த பிறகுதான் அவனது முறைப்புக்கு காரணம் தெரிந்தது. அவனுக்கு ஒரு சீட் கொடுக்கவில்லை, தியேட்டரையே கொடுத்திருக்கிறான் என்று. வாழ்க்கையில் தேர்வு செய்ய ஏன் சந்தர்ப்பமே கிடைப்பதில்லை என்பது காலியான தியேட்டரில் புரிந்தது. நாலைந்து இருக்கைகள் மாறி, மாறி அமர்ந்து கடைசியில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். அதுவும் வசதிப்படவில்லையென்றால் அப்புறமாக சீட் மாறிக்கொள்ளலாம்..அபரிமிதமான வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ரசாயன உரத்தை தெரியாத்தனமாக , அதிகப்பிரசங்கி சயின்டிஸ்ட் சிறுவனின் நாய் விழுங்கி அசுரத்தனமாக வளர்கிறது. அந்தக் கால சங்கர் ஸ்டைல் படம். ஆனால் நாய்தான் ஹீரோ..படம் ஓடு ஓடு என்று ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளை வரவில்லையே. படத்திற்கும் ஏதாவது உரம் போட்டு பெரிதாக வளர்ந்துவிட்டதோ என்று யோசித்தபடி இருந்தான் சந்திரன். ஆனால் படத்தை மொத்தமாக ஓட்டி முடித்து வெளியில் விட்டபிறகுதான் இடைவேளையே விடவில்லையென்று புரிந்தது..மெதுவாக அரங்கத்தைவிட்டு வெளியில் இறங்கிவந்தான். இடைவேளை சமோஸாக்கள் இல்லாமல், காலி வயிறு கசமுசா ஆகிக் கொண்டிருந்தது..தெருவில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒருவிதமான அசாதாரணமான அமைதி தெரிந்தது. அருகிலிருந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி நடக்கும் போது, திடுக்கிடும் செய்தி காதுகளில் விழுந்தது..' பிரதமரை சுட்டுட்டாங்களாம்..'. இந்திராகாந்தி பிரதமர் அப்போது.."சுட்டவங்க ரெண்டு பேர்… அவரோட செக்யூரிடி ஆட்களாம்"."ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.."."அதெல்லாம் பூட்ட கேசுப்பா.. பாவம்பா அந்தம்மா".காரணம் புரிந்தது. பஸ்கள், ஆட்டோ என்று எதுவும் ஓடப்போவதில்லை.. எல்லோரையும் போல அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான் வீட்டை நோக்கி. நாட்டின் அவ்வளவு பெரிய தலைவரை எளிதில் சுட்டுக் கொல்லவும் முடியுமா? அதுவும் பாதுகாக்க வேண்டியவர்களே சுட்டுவிட்டார்களாமே..வழியெங்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மவுண்ட்ரோடில் பெரிய கலவரம். கடைகளை உடைத்து பொருட்கள் சூறையாடப்பட்டதாம். நல்லவேளை… இருபது நிமிடங்களில் வீட்டிற்கு நடந்து போய்விடலாம்..சிறுவனாக இருக்கையில், மதுரை மேலமாசிவீதியில் இந்திராகாந்தி கையை வீசி ஆட்டியபடி, திறந்த ஜீப்பில் சென்றது ஞாபகத்திற்கு வந்தது. அந்த வயதில், பிரதமர் தன்னைப் பார்த்துத்தான் கையாட்டினார் என்று ரொம்ப வருடங்களுக்கு நம்பிக்கொண்டிருந்தான்..பிரதமர் போனபிறகு அவரது இருபது அம்ச திட்டம் என்னவாகும்? ரேடியோவில் ஏழை பாழைகளைப் பிடித்து, 'ஆமாம், ஆம்' என்று பதில் வருகிறமாதிரி கேள்விகள் கேட்பதை நிறுத்திவிடுவார்களா? முக்கியமாக, இனிமேல் 'இந்தியப் பொருளாதார பாடத்தில் இருபது அம்ச திட்டத்தைப் பற்றி கேள்வி கேட்கமாட்டார்களா? நகச்சுத்தி வருமளவுக்கு, விரல்விட்டு ஒவ்வொன்றாக இனிமேல் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டாம். ஆனாலும் மனது வலித்தது. பிரதமரையே சுட்டுக் கொன்றவர்களுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம்?.மத்தியானம் ஆபிசிலிருந்து புறப்பட்ட அவனது ரூம் மேட் சாயங்காலம் வரை நடந்து வீடு வந்து சேர்ந்தான். அவனது நண்பர்கள் பலர் பீச் ரயில் பாதை வழியே கும்பல் கும்பலாக பேசியபடி வீட்டிற்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு நெடுந்தூர நடைப்பயணத்திலிருந்து தப்பித்ததில் சந்திரனுக்கு உள்ளூர ஒரு சந்தோஷம்.கீழ்போர்ஷனில் குடியிருக்கும் வீட்டு ஓனரிடமிருந்த கருப்பு வெள்ளை டிவியில் ஜெராக்ஸ் எடுத்தது போல் இந்திராகாந்தியின் படம் காட்டி அவர் புகழ் பாடிக்கொண்டிருந்தார்கள். பிம்பங்கள் மேலும் கீழுமாக அலைபாய்ந்து கொண்டிருக்க, ஓனரின் தயவில் டிவி பார்த்துத் தொலைக்க மொட்டை மாடிக்கு சென்று ஆண்டெனாவை திருவல்லிக்கேணியின் டிவி கோபுரத்தை நோக்கி உத்தேசமாக திருப்பவேண்டியிருந்தது..அவ்வளவு துக்கத்திலும், "பாத்து.. பாத்து.. நீங்க பார்த்தசாரதி கோபுரத்தைப் பாத்து திருப்பிடாதீங்க.." என்று ஓனரின் அட்வைஸ் என்கிற பெயரில் காமெடி வேறு..அனைத்து வானொலி நிலையங்களிலும், தளர்ந்து போன வீணை நரம்புகளும், வயலின் கம்பிகளும் தொய்வில்லாமல் வித்வான் கரங்களில் அழுது கொண்டிருந்தன. பேசாமல் ரேடியோ ஸ்டேஷனையும் மூடியிருக்கலாமென்று நினைத்தான்..அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊரே அடங்கிக் கிடந்தது. அரசு அலுவலகங்களுக்கெல்லாம் விடுமுறை அறிவித்துவிட்டார்கள். அவன் எழுதவிருந்த பரீட்சையையும் தள்ளி வைத்துவிட்டார்கள்..மறுபடியும் வங்கி திங்கட்கிழமைதான் திறந்தது. பிரதமரின் கொலையைப் பற்றி பேசிப் பேசி அனைவரும் வாய் வலித்துப் போனார்கள். ஆபிசர் ரவீந்தரும் மஞ்சரியும் தனியே அமர்ந்து, சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்..."ஒரு நாட்டின் தலைவர் இறந்ததிற்கு எல்லோரும் சோகத்திலிருக்க இவர்கள் மட்டும் எப்படி..?" என்ற கேள்வியோடு ஒரு சந்தேகமும் எழுந்தது..அன்று மதியமே உணவு இடைவேளை அரட்டையில் அதற்கு பதிலும் கிடைத்தது..பிரதமர் இறந்த அன்று, ரவீந்தரும் மஞ்சரியும் ரயில்பாதையில் நடந்து போயிருக்கிறார்கள். சின்னப் பசங்கள் போல் ஆளுக்கொரு தண்டவாளத்தில் ஏறிக்கொண்டு நடக்கையில் தடுமாறாமல் இருக்க ஒருத்தரையொருத்தர் கைகளைப் பிடித்துக் கொண்டார்களாம். அதில் க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாம்..இனிமேல் ரவீந்தர் யாரையும் வலுக்கட்டாயமாக டீ,காபி வாங்கிக் கொடுக்க அழைத்துப்போவதில்லை என்று சந்திரனுக்குப் புரிந்தது. மஞ்சரிக்கென்று அவன் போடவிருந்த மாஸ்டர் ப்ளான் எல்லாம் பணால்..மூன்று நாட்கள்தான் அவன் லீவு போட்டான். அதில், முதல் நாளிலேயே பிரதமரைச் சுட்டு, எல்லாம் களேபரமும் ஆகிவிட்டது. அந்த மூன்று நாள் இடைவெளியில், ரவீந்தர் மஞ்சரியைச் சுட்டுவிட்டான் !.அப்பாவிற்கு எழுதி அனுப்பலாமென்றிருந்த போஸ்ட் கார்டை எடுத்து கிழித்துப் போட்டான்..அவனுக்குள் முன்னெப்போதுமில்லாமல் பெரிதாக துக்கம் பொங்கி வழிந்தது.