இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று

இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று
Published on

அருள்வாக்கு

"ஏகதந்தர். "ஸுமுகச்-சைகதந்தச்ச. இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். "ஒற்றைக் கொம்பன். பொதுவாக ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு.

முதலிலே இவருக்கும் இரண்டு [கொம்பு] இருந்து, அப்புறம் வலது பக்கம் இருப்பதை இவரே ஒடித்துக்கொண்டுவிட்டார். அதை விக்ரகங்களில் வலது பக்கக் கீழ்க் கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஏன் ஒடித்துக்கொண்டார்? புராண ரீதியில் இரண்டு கதை சொல்கிறார்கள். வியாசர் பாரதம் சொல்கிறபோது அதை உடனே விக்னேஸ்வரர் அவசரமாக இமாசலப் பாறைகளில் எழுத வேண்டியிருந்ததென்றும், அப்போது
எழுத்தாணிக்காகத் தேடிக்கொண்டு ஓடாமல் தந்தங்களில் ஒன்றையே முறித்து அதனால் எழுதினாரென்றும் ஒரு கதை. அறிவு வளர்ச்சிக்காகத் தம்முடைய பஹு அழகான அங்கத்தை — யானையின் அங்கங்களுக்குள்ளேயே 'இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று ரொம்பவும் மதிப்புள்ளதாயிருப்பதை — உயிரோடு இருக்கும்போதே தியாகம் செய்த உத்தம குணத்தைக் காட்டும் கதை.

எந்த அஸ்திரத்தாலும் வதம் பண்ண முடியாத கஜமுகாஸுரனைத்
தம்முடைய ஒரு தந்தத்தையே முறித்து ஆயுதமாக்கிப் பிரயோகித்து வதம் பண்ணினாரென்பது. லோக ரக்ஷணத்துக்காக "என்பும் உரியர் பிறர்க்கு" என்று காட்டிய கதை. சாதாரணமாக அந்தக் குறளுக்கு ததீசியைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டுவார்கள். தந்தமும் யானையின் எலும்புதான். அதனால் பிள்ளையாரும் 'என்பும் பிறர்க்கு உரிய'ரான 'அன்புடையார்' தான்!

அவர் ஏகதந்தராக இருப்பதற்குத் தத்வார்த்தமும் உண்டு. ஆண் யானைக்குத்தான் தந்தம் உண்டு. பெண் யானைக்குக் கிடையாது. தாம் ஆண், பெண் இரண்டும்தான். அதாவது ஈஸ்வர தத்துவம் என்பது ஆண்தான், பெண்தான் என்று ஒன்றாக மாத்திரம் வரையறுக்க முடியாமல் இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று என்று காட்டவே முகத்திலே ஒரு பக்கம் யானை (களிறு என்பது) மாதிரி தந்தத்துடனும், மறுபக்கம் பெண் யானை (பிடி என்பது) மாதிரி தந்தமில்லாமலும் இருக்கிறார். மாதா பிதாக்கள் பப்பாதி [பாதிப் பாதி] ஸ்திரீ புருஷர்களாக அர்த்தநாரீஸ்வர ரூபத்தில் இருக்கிற மாதிரியே புத்திரரும் கொஞ்சம் இருந்து காட்டுகிறார். அப்படியே 'காப்பி' பண்ணினதாக இருக்க வேண்டாமென்று அங்கே வலது பக்கம் புருஷ ரூபம், இடது ஸ்த்ரீ என்றிருந்தால் இவரோ வலது பக்கம் தந்தமில்லாமல் பெண் யானையாகவும் இடது பக்கம் தந்தமுள்ள ஆண் யானையாவுமிருக்கிறார்!

முதலில் சுமுகர் – அழகான வாய் உள்ளவர்; அடுத்தாற்போல ஏகதந்தர் – அந்த வாயிலே உள்ள தந்தத்திலே ஒன்று இல்லாதவர். குழந்தை என்றால் அதற்குப் பல் விழுந்திருக்கணும்தானே? 'பொக்கை வாய்ச் சிரிப்பு' என்று அதைத்தான் விசேஷித்துச் சொல்வது. ஜகத்தின் மாதா பிதாக்களான பார்வதி – பரமேஸ்வரர்களின் முதல் குழந்தை ஒரு தந்தம் போன பொக்கை வாயுடன் சுமுகமாகச் சிரித்துக் காட்டுகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com