படம், அதன் நடை,அனைத்துமே தமிழ், ஏன் இந்தியப் படங்களுக்கே புதிது.

படம், அதன் நடை,அனைத்துமே தமிழ், ஏன் இந்தியப் படங்களுக்கே புதிது.
Published on

விமர்சனம்

– ஶ்ரீதர்

விசில், கைதட்டல் என்று பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பித்த சிம்புவின் என்ட்ரி… அதே ஆரவாரம் SJ சூர்யா என்ட்ரிக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்த ஜெட் வேகம்தான் படத்தின் ஹைலைட்.

விமானத்திற்குள் கண்மூடி தூங்கும் சிம்புவுக்கு அக்டோபர் 10 அன்று நடக்கவிருக்கும் ஒரு பெரிய அசம்பாவிதம் பற்றி கனவு போல வருகிறது. அதில் அவர் இறந்து போன பின் கனவு கலைகிறது..

இதுபோல திரும்ப திரும்ப கனவு வந்து (இதற்கு Time loop என்று பெயராம்)அதில் அவர் இறந்து விட்டால் கனவு கலைந்துவிடும். இதேபோல் Time loop வில்லன் SJ சூர்யாவுக்கும் வருகிறது.

ஒவ்வொரு தடவை கனவு கலையும் போதும் இருவரும் அதில் நடக்கும் தவறுகளை திருத்திக் கொண்டாலும் கடைசியில் ஹீரோ சிம்பு அந்த அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். இதுதான் கதை.

புதுமையான கதை, பிசிறில்லாத காட்சியமைப்பு, கேமரா, விறுவிறுப்பான ஸ்கிரீன் ப்ளே, நடிகர்கள் தேர்வு எல்லாமே அபாரம். குறை சொல்ல என்று எதுவுமே இல்லை.

அது என்ன டைம் லூப்?

இந்த டைம் லூப் என்ற கருத்து (concept) கற்பனை உத்தி கதையில் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள், திரும்பத் திரும்ப ஒருவனுக்கு ரிப்பீட் ஆகும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து அவன் தப்பிக்க, ஒன்று அவன் சாக வேண்டும், அல்லது அந்த நாள் முடிந்து அடுத்த நாள் வரவேண்டும். இதுதான் இந்த டைம் லூப் சிக்கலுக்கு முடிவு. இதை எழுத்தில் ஓரளவு புரிய வைக்கப்படும். ஆனால் திரையில் மிக கஷ்டம்.

மாநாட்டின் முதல் ஹீரோ வெங்கட் பிரபு & டீம்தான். அந்த அளவிற்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒரு குழந்தைக்குக்கூட புரியும் வகையில் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக்குவது என்பது நிச்சயம் ஒரு அசுர சாதனை.

தமிழ் சினிமாவின் பல அபத்தங்களைத் தவிர்த்து விட்டு யோக்கியமான திரைக்கதையை அமைத்தற்காகவே வெங்கட்பிரபுவிற்கு ஒரு ராயல் சல்யூட்.

வழக்கமாக சிம்புவின் முகத்தில் இருக்கும் ஓர் அசட்டுக் களை இந்தப் படத்தில் சுத்தமாக இல்லை. மிகவும் ஸ்மார்ட். நம்ப முடியாத அளவிற்கு மிக மிக இயல்பான முதிர்ந்த நடிப்பு.

கதை, வெங்கட் பிரபுவின் இயக்கம் மற்றும் காட்சி அமைப்புகள்தான் படத்தின் உயிர்நாடி. வில்லன் SJ சூர்யா நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறார். யுவனின் பின்னணி இசை படத்தின் வேகத்தை சீராக, சுவாரசியமாக கொண்டு செல்கிறது.

அசட்டு காமெடி, ஆபாச வசனம், நடனம், தேவையில்லாத டூயட் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைக் காட்சிகள் இருந்தாலும் முகம் சுளிக்க வைக்கும் கொடூரம் இல்லை.

இந்து, முஸ்லீம் ஒற்றுமை, இரு மதத்திலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை இடையிடையே நடுநிலையாக சொல்ல மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

மற்றபடி படம், அதன் நடை, அனைத்துமே தமிழ், ஏன் இந்தியப் படங்களுக்கே புதிது.

நிச்சயமாக தியேட்டரில் சென்று பார்க்க வேண்டியப் படம். குடும்பத்தோடு தைரியமாகப் பார்க்கலாம்.

சிம்புவின் திரையுலக வாழ்வில் இது நிச்சயம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com