தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்

தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்
Published on

ஸ்ரீரமணர் அமுதமொழி

நீ எந்த அளவிற்கு அடங்கிப் பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. வாழ்வில் உனக்குக் கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளையைத் தவிர, மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே. தவிர, உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள்.

எண்ணங்கள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல், 'நான் யார்?' என்ற விசாரணை செய்ய வேண்டும். மனதை நீ வெளி விஷயங்களிலும் எண்ணங்களிலும் திசை திருப்பக்கூடாது. விருப்பும் வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை. மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்நிலையிலும் இருக்கலாம். மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது. அதுதான் தவம்.

கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால் கடவுளை எளிதில் காணலாம். கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வரும்.

தீமைகளைச் செய்யாதீர்கள். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள். ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்துகொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பதுதானேயன்றி வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று. விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா, விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொரு வழி.

'நான் யார்?' என்ற எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை, ஞானம், மோட்சம் ஆகும். எனவே 'நான் யார்' என்று எண்ணங்கள் இல்லாமல் இருத்தலே பரிபூரண நிலையாகும்.

'உன்னைக் கண்டுபிடித்து அறிந்துவிட்டால் அனைத்தையும் கண்டுபிடித்தவன் ஆவாய்'.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com