கமலின் ‘டார்ச் லைட்’ ஒளி  மங்கி விட்டதே!

கமலின் ‘டார்ச் லைட்’ ஒளி  மங்கி விட்டதே!
Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

? கமலின் 'டார்ச் லைட்' ஒளி  மங்கி விட்டதே, இனி அவருக்கு பயன்படுமா?
– மதுரை குழந்தைவேலு,  சென்னை

! சில சமயங்களில் ஒளி மங்கிய டார்ச் லைட்டில் புதிய பேட்ரி செல்கள்  போட்டாலும் கூட  சரியாக வேலை செய்யாது. அந்த டார்ச் லைட்டைத் தூக்கி போடுவதைத் தவிர வேறு வழியில்லை…?

? உக்ரைன் – ரஷியா போருக்கு மூலகாரணம் என்ன தராசாரே..?
– மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

! இந்த இதழில் வெளியாகியிருக்கும் சிறப்புக் கட்டுரையைப் பாருங்கள்.

? நாடுகளுக்கு இடையேயான போரை முற்றிலும் ஒழிப்பதில் தடையாக இருப்பது எது சார்?
– கண்ணன், நெல்லை

! மனித மனம்.  நாடுகளின் தலைவர்களாக இருப்பவர்களின் மனதில் எழும்  அழுத்தமான எண்ணங்கள் தான் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்க பல்வேறு சிக்கலான,  காரணிகள் இருந்தாலும், அந்நாட்டு அதிபரின் தனிமனித குணநலன், விருப்பு வெறுப்புகள், சார்பு நிலை, போதாமைகள் ஆகியவை போர் தொடுக்க எடுக்கப்படும் முடிவில் மிக முக்கிய பங்காற்றும். இன்றைய புடினைப் போலவே, 2003ல் ஈராக் மீது அமெரிக்கா போர்    ஜார்ஜ் புஷ்ஷின் பிடிவாதம் தான் காரணம்

? 'புத்தகக் கண்காட்சி 'க்கு மாற்றுப் பெயர் சொல்லுங்களேன்?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

! இப்போது கண்காட்சி இல்லை; புத்தக காட்சிதான். பல வியாபாரிகள் ஒரே இடத்தில் கூடி தங்கள் பொருட்களை விற்பதை 'சந்தை' என்ற தமிழ்ச் சொல் குறிக்கிறது. ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'FAIR' என்ற சொல்லின் பொருளும் அதுதான். எனவே, 'புத்தக சந்தை' என்பது தான் சரியாக இருக்கும்?

? "பா.ஜ.க. வெற்றிபெறா விட்டால் உ.பி. மாநிலம் கேரளா ஆகிவிடும்" என யோகி ஆதித்யநாத் பேசியிருக்கிறாரே?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

! அதற்கு தான் கேரள முதல்வர் பினராயி "யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல் உத்தரப் பிரதேசம், கேரளாவாக மாறினால், மக்களால் சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை பெறமுடியும். மேலும், மதம் மற்றும் சாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத ஒரு நல்லிணக்கமான சமுதாயமாக மாறும். அதைத்தான் உத்தரப் பிரதேச மக்களும் விரும்புவார்கள்" என்று செம்மையாக  பதிலடி கொடுத்துவிட்டாரே!

? "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. 3-வது இடம் என்று சொல்வதை விட 'சுழியம்' என்றே சொல்லலாம். பா.ஜ.க. வளர்ந்து வருவதாகச் சொல்வது ஒரு மாயை. அது அ.தி.மு.க.வை சிறுமைப்படுத்துவது போன்றது"  என்கிறாரே திருமாவளவன்?
– ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி-635001

! தவறு. வெளிவந்திருக்கும் புள்ளிவிபரங்கள் பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது என்பதையும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது என்பதையும் தெளிவாகச் சொல்லுகிறதே. பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம்  5%த்தை எட்டியிருக்கிறது. தனியாக நின்ற பா.ஜ.க.வுக்கு இது சாதனைதான். அதிலும் பாதி இடங்களில் மட்டுமே போட்டியிட்டது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

? "கவர்னரை நீக்க  மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்" என்று கேரள அரசு கேட்கிறதே?
மணிவண்ணன், புதுச்சேரி

! அரசியலமைப்பு சட்டத்தில்  இதற்கான திருத்தங்கள் அவசியம் என்பதை கேரள அரசு  அமைத்த ஒரு ஆணையம் சிபாரிசு செய்திருக்கிறது. கேரளா மட்டுமில்லை, அண்மைக் காலமாக தமிழக உட்பட பல மாநிலங்களில் இந்தக் குரல் எழுந்துகொண்டிருக்கிறது. ஆனால் பா.ஜ.க.  ஆட்சியிலிருக்கும் வரை இந்தக் குரல் ஒன்றிய அரசுக்குக் கேட்காது.

? நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை மறுப்பது சரியா?
– கண்ணன்,  ஈரோடு

!பத்ம விருதுகளுக்கான நபர்கள் கமிட்டியால் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர்களிடம் ஒப்புதல் கேட்டபின்னரே வழங்கப்படுகிறது.

மோடியின் மிகக் கடுமையான விமர்சகர்களுள் ஒருவரான  77 வயதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால்  எனக்கு பத்ம பூஷண் விருது பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் எனக்குக் கொடுத்திருந்தால் நான் அதனை நிராகரிக்கிறேன்.  என்று அறிவித்திருக்கிறார்.

? உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க.வின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு உண்மையான காரணம் என்ன?
– ராதிகா, மதுரை

! மக்களிடம் அவர்கள் செலுத்திய மூன்றெழுத்துதான்.   நான் அ-ன் –பு என்பதைச் சொல்லுகிறேன் மேடம். நீங்கள் தவறதலாக எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

? கோவா விடுதலை பெற ராணுவத்தை அனுப்ப மறுத்தார் நேரு. இதற்காக காந்தி காங்கிரசை கலைத்துவிட விரும்பினார் என்கிறார்களே பா.ஜ.க.வினர்?
– வண்ணை கணேசன்,  பொன்னியம்மன் மேடு

! தவறான தகவல்.  கோவாவை போர்த்துகீசியர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து  மீட்ட சரித்திரம் அறியாதவர்கள்.  450 ஆண்டு கால போர்த்துக்கீசிய ஆட்சியிலிருந்து கோவா மாநிலம் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று விடுதலையடைந்தது. அண்ணல் மறைந்தது 1948ஆம் ஆண்டு. பாவம் காந்தி!!!

சுதந்திரத்துக்குப் பிறகு, பிரிட்டனும் பிரான்ஸும் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற பிறகு, போர்ச்சுகலும் அப்படியே நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு கோவாவை ஒப்படைக்க போர்ச்சுகல் மறுத்துவிட்டது. கோவாவில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்து வருவதாகவும், தாங்கள் வெளியேறிவிட்டால் அங்கே வசிக்கும் கத்தோலிக்கர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் அது கூறியது.  நேரு, அதன் பிறகே ராணுவ நடவடிக்கை மூலம் கோவாவை விடுவிக்க முடிவு செய்தார்.  நீண்ட சண்டைக்குப் பிறகு டிசம்பர் 18-ல் போர்த்துகீசியப் படைகள் சரணடைந்தன. நிபந்தனையின்றி சரண் அடைவதாக அப்போது கோவாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வசலோ இ சில்வா கைப்பட எழுதிக்கொடுத்தார்.

? உக்ரையன் நாட்டில் மட்டும் ஏன்  நம் நாட்டு  மாணவர்கள் பலர்   மருத்தவ கல்லூரிகளில் படிக்கிறார்கள் ?
 – பிரியா வெங்கடேசன், திருச்சி

! குறைவான கட்டணங்கள்…  நுழைவுத்தேர்வு கிடையாது…  தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு கட்டணமாக 4 லட்சம் ரூபாய் வாங்கப்படுகிறது. அதேபோல் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஒரு மாணவருக்கான கட்டணம் 23 லட்சம் ரூபாய்.  இது ஒர் ஆண்டுக்கு. ஆனால்   உக்ரைனில்  ஓராண்டுக்கு
4 லட்சம்தான். விடுதிகளுக்கும் கட்டணம் அதிகமில்லை. முன்போல் ரஷ்ய மொழி கற்றபின் படிக்க வேண்டிய அவசியமில்லை. ஆங்கில மீடியம். இந்தியப் பேராசியர்கள் கூட இருக்கிறாரகள்.  அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளில் மேற்படிப்புக்கும் வேலைக்கும் வாய்ப்பு அதிகம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com