சபாஷ்  தம்பி

சபாஷ்  தம்பி
Published on

தலையங்கம்

 95 ஆண்டுகளாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, இந்தியா இதுவரை ஒருமுறை கூட ஏற்று நடத்தியதில்லை. கொரோனா காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இம்முறை ரஷ்யாவில் நடப்பதாக இருந்தது. உக்ரைனுடனான போர் காரணமாக அங்கு நடத்த முடியவில்லை. சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) வாய்ப்பை இந்தியாவிற்கு அளித்தாலும் , ஏற்று நடத்த எந்த மாநிலமும் தயாராக இல்லை. இந்தச் சூழலில்தான், 'சென்னையில் அதற்கான வசதிகள் உள்ளன. ஏற்று நடத்த தயார்' என முதல் கரம் நீட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சர்வதேச அளவில்  இந்தியாவின் ஓர் அங்கமாக தமிழகத்தின் புகழை மீண்டுமொரு அடையாளம் காட்ட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முனைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏற்பாடுகள் ஜெட் வேகத்தில் நடந்தன. இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகம் எங்கும் செஸ் விளையாட்டை உணரும்படியான ஏற்பாடுகள் குறிப்பாக மாணவர்களை ஊக்குவித்து போட்டிகள். அதன் வெற்றியாளர்களுக்கு விமானப்பயணம், சர்வதேச ஆட்டக்காரர்களின் விளையாட்டைப் பார்வையிடும் வாய்ப்பு  வழங்கப்பட்டது.

செஸ் காய்களில் ஒன்றான குதிரையை, 'தம்பி' எனப் பெயரிட்டு,  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிவித்து,  'வணக்கம் சென்னை… வணக்கம் செஸ்' என்ற பெயரில் தமிழகம்  முழுவதும் கலை நிகழ்ச்சிகள், பேனர்கள், விளம்பரங்கள் செய்யப்பட்டன. பட்டிதொட்டியெங்கும் செஸ் ஒலிம்பியாட் பேசு பொருளாயிற்று. இதன் மூலம் 'செஸ்' என்ற விளையாட்டைப் பற்றி  அறியாத  தமிழக கிராமப்புற மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. சுமார் 2 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த சர்வதேச போட்டியின் தொடக்க விழாவை உலகெங்குமிருந்து பார்த்தவர்களின் மனதில் மகிழ்ச்சியும் நன்றியும்  ததும்ப  உடனடியாக பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

பன்னாட்டு அணிகளின் அணி வகுப்பு  அவர்களின் முன்னே நாடுகளின் பெயர்ப்பதாகையை தூக்கிவந்த அரசுப் பள்ளை மாணவச்செல்வங்கள், பலவகையான இந்திய நடனங்கள், ரகுமானின் வந்தே மாதரம் பிரமிக்க வைக்கும் டிஜிட்டில் முப்பரிமாண ஒளி ஓவியங்கள் எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதன் பின் நுணுக்கமான திட்டமிடல், கூர்ந்த சிந்தனை சளைக்காத உழைப்பு இவை மட்டுமன்றிப் பெருங்கனவும் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாயிற்று. விழாவின் ஒவ்வொரு கணமும் தமிழரின் பெருமையை நாட்டின்  ஒற்றுமையை ஒலித்தன.

இந்தப் பெருமிதமான தருணத்துக்காக முதல்வர் ஸ்டாலின், அரசு அதிகாரிகள்  அல்லும் பகலும் உழைத்த பணியாளர்கள் அனைவருக்கும்  நம் நன்றியையும் வாழ்த்துகளையும் சொல்லுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com