லாஜிக் மீறலேதான் மொத்தப் படமுமே!

லாஜிக் மீறலேதான் மொத்தப் படமுமே!
Published on

காத்துவாக்குல ரெண்டு காதல்  விமர்சனம்

லதானந்த்

ரண்டு காதலிகளுக்கிடையிடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ராம்போ என்னும் பாத்திரமேற்றிருக்கும் விஜய் சேதுபதி யாரைத் திருமணம் செய்துகொள்கிறார் – அல்லது யாரையாவது திருமணம் செய்துகொள்கிறாரா –  என்பதுதான் கதை.

ராம்போ என்னும் பெயருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. 'ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹோந்திரன்'  என்னும் முழுப் பெயரின் சுருக்கம்தான் ராம்போ!

ஏற்கெனவே இரு காதலிகள் / மனைவிகளுக்கிடையில் கதாநாயகன் அல்லாடும் இரு கோடுகள், ரெட்டை வால் குருவி மாதிரியான படங்களைப் பார்த்திருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. காதலிக்கும் இரு பெண்களுக்கும் காதலனின் இன்னொரு காதலும் தெரிந்தே இருக்கிறது என்பதுதான் அது.

சீரியஸ் படம் மாதிரி இருக்குமென்று நினைத்துவிடாதீர்கள். படம் நெடுகிலும் சின்னச் சின்னப் பாத்திரங்கள்கூட – டைமிங்காக – நகைச்சுவைப் பொடி தூவிச் செல்கிறார்கள்.

உதாரணத்துக்கு இதைப் பாருங்களேன்…

ஒரு காட்சியில் ரெடின் கிங்ஸ்லியின் உடல் முழுக்கப் பெட்ரோலை ஊற்றிவிட்டு, தீக்குச்சியையும் கொளுத்திவிட்டு, விஜய் சேதுபதி பற்றிய உண்மைகளை நயன்தாராவும் சமந்தாவும் விசாரிப்பார்கள். அப்போது கிங்க்ஸ்லி சொல்வார்: "பெட்ரோல் விக்கிற விலைக்கு அந்தக் காசை என்கிட்டக் கொடுத்துட்டு சும்மா விசாரிச்சிருந்தாலே சொல்லியிருப்பேனே."

நயன்தாரா தங்கச் சிலை என்றால், சமந்தா தந்தச் சிலை. இருவரும் அவ்வளவு அழகு! நடிப்பிலும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.

'இரு தாரத் தடைச் சட்டம் பாயுமே' என்ற பிரச்னையை கிளைமேக்ஸில் லாவகமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்!

நயனும் சம்ந்தாவும் பேசிக்கொள்ளும் பாதாம், பிஸ்தா இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றன. நீக்கப்பட்டிருக்கலாம்.

விஜய் சேதுபதியின் துரதிர்ஷ்டம் தொடர்பான இளமைக் காட்சிகள் மூட நம்பிக்கையை வளர்ப்பதாகாதா மிஸ்டர் இயக்குநர்?  மேலும் விஜய் சேதுபதியின் குடும்பத்தில் அனைவருக்குமே 'திருமணமாகாது' என்ற சாபம் இருப்பதாகச் சொல்வதெல்லாம் டூ மச்!

"When it rains, it pours!" என்ற தாயின் ஆறுதல் வார்த்தைகள் படத்தின் இடையில் விஜய் சேதுபதிக்குப் பலிக்கிறது. ஆனால் இறுதியில் 'சாபம் பலித்துவிட்டதோ' என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

'மெய்யா, பொய்யா?'  என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வி.சே.வுக்கு Dissociative identity disorder என்னும் மனச் சிதைவு இருப்பதாக நடிகர் பிரபு அடிக்கும் கூத்துகள் அமர்க்களம்.

ஆரம்பக் காட்சிகளில் இயற்கை எழில் சூழ்ந்த வயல், அருவி, ஆற்றங்கரை, பயிர் பச்சைக் காட்சிகள் வெகு நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கதாநாயகனின்  'மன வோட்கா'வை (மனப் பிராந்தி போல அது ஒரு வகை) நீக்க அல்லக் கைகள் செய்யும் காட்சிகள் நகைச்சுவைச் சரவெடி.

"ஆறிப்போன இட்லிக்கு எதுக்குடா ஹாட் பேக்?" என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே!

சத்யா படத்தில் கமல் – அமலா 'வளையோசை கலகல' பஸ் படிக்கட்டுப் பாடல் காட்சி மற்றும் டைட்டானிக் காட்சிகளைப்போல இதிலும் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. சரியான குறும்பு!

படத்தின் பிற்பகுதி சூயிங்கம் இழுவை.

ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி தன்னையே விவரித்துக்கொள்வது ஜோர்!

சில படங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கும். இதில் லாஜிக் மீறலேதான் மொத்தப் படமுமே!

மொத்தத்தில் : படத்தில் அடிக்கடி மைனஸ் ப்ளஸ் என வசனங்கள் வருவதைப் போல, படத்தைப் பொருத்தவரையில்
நயன் மற்றும் சமந்தா = ப்ளஸ்;
நம்பமுடியாத கதை = மைனஸ்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com