லஞ்சத்தின் வேர்

லஞ்சத்தின் வேர்
Published on

ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  – 19

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

ந்தச் சபையிலாக இருந்தாலும் அரசியல்வாதிகளைக்  குற்றம் சொல்லும் போதுதான் நமக்கான குடியுரிமை பற்றிய அக்கறை மிகவும் உச்சத்தில் இருக்கும். ஒருமுறை இப்படியான ஒரு உரையாடலின் போது மிகவும் வயதானவொரு மனிதர்,

"மம்முட்டி ஓட்டு போடுவீங்களா?" என்று கேட்டார்.

"இல்ல. பல நேரங்களில் நான் ஷூட்டிங்கில் இருப்பேன்."

"ஓட்டு லிஸ்ட்டில உங்க பேரு இருக்கா?"

"இருக்கலாம். ஆனால் நான் சேக்கல."

"அதாவது ஜனநாயகத்தில் உங்களுக்குப் பங்கில்ல. பிறகு எப்படி குறை சொல்ற அதிகாரம் மட்டும் உங்களுக்கு இருக்கிறதா நெனைக்கறீங்க?"

யோசித்துப் பார்த்தால் சரிதான் என்று தோன்றுகிறது. நாட்டின் ஜனநாயகத்தைத் தீர்மானிக்கும் பணியில் பேசுவது மட்டுமல்லாமல் நான் பங்கெடுத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குறை சொல்வதை மட்டும் நிறுத்துவதேயில்லை. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும்போதெல்லாம் நமக்கு மனதளவில் எதிர்ப்பு பொங்கும். அறிவிப்பு வந்த நேரத்திலிருந்தே, நாம் அதற்கெதிராகப் பேச ஆரம்பித்துவிடுவோம். ஆனால், அரசு அதை வேண்டாமென்று திருப்பி எடுத்துக் கொள்வதற்கான எந்தச் செயல்பாடுகளிலும் நாம் ஈடுபடுவதில்லை.

போராட்டம் நடத்துவதற்காகவே எல்லா இடத்திலும் கொஞ்சம் பாவப்பட்ட ஜென்மங்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாள் கூலியை இழந்து போராட்டம் நடத்துகிறார்கள். சில நேரங்களில் அடி வாங்குகிறார்கள், சில நேரங்களில் இறந்து போகிறார்கள். அவர்களின் போரட்டங்களின் பலனாக நாம் குளிரூட்டப்பட்ட அறைகளில் வசிக்க முடிகிறது. போராட்டம் நடத்துவது அவர்கள் வேலை என்பதாக நினைத்துக் கொண்டு நாம் அவர்களை ஒதுக்குகிறோம்.

இறந்த எலியைச் சாலைகளில் தூக்கியெறிவது நம் வேலை. அதை எடுத்துக்கொண்டு போக வேண்டியது கார்ப்பரேஷனின் வேலையாக நாம் கருதுகிறோம். 'குடிமகன்' என்ற நிலையில் பொது இடங்களில் எலியைத் தூக்கி எறியக்கூடாது என்பதை மிகச் சௌகரியாக மறந்து போகிறோம். உதிர்ந்த இலைகளைக்கூடச் சாலைகளில் ஒதுக்கித் தள்ளாத நாம், சுகாதாரத்தைப் பற்றியும், துப்புரவுத் தொழிலாளியின் சுத்தமின்மை பற்றியும் பேசுவோம். நம் குடியுரிமை நம் வீட்டு மதில்களோடு முடிவுறுவதும் அதன் பிறகான பொறுப்பு மற்றவர்களுடையது என்றும் நினைக்கிறோம். எத்தனை முறை கேட்டாலும் கென்னடி சொன்னதை நாம் மீண்டும் யோசிக்க வேண்டும்.

"நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று நினைக்காமல்,

நீங்கள் நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்."

இங்கே யாராவது ஒரு அரசியல்வாதி நம் கடமைகளை ஞாபகப்படுத்துவது உண்டா? நம் கடமைகளை ஞாபகப்படுத்துவதே நமக்குப் பிடிக்காது என்று நினைத்துத்தான் அரசியல்வாதியும் பேசாமல் இருக்கிறான். மிகப் பெரிய ஊழல் செய்பவர்கள் என்பதே அரசியல்வாதிகள்  பற்றிய நமது அபிப்பிராயம். நமக்கெல்லாம் ஏதாவது தொழில் இருக்கிறது. கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டியதன் சிரமமும் நமக்குத் தெரியும். எப்போதும் பேராட்டமும் அடிதடியுமாய் வாழும் அரசியல்வாதிக்கும் குடும்பம் உண்டு. நமக்காகப் போராட்டம் நடத்த அவர்களுக்கு நாம் சம்பளம் கொடுப்பதில்லை. அதனால் வாழ்வதற்கு ஏதாவது செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அவனுடைய குழந்தைகளைத் தரமான பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியில் படிக்க வைக்கவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும் வேண்டாமா? இதையெல்லாம் அவர்களுக்காக நாம் செய்கிறோமா? நாமெல்லாம் மிகச் சரியாக தினப்படி மாறாமல் ஜனநாயகத்தில் பங்கெடுப்பதாக இருந்தால் லஞ்சமும், அரசியல்வாதிகளின் இப்போதைய செயல்பாடுகளும் இல்லாமலே போகும். லஞ்சத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பது நாம்தான். நாம் சேர்ந்து நடத்தப்பட வேண்டிய போரட்டத்தை நமக்காக அவர்கள் நடத்தும் போது, அதற்கு ஒரு கூலியை எதிர்பார்க்கிறார்கள். அதைத் தவறென்று சொல்ல முடியுமா? தேவை ஏற்பட்டால்  இவர்களுடைய உதவியை நாட நமக்கு எந்தவிதமான மனத்தடையும் இல்லை.

பணம் வாங்கினாலும் வேலையை முடித்துக் கொடுப்பவர்களுக்குத்தான் மரியாதை. எல்லா கட்சிகளிலும் அதனால்தான் சுத்த ஆன்மாக்கள் குறைந்து போகிறார்கள். நுகர்வோருக்குத் தேவையான பொருட்களையே எந்த நிறுவனமும் மார்க்கெட்டில் வைத்திருக்கும் என்பது வியாபார உத்தி. பன்னாட்டு நிறுவனங்கள் போல நடக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இது போன்ற தந்திரங்கள் இருக்கிறது. மகாத்மா காந்தியை எதிர்த்தவர்கள்கூட அந்த பெயருக்கான மயக்கும் சக்தியைப் பார்த்து அதை 'பிராண்ட் நேம்' போலப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோமே.

வாக்கு செலுத்தும்போதும் நம்மை வழி நடத்துவது 'மண்ணென்ணை கிடைக்கவில்லை, சர்க்கரை கிடைக்க வில்லை' போன்ற லௌகீக பிரச்னைகள் தொடங்கி ஜாதி பிரச்னை வரையுமாக இருக்கிறது. அதனால்தான் தகுதியில்லாதவர்களும், கொள்ளைக்காரர்கள் என்று அறியப்படுபவர்களும் மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறார்கள். நாம் ஓட்டு போடும்போதுகூட நம் சுய லாபத்தைத்தான் பார்க்கிறோம்.

ஜாதியின் பின்புலத்தில் ஜெயித்தவர்கள் மீண்டும் ஜெயிக்க ஜாதியைத்தான் நம்புகிறார்கள். பிறகுதான் பொதுவான வாக்காளர்கள். நம்முடைய பிரதிநிதிகள்தான் நாட்டை ஆள்கிறார்கள். அவர்களிலிருந்தும் பிரதிபலிப்பது நம்மைப் போன்ற பெரும்பான்மையோரின் ஈடுபாடுதான் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கோழி, முட்டையை நன்றாக அடைகாத்து 'அன்னப் பறவை' பொரிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. முதலில் முட்டையிடுபவன் அன்னப்பறவையாக மாற வேண்டும். அன்னப் பறவையாக தன்னை நினைத்துக் கொண்டால் மட்டும் போதாது.

வேலைப் பளுவைக் காரணமாகச் சொல்லி வாக்களிக்காமல் இருப்பதும், ஜனநாயகத்தின் முன்னேற்றத்தில் பார்வையாளனாய் மட்டுமே இருக்கும் மம்முட்டிக்கு ஆளும் அரசியல்வாதியைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? பார்வையாளனாய் இருக்க மட்டுமே அவனால் முடியும்.  வியர்வை சிந்தாமல், சிரமப்படாமல், மம்முட்டி செய்யும் ஒரே வேலை குறை சொல்வதுதான். அதன் மூலமே தேசம் நன்றாக மாறிவிட வேண்டுமென்று மம்முட்டி நினைக்கிறார். சாலையில் பள்ளத்தில் கார் விழுந்து பதறும்போது மட்டும் சாலையின் தரம் குறித்து சிந்தித்தால் இப்படியான அதிர்வும், தெளிவும், குலுங்கலும், நேரான பயணமும் மாறி மாறி தொடரத்தான் செய்யும்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com