எனக்கு நானே ராஜா

எனக்கு நானே ராஜா
Published on

  – சிகரம் சதீஷ் 

ல்லோருமே படித்து ஏதேனும் ஒரு பணிக்குச் சென்றுவிட வேண்டும் என ஒரு பெருங்கனவுடன் பயிலும் சூழலில், திருச்சியைச் சேர்ந்த ஜேன் ஹென்ஸி ஷீபா தான் படித்த பள்ளி , கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து இடங்களிலும்
தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல், தனக்குப் பிடித்த இயற்பியலில் முனைவர் பட்டப் படிப்பிற்காக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு தேசங்களுக்கும் விண்ணப்பித்த இவருக்கு, இரு தேசங்களும் கதவுகளைத் திறந்தாலும் இவர் தேர்ந்தெடுத்தது இங்கிலாந்து நாட்டில் உள்ள லான்காஸ்டர் பல்கலைக்கழகம்.

உள்நாட்டில் படித்தாலும் இங்கிலாந்துப் பெண்மணிகளைப் போல, நாகரிகம் என்னும் பெயரில் இங்குள்ள இளம்பெண்கள் மாறிக்கொண்டிருக்கையில், இங்கிலாந்தில்  படித்து முனைவர் பட்டம் பெற்ற இவர், சிறிதும் பண்பாடு மாறாமல், இன்னும் இந்தியக் கலாசாரத்துடனே திகழும் இவரது அணுகுமுறையே இன்றைக்குப் பலராலும் இவர் மதிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கின்றது.

இயற்பியல் படித்தவர்கள் எல்லாம் சற்றே இறுக்கமாக இருப்பார்கள் என்பதை இவரைப் பார்த்தால் சிறிதும் சொல்ல முடியாது.

தனது பணியிலும் சரி, குடும்பத்திலும் சரி கலகலப்பான பேர்வழியாக அசத்தலாகத் தன் பயணத்தைத் தொடர்கின்றார்.

லண்டனின் முனைவர் பட்டம் பெற்றுத் திரும்பிய இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் young scientist என்னும் நிலையில் பணியில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் தனது குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. குடும்பமா? பணியா? என இவருக்குள்ளேயே கேள்வி எழ, அதிகம் குழப்பிக்கொள்ளாமல் குடும்பம்தான் என யோசித்து உடனடியாக முடிவெடுத்து பணியைத் துறந்து, இல்லத்தரசி என்னும் பேராளுமைமிக்க பணியில் இமயமென உயர்ந்து நிற்கின்றார்.

உங்களுக்கு என இலக்கு எதுவும் உள்ளதா எனக் கேட்டால்?

எனது வருவாயை ஈட்டுவதை, அதனைப் பெருக்குவதை மட்டும் முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல் , மக்களின் வாழ்க்கைக்கு, தேவைக்கு உதவும் வகையில் என்னை நான் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எனது பயணத்தின் நோக்கமாக இருக்கிறதெனக் குறிப்பிடுகின்றார்.

அதற்காக பணம் எனது இலக்கல்ல எனச் சொல்ல மாட்டேன். ஆனால் பணம் மட்டுமே இலக்கல்ல என உறுதியாகச் சொல்லுவேன் எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு தொழிலுக்காக அல்லது சேவைக்காக செலவிடும் நேரமும், உழைப்பும், முதலீடும் இடுகின்ற எனக்கு பணமும் வேண்டும்தான். அப்பொழுதுதானே தொடரவும், தொடர்ந்து முன்னேறவும் முடியும் என இயற்பியல் வல்லுநர் ஒரு பொருளாதார வல்லுநர் போல பேசுகின்றார்.

ஆனால் பணத்தை முன்னிறுத்தி இந்த ஓட்டத்தை ஓடாமல், மக்களின் problems and அதற்கான solutionsனு அதை முன்னிறுத்தி கொண்டு செல்லும் போது profit தானாக ஒரு by-product போல் வரும் என்பது என் நம்பிக்கை.

படித்த படிப்பு எதற்கும் உதவவில்லையே என்னும் கவலை இல்லையா?

சிறிதும் இல்லை.கொரோனா காலகட்டத்தில் கிடைத்த பெரும் இடைவெளியில் இணையதளங்களிலேயே கரைந்துகொண்டிருந்த காலங்களில் என் கனவைப் பொருத்தினேன். இணையதள உருவாக்கம், இணைய மேலாண்மை , இணைய வசதிகள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி, இன்றைக்கு நானே ஒரு தொழில் முனைவோராக என்னை உயர்த்திக் கொண்டு, எனக்கான பணி நேரத்தை நானே தீர்மானித்து, வருமானத்திற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு
"எனக்கு ராஜாவா நான் வாழுறேன்" என்கிறார் ஷீபா.

தனது கல்வித் தகுதிக்கும் திறமைக்கும் மாதத்திற்கு பல இலட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தும், மனதிற்குப் பிடித்த பணியைச் செய்து,
குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு ஆண்டுக்குச் சில லட்சங்கள் சம்பாதிப்பதில் எனது மனம் முழுமையாகத் திருப்தி அடைகின்றது எனச் சொல்லும்போது அவரது தாய்மை உணர்வும், குடும்பப் பற்றும் நெகிழச் செய்கிறது.

குடும்பத்திற்காக உங்கள் இலட்சியங்கள் எதையும் தியாகம் செய்திருக்கின்றீர்களா?

கணவன், மனைவி இருவரும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இதில் யாரோ ஒருவர் பொறுப்புணர்வுடன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் வளர்வார்கள். அந்தப் பொறுப்புணர்வை என்னால் தியாகம் எனச் சொல்ல முடியாது. எல்லோருக்குமே இந்தப் பொறுப்புணர்வு தேவை என்று வேண்டுமானால் சொல்ல முடியும். அது ஆணாகவும் இருக்கலாம் அல்லது பெண்ணாகவும் இருக்கலாம் எனச் சொல்லி நம்மிடம் வாழ்வியல் வகுப்பு எடுக்கிறார்.

இன்றைக்கு சுதந்திரம் என்னும் பெயரில் எல்லோரும் தன் விருப்பத்தை மட்டுமே முன்னிறுத்தி, பல திசைகளிலும் பயணிக்கையில்,
தனது விருப்பம் என்பதில் ஒரு பொறுப்புணர்வும் இருக்க வேண்டும் எனச் சொல்லும், பெண்களைச் சார்ந்தே ஒரு குடும்பத்தின் குழந்தைகள் வளர்கின்றார்கள் என்னும்பொழுது குடும்ப உறவுகளின் கட்டமைப்பை உடைக்கமுடியாது எனச் சொல்லி நம்மை விழி விரிய வைக்கின்றார்.

லண்டன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று படித்ததற்கு ஏற்ற பணியைச் செய்யாமல் மனதிற்கு பிடித்ததற்கு ஏற்ற பணியைச் செய்யும்
ஜேன் ஹென்ஸி ஷீபா இன்றைய காலத்தில் ஆச்சர்யம் தரும் அதிசயப் பெண்மணிதான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com