அச்சம் தவிர்

அச்சம் தவிர்
Published on

தலையங்கம்

நாட்டில்  கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வீரியமிக்க வைரசாக உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18  வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி இரண்டு கட்டமாக  முழுவீச்சில் நடந்துவருகிறது.  இந்த நிலையில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் நாடு முழுவதுமுள்ள  15-18  வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும்,  அடுத்த வாரம் முதல்  (ஜனவரி 10ம் தேதி முதல்) முதியோர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி  போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 15 வயது முதல்  18 வயதுக்கு உட்பட்டவர்களில் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். இத்திட்டத்தின்கீழ் தடுப்பூசி செலுத்த விரும்பும் சிறுவர்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் கோவின் செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும்  மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு அடையாள அட்டையைக்  காட்டி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

நம் நாட்டில் கொரோனாத்தொற்றைப் போலவே தடுப்பூசிகள் குறித்த வதந்திகளும் மாறுபட்ட கருத்துக்களும் வேகமாகப் பரவியிருந்தது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மிகத் திறம்பட மேற்கொண்டதின் விளைவாக தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 87 சதவீதம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 57 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். மீதமுள்ளோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, வாரம்தோறும் ஒரு நாள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.

இப்போது சிறுவர், சிறுமியர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டம் குறித்து சில வல்லுநர்களின் மாற்றுக் கருத்துகள் வெளியாகியிருப்பதால் வதந்திகள் உலாவ ஆரம்பித்திருக்கின்றன, குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி என்றால் பெற்றோருக்கு அச்சம் வருவது இயல்பு. ஆனால், அது  பாதுகாப்பானது என உலகின் பலநாடுகளிலிருந்து  அடுத்தடுத்து தரவுகள் வந்துள்ளன. அமெரிக்காவில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசி  செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது'.  இதே முறையை தமிழக அரசு பின்பற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.

மிகப்பெரிய சவாலான கொரோனா தொற்றைத் தவிர்க்க, அதன் வீரியத்தைக் குறைக்க அரசுகள் போராடிக்கொண்டிருக்கும்போது  தக்க ஒத்துழைப்புத்தர வேண்டியது நாட்டு மக்களின் தேசியக் கடமையாகும்.

நமது குழந்தைகள்  நலனுக்காக அரசு தெரிவித்துள்ள  நெறிமுறைகளைப்   பின்பற்றி அச்சம் தவிர்த்துப் பெற்றோர்கள் அனைவரும் விழிப்புணர்வோடு, கொரோனாவிலிருந்து நமது குழந்தைகளைக் காப்பாற்ற அரசுக்கு உதவுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com