நம்பிக்கையை விதைத்து வளர்த்துக்கொண்டிருப்பவர் .

நம்பிக்கையை விதைத்து வளர்த்துக்கொண்டிருப்பவர் .
Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

? ரத்தன் டாடா கொண்டாடிய பிறந்தநாள் பற்றி?
– வாசுதேவன் ,பெங்களூரு
! எல்லா ஆண்டையும் போலவே  இந்த ஆண்டும் எளிமையாக கொண்டாடியிருக்கிறார். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் இவர் மாறுபட்டவர். தீவிரவாதிகளின் தாக்குதலால் மும்பை தாஜ்மஹால் ஹோட்டல் மிகப்பெரும் சேதத்துக்குள்ளானது.  கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முழுதும் அந்த 5 நட்சத்திர ஹோட்டல் மூடப்பட்டிருந்தது. ஆனால் டாடா நிறுவனம் அந்த ஹோட்டலின் ஒரு பணியாளரைக்கூட வீட்டிற்கு அனுப்பவில்லை. பொதுவாக இம்மாதிரி விபத்து நடந்தால் பாதுகாப்புக்கு அஞ்சி  அந்த ஹோட்டலுக்கு வெளிநாட்டு விருந்தினர்கள்  வரமாட்டார்கள். ஆனால் அந்த 5 நட்சத்திர ஹோட்டல் புதுப்பிக்கப்பட்ட பின்னர்  முன்பிருந்ததைவிட வருகை அதிகரித்தது. இது அந்த நிருவனத்தின் மீது இருந்த நம்பிக்கையால்தான். அத்தகைய நம்பிக்கையை விதைத்து வளர்த்துக்கொண்டிருப்பவர்  ரத்தன் டாடா.

? 'கோ பேக் மோடி'  சொன்னவர்கள் இன்று அவரை வரவேற்கிறார்களே?
– சாந்தா வெங்கட், திருப்பதி
! இரண்டுமே அரசியல்தான். அரசியலில் சில காட்சிகள் நிரந்தமானவை. இதைத்தான் 'அரசு வேறு கருத்தியல் வேறு' என்கிறார் கனிமொழி.

? மண்டேலா வாழ்ந்த  சிறையின் சாவியை பெருந்தொகைக்கு  ஏலமிட்டிருக்கிறார்களாமே?
– முருகன், வாடிபட்டி
! இன்னும் விடவில்லை. அடுத்த மாதம் 28ம் தேதி ஏலம் என்று ஒரு அமெரிக்க ஏல நிறுவனம் அறிவித்திருக்கிறது. விடுதலைப் போராளியின்  தியாக வாழ்க்கையினால் ஒரு சிறையின் சாவி கூட கெளரவம் பெறுகிறது. அந்த ஜெயிலின் தலைமை வார்டனாக இருந்தவரிடம் சாவி மட்டுமில்லை, மண்டேலாவுக்கு அமெரிக்க அதிபர் கொடுத்த பேனா, அவருடைய மூக்குக்  கண்ணாடி  போன்றவை  பெறப்பட்டிருப்பதாகவும், ஏலம் பலகோடி டாலர்களை ஈட்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க அரசு,  "அந்த சாவியும் பொருட்களும் போலி. உண்மையான சாவி அரசிடமிருக்கிறது. இது ஏமாற்று வேலை" என  ஏல நிறுவனத்திற்கு நோட்டிஸ் கொடுத்திருக்கிறது.

? மறுபடியும் பள்ளிகளை மூடுகிறார்களே?
– கண்ணகி, திண்டுக்கல்
! குழந்தைகளைக் காக்க இதைத்தவிர வேறு வழியில்லை. நமக்கு மட்டுமில்லை, உலகின் பல நாடுகளில் இதுதான் நிலை.

? ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டணமாமே?
– சண்முக சுந்தரம், சிதம்பரம்
! ஒரு மாதத்திற்கு ஐந்து முறை உங்கள் வங்கி ஏ.டி.எம்.களில் எடுத்தால் கட்டணமில்லை. அதற்கு மேல் பயன்படுத்தினால் தான் கட்டணம். அதிகரிக்கும் மின்கட்டணம், பாதுகாப்பு செலவுகளினால் கட்டணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏன்  அந்த கட்டணத்துக்கும் ஜிஎஸ்டி. என்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

? ஆரம்பத்தில் 'கோ கொரோனோ' என்று கோஷமிட்டேன், கொரோனோ போய்விட்டது. தற்போது உருமாறிய கொரோனோ வைரஸ் வந்துள்ளதால் 'நோ கொரோனோ! நோ கொரோனோ என கோஷமிடுங்கள்' என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியுள்ளாரே?
– கே. இந்து குமரப்பன், விழுப்புரம்.
! 'கோஷமிட்டு, கைதட்டி, விளக்கேற்றி கொரோனாவை விரட்டிவிடலாம்' என்று இன்னமும்  நம்பும் இவர் போன்றவர்களை நாம் அமைச்சராகப் பெற்றிருப்பது  நாம் பெற்ற வரம்.

? தி.மு.க. அரசின் சிறப்பு அம்சமாக எதைச் சொல்லலாம்?
– மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! முதல்வர் ஸ்டாலினின் சுறுசுறுப்பு;  துறைச்செயலர்களின் வேகம்.

? புக்கர் பரிசு பற்றி?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! சிறந்த ஆங்கில புத்தகத்துகான விருது இது. இலக்கியத்துகான நோபல் பரிசுக்கு இணையாக மதிக்கப்படுகிறது.  இங்கிலாந்தில் ஒரு தனியார் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. பரிசு வழங்கத் தொடங்கப்பட்ட காலத்தில் 'இங்கிலாந்தில் வெளியான புத்தகங்களுக்கு மட்டும்' என்று இருந்ததை பின்னாளில் மாற்றி 'உலகம்முழுவதிலும் வெளியாகும் புத்தகங்களுக்கு' என அறிவிக்கப்பட்டது.  இந்த ஆண்டு இந்தப் பரிசைப் பெறுபவர்  தென்னாப்ரிக்காவை சேர்ந்த எழுத்தாளார் டாமன் கல்கட்.  அவர் எழுதிய   'தி பிராமிஸ்'  என்ற நாவலுக்காகப் இப்பரிசைப் பெறுகிறார். இதுவரை இந்திய எழுத்தாளர்களில் அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, வி.எஸ். நைபால் இந்தப் பரிசைப் பெற்றவர்கள்.

? "எனக்கு முதல்வராகும் ஆசையில்லை. ஆனால் பா.ம.க. ஆளவேண்டும், அதுதான் என் ஆசை" என்கிறாரே அன்பு மணி?
– ரா. சம்பத், திருமங்கலம்.
! சிலரின் கனவுகள் எல்லையில்லாதாது.

? 2022 : குட் ஸ்டார்ட் தானே சார் ?
– நெல்லை குரலோன்
! யாருக்கு கேட்கிறீர்கள். கொரோனாவின் புதிய அவதாரத்துக்குதானே?

? திடீரென்று தோன்றும் சாமியார்கள் ,
சாமியாரிணிகள் ?..!
– மஞ்சுதேவன், பெங்களூரு
!இன்று நாம் அறிந்திருக்கும் சாமியார்கள் எல்லோருமே ஒரு நாள்  திடீரென்று தோன்றியவர்கள் தானே. அவர்களால் நியமிக்கப்பட்ட பக்கதர்களினால் முதலில்  பிரபலமாகிறார்கள். பின்னர் மீடியாவின் விளம்பரத்தால் வளர்கிறார்கள். அதிர்ஷடமிருப்பவர்கள்  கார்ப்ரேட் சாமியார்களாகி பின் கடவுளாகிறார்கள். இல்லாதவர்கள் காணாமல் போகிறார்கள்.

? கருணாநிதி தற்போது இருந்திருந்தால் மத்திய அரசில் இடம் பெற்றிருப்பார் என்கிறாரே ராதா ரவி?
– ஆர்.மாதவராமன்,  கிருஷ்ணகிரி-635001
! அவருக்குத்தெரிந்த அரசியல் அவ்வளவுதான். ஒன்றிய அரசின் அமைச்சரவையில்  இடம்பெற வேண்டியவர்களையும் துறைகளையும் தீர்மானிக்குமிடத்திலிருந்தவர் அவர்  என்பது ராதா ரவி  அறியாத விஷயம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com