அகந்தையை அணுகவிடாதே!

அகந்தையை அணுகவிடாதே!
Published on

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் 'ஸோபான பஞ்சகம்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 'ஸோபானம்' என்றால் 'படிகளின் வரிசை' என்று பொருள். 'பஞ்சகம்' என்றால் 'ஐந்து' என்று அர்த்தம். 'ஸோபான பஞ்சகம்' என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். இதனை 'உபதேச பஞ்சகம்' அல்லது 'ஸாதனா பஞ்சகம்' எனவும் கூறுவர்.

"தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது. அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய். பகவானைத் திருப்தி செய்ய பூஜைகள் செய். இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் 'இது பகவானுக்கு' என அர்ப்பணம் செய்துவிடு.

நீ சத்சங்கத்திலேயே நிலைத்திரு. பகவத் பக்தியை திடமாக்கிக்கொள். சமாதி சட்க சம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய். உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.

மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய். ச்ருதியை பிரமாணமாகக் கொள். வேதங்கட்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு. நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்துகொள். இவ்வறிவு பெற்றபின் அகந்தையை அணுகவிடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.

பசி என்ற நோயைத் தீர்க்க மருந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள். நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்திடு. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதிச் செயல்படு.

பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே. பதவியில்
உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள விரும்பாதே.

ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பரபிரம்மத்தைப் பற்றியே சிந்தித்திரு. பிரஹமும் பூர்ணம், இந்த ஜகத்தும் பூர்ணம், பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஜகத் வந்தபின் எஞ்சியிருப்பதும் பூர்ணம் என அறிந்து பூர்ணாத்மாவினை தரிசனம் செய்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com