“தமிழ்நாட்டில் நிறையப்பேருக்கு எம்.ஜி.ஆர். ஆகணும்னு ஆசை”

“தமிழ்நாட்டில் நிறையப்பேருக்கு எம்.ஜி.ஆர். ஆகணும்னு ஆசை”
Published on

'இடியட்'  திரைப்பட விமர்சனம் 

– லதானந்த்

வேகமாக உயரும் விலைவாசி, தினந்தோறும் ஏறும் பெட்ரோல், டீசல் விலை, பதைபதைக்க வைக்கும் சமையல் எரிவாயு விலையேற்றம், உக்ரைன் – ரஷ்யா மோதல்,  இப்படிப் பல அன்றாட  பாரங்களைச் சுமந்து வருத்தப்படுவோர் 122 நிமிடம் அவற்றையெல்லாம் மறந்து சிரித்துவைத்துவிட்டு வர வேண்டுமா? 'இடியட்' படம் பார்க்காலம்.

கொல்லப்படுபவர்கள் பேயாய் மாறி, ஒரு பாழடைந்த பங்களாவில் உலவுவதும், அங்கே எக்குத் தக்காகச் சிலர் மாட்டிக்கொள்வதும், பின்னர் தப்பிப்பதும்தான் கதை. என்னடா இது? பல நூறு படங்களில் பார்த்துத் தேய்ந்த கதையாயிருக்கிறதே என்கிறீர்களா? ஆமாங்க… ஆமாம்… ஆனால் கதையில் பேய்கள் உட்பட அனைவரும் முட்டாள்களாக இருப்பதுதான் ஹைலைட்! இதுவரை வெளியான பேய்ப் படங்களையெல்லாம் செமையாக நக்கலடித்திருக்கிறார்கள்.

ராம் பாலாவின் திட்டுக்கு துட்டு பாணியிலேயே வந்திருக்கிறது இடியட்.

மெயின் பேய்களுக்கு இடையில், பேயோடு தொடர்புடைய  'நீலகண்டி' என்னும் பெண் பாத்திரம் ஒன்றும் அலைகிறது.

வித்தியாசமான தெலுங்கு ஜமீன் பின்னணியில் ஆரம்பிக்கிறது படம்.

படத்தில் வரும் பாத்திரங்களிலேயே முட்டாளாக இல்லாமல் இருப்பது கதாநாயகி நிக்கி கல்ரானியின் அப்பா மட்டுமே. காவல்துறை அதிகாரிகூட அபத்தத்தின் மொத்த உருவமாகவே வருகிறார். எல்லோரது முட்டாள்தனங்களும் பார்ப்பவர்களுக்குப் பலமான சிரிப்பை வரவழைக்கின்றன.

மிர்ச்சி சிவாவின் அப்பாவான ஆனந்தராஜின் மேதாவித்தனத்துக்கு ஓர் உதாரணம் பாருங்களேன். கபடிப் போட்டிக்காக எல்லைக்கோடு உருவாக்குவார் அவர். அதைத் தாண்டித்தானே கபடி வீரர்கள் விளையாடுவார்கள்? தான் கிழித்த கோட்டைத் தாண்டிவிட்டார் என்பதற்காக சிவாவை வீட்டைவிட்டு வெளியேற்றுகிற அளவுக்கு அதி புத்திசாலி அவர்!

ஆசிய ஜோதி கொண்டுவருபவரை, 'வீட்டைக் கொளுத்தத் தீப்பந்தம் எடுத்து வந்திருக்கிறார்' என்று கட்டிவைப்பார் அறிவாளி ஆனந்த ராஜ்.

இடையிடையே, காம்ப்ளெக்ஸ், ஆன்லைன், லெக் பீஸ் என்ற வார்த்தைகளை வைத்து கடி ஜோக்குகளும் உண்டு.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் டாக்டர், நர்ஸ் ஆகியோருக்குகூட சிகிச்சை தேவைப்படும் என்று நினைக்கும் அளவுக்கு அதகளம் செய்கின்றனர்.

பொதுவாக கதாநாயகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் கதை முடிவதற்குள் அது சரியாகிவிடும் என்பதுதானே மரபு! இதில் மனநலம் பாதிக்கப்பட்ட சிவா கடைசிவரை அப்படியே இருந்துவிடுகிறார்.

சிவாவுடன் சேர்ந்து கூத்தடிக்கும் ரெடின் கிங்க்ஸ்லியின் நடிப்பு அபாரம்! வடிவேலு மாதிரி இவர் நிச்சயம் ஒரு பெரிய ரவுண்டு வருவார். அதேபோல ரவி மரியாவும் அவரது கூட்டாளிகளும், மயில்சாமியும் செய்யும் அலப்பறைகள் நிமிடத்துக்கு நிமிடம் சிரிப்பு வெடிகளை ஓயாது கொளுத்திப்போட்டுக்கொண்டே இருக்கின்றன.

"தமிழ்நாட்டில நிறைப் பேருக்கு எம்.ஜி.ஆர். ஆகணும்னு ஆசை" எனக் குத்தூசி ஏற்றும் வசனங்களும் இருக்கின்றன.

முகத்தில் ஒரு மரு மட்டும் ஒட்டவைத்துக்கொண்டு மாறு வேடத்தில் இருப்பதாக சிவா செய்யும் சேட்டைகள் பழையகாலப் படங்களை உக்கிரமாக நையாண்டி செய்திருக்கின்றன.

சிவா வழக்கம்போல அலட்டிக்காமல் ஸ்கோர் செய்திருக்கிறார்.

குனிந்து வளைந்து நடப்பவர்களைப் பார்த்து, "இவர்கள் மந்திரிகளாகலாம்" என்று ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது. செம டக்கு சார் உங்க டக்கு!

உருவக் கேலிகள் மலிந்திருக்கின்றன, தவிர்த்திருக்கலாம்.

நவீன கிராஃபிக்ஸ் உத்திகள் பொருத்தமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பாராட்டுகள்.

மொத்தத்தில்: இடியட் = படத்தில் வரும் பாத்திரங்களா? அல்லது படத்தைப் பார்ப்பவர்களா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com