தாய் தந்தை கூட மகன் …மகள் வீட்டுக்கு வரும்போது விருந்தாளிகள் ஆகி விடுகிறார்கள்

தாய் தந்தை கூட மகன் …மகள் வீட்டுக்கு வரும்போது விருந்தாளிகள் ஆகி விடுகிறார்கள்
Published on

நியூக்ளியர் ஃபேமிலி

செல்லம் சேகர்

சின்னஜ்சிறிய  குடும்பம் … தற்காலத்தில் இதுதான் சாத்தியமான ஒன்று என்பது நிதர்சனம்.  "கூட்டு குடும்பம்" என்பது  ஒரு பெரிய தோட்டம் . அதில் பல மலர்கள். அனைத்தும் பூஜைக்கு உரியவை.  அவ்வளவு வாசனை. பெரிய தோட்டத்தில் வாசனைமிக்க பல பூச்செடிகள் இருந்தாலும் தற்கால
நடைமுறையில் போன்சாய் மொட்டை மாடி தோட்டம் போல் நியூக்ளியர் குடும்பங்களே பலர்  விரும்பும் தோட்டமாகிறது .

ஆனால்  தனிக்குடித்தனம் என்பது பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களை பிரி(ந்)த்து வந்து  விட்டு கணவன் மனைவி மட்டும் வாழும் தனி வாழ்க்கை.

கூட்டு குடும்பங்களில் வலுத்தவன் கை உயர்ந்து சிறுத்தவன் கை மெலிந்து அங்கு ஒரு பனி போர் என்றும் உண்டு. அது எரிமலை போல் உள்ளே கனன்று கொண்டு ஒரு நாள் வெடிப்பதை தவிர்க்க   தனி குடித்தனத்தில் நமக்கு நாமே பொறுப்புடன் பெரியவர்களிடம் உள்ள அன்யோன்யத்தை அதிகரிக்கலாமே.

உண்மையில் வேலை மாற்றம் காரணத்தால் 80களில் நியூக்ளியர் ஃபேமிலி அதிகம் ஆரம்பித்ததை தொடர்ந்து கிராமத்தில் இருந்து நகரத்திற்கு நகர்ந்த குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர கலாசாரத்திற்கு மாறி 'சம்சாரம் அது மின்சாரம்' பட கதையில் வருவது போல் "நீ சௌக்கியமா… நான் சௌக்கியம்…" என்று கூறுவதே நிஜமாகிப் போனது .

ஒரு பேஷன் வார்த்தையாக ''நியூக்ளியர் ஃபேமிலி'' என்று கூறினாலும் உண்மையில் குழந்தைகள் தாத்தா பாட்டி அருமை … அருகாமை அனைத்தும் இழப்பதே உண்மை.

பல பல புராண கதைகள் சொல்லி குழந்தைகளை பாட்டி  தாத்தாவோடு வளர்க்கும் காலகட்டத்தில் நம் கலாசாரம்… உறவின் சக்தியை உணரச் செய்ய முடிந்தது. ஆனால் நியூக்ளியர் ஃபேமிலி அந்த கணவன் மனைவிக்குள் பொறுப்பு அதிகரிக்க செய்ய உதவுகிறது ……. பொறுப்புடன் நம் குழந்தைகளை நன்கு படிக்க வைக்கவும் , வீடு வாசல் என்று வாழ்வில் செட்டில் ஆகவும் தனி குடித்தனம் வசதி என்று மனதில் பதிந்து போயிற்று.

ஆனால்  இதன் மூலம் பொறுமை… உறவின் மேம்பாடு , அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் அவர்கள் பங்கு இதில் அவர்கள் முழுமையாக ஜெயித்தார்களா என்பது நிச்சயம் கேள்வி குறிதான்?

அதனால் தான் தற்கால இளைய தலைமுறை பெற்றோர்களோடு வாழ்வதையே கூட்டு குடும்பம் என்கிறார்கள். உண்மையில் உடன் பிறந்த சகோதரர்கள் … சகோதரரின் மனைவி , குழந்தைகள் என்று கூட்டு குடும்பம் என்பது மறக்கப்பட்டு  அத்தை,  சித்தப்பா உறவே தொலைந்து போய் கொண்டு இருக்கிறது …. இவர்களே அந்நியர் ஆகிவிடுகிறார்கள் …பிறகுதானே பெரியப்பா ,சித்தப்பா உறவுகள்?

இன்று அந்த தாய் தந்தைகூட மகன் …மகள் வீட்டுக்கு வரும்போது விருந்தாளிகள் ஆகி விடுகிறார்கள். காலத்தின் மாற்றம்.

இதற்கு ஒரே வழி நியூக்ளியர் ஃபேமிலிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில முறைகள். பாங்கில் எப்படி கட்டாய சேமிப்பு வருங்கால வாழ்க்கைக்கு உத்ரவாதமோ அதுபோல   நம் சந்ததிகளுக்கு உறவின் மேம்பாட்டை , கலாசாரத்தின் பெருமையை எதிர்கால சேமிப்பாக எடுத்து சொல்ல சில செயல்களை நாம் செய்ய வேண்டும்.

மாதம் ஒரு ஞாயிறு … பாட்டி தாத்தாவோடு உள்ளூரில் இருந்தால்  நேரிலோ வெளியூர் வெளி நாட்டில் இருந்தால் போனிலோ கண்டிப்பாக "டே வித் பாட்டி தாத்தா" என்ற நடைமுறை வைத்து கொண்டால் அதை கலாசார EDUCATION  டே என்று அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லலாம்.

அதைப்போல வருடத்தில் இரு முறை நிச்சயம் COUSINS மீட் மூலம் RELATIONSHIP BONDING அதிகரிக்கலாம் . இரண்டு  வருடம் ஒருமுறை நிச்சயம் அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் குலதெய்வ வழிபாட்டை கூட்டு வழிபாடாக செய்வதன் மூலம் ஒரு மினி கூட்டு குடும்ப வாழ்க்கை முறையை அடுத்த தலை முறைக்கு உணர்த்தலாம் .

இன்று GATED COMMUNITY இல் கூட்டாக பல  நியூக்ளியர் வாழ்ந்தாலும்  நம் அடுத்த தலைமுறைக்கு உறவினர்கள்  கூடி வாழ்தலில் இருக்கும் கோடி நன்மையை புரிய வைக்க  நியூக்ளியர் ஃபேமிலியில் உள்ள அனைவரும் இந்த யோசனைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com