இறைவன் தந்துள்ள பெரும் பேறு இது.

இறைவன் தந்துள்ள பெரும் பேறு இது.
Published on

நேர்காணல் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

நூற்றியொரு தடவை ரத்த தானம் தந்தவர்….!!!

ஒருவர் தன் உடலில் இருந்து யாரோ ஒருவருக்கு ரத்தம் தருவதுதான், 'ரத்த தானம்' ஆகும். நன்கு ஆரோக்கியமாக உள்ள ஒரு நபர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் தரலாம். ஒரு தடவைக்கும் அடுத்த தடவைக்கும் இடையே இடைவெளி குறைந்தது மூன்று மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும். அந்த வகையில் ஒருவர் தன் வாழ்நாளில் நூற்றியொரு தடவை ரத்த தானம் தந்துள்ளார். சரலூர் ஜெகன். அவருக்கு வயது அறுபத்தியொன்று. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள கிராமம் சரலூர்.

இப்போ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் நான் பேக்கரி கடைகளில் வேலை பார்த்தேன். அப்புறம் சைக்கிள் கடை. ஒரு கட்டத்தில் ஒரு வருஷம் டாஸ்மார்க் பாரிலும் வேலை பார்த்தேன். பிறகு மீண்டும் பேக்கரி கடை வேலைக்குச் சென்றுவிட்டேன். இப்போது எந்தக் கடையிலும் வேலையில் இல்லை. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகப் பொதுநல சேவைகளில் என்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகிறேன். எனக்கு 1991ல் திருமணம். மனைவி சபிலா. ஒரு மகன் பிரபு.

முதன்முதலாக எப்போது ரத்த தானம் தந்தீர்கள்?

1991ல் எனக்குத் திருமணம் என்று சொன்னேன் அல்லவா? எனக்குத் திருமணமாகி மூன்று மாதங்களில் என் மாமனாருக்கு உடல் நிலை சரியில்லை. அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகப் போயிற்று. டாக்டர்கள் அப்போது அவருக்கு அவசியம் ரத்தம் தேவை என்று சொல்லி விட்டார்கள். அப்போதெல்லாம் ரத்த தானம் தருவது குறித்து  போதிய விழிப்புணர்வு இல்லை. அவரது ரத்தம் பி நெகடிவ் க்ரூப். என்னோட க்ரூப் ரத்தம் பி நெகடிவ். பொதுவாக பி நெகடிவ் க்ரூப் ரத்தம் அபூர்வம். பி க்ரூப் ரத்தம் உள்ள நூறு நபர்களில் எண்பத்தைந்து நபர்களுக்கு பி பாசிடிவ் பிரிவு இருக்கும். மீதம் பதினைந்து பேர்களுக்கு தான் பி நெகடிவ் இருக்கும். உடனே நான் என் மாமனாருக்கு ரத்தம் கொடுத்தேன். அறுவை சிகிச்சை முடிந்து அவர் உடல் நலமாகிவிட்டார். என் வாழ்வில் முதன்முதலாகத் தந்த ரத்த தானம் அது தான்.

 எப்படி அதனைத் தொடர்ந்தீர்களா? இனிமேல் ரத்த தானம் தரலாமா? வேண்டாமா என யோசித்தீர்களா?

ரத்த தானம் குறித்து நிறைய விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நமது ரத்தம் ஏ, பி, ஏபி, ஓ என நான்கு வகைகள். அவைகள் ஒவ்வொன்றிலும் பாசிடிவ், நெகடிவ் என இரண்டு பிரிவுகள். ஓ வகை ரத்தம் எல்லா க்ரூப்புக்கும் பொருந்தும். அதாவது ஓ வகை பாசிடிவ் பிரிவு, மற்ற ரத்த வகை பாசிடிவ் பிரிவுக்கும், ஓ வகை நெகடிவ் மற்ற ரத்த வகை நெகடிவ் பிரிவுக்கும் பொருந்தும். இதில் எனது ரத்த வகை பி நெகடிவ். இந்தப் பிரிவு ரத்தம் கிடைப்பது சற்று சிரமம் எனத் தெரிந்துகொண்டேன். "இனிமேல் ரத்த தானம் தரலாமா வேண்டாமா" என்று நான் யோசிக்கவே இல்லை. தேவைப்படுபவர்களுக்கு அவசர காலத்தில் இனி தொடர்ந்து ரத்த தானம் தருவது என முடிவெடுத்து செயல்பட ஆரம்பித்தேன்.

அடிக்கடி ரத்த தானம் தருவதால் உடல் சோர்வு அடைந்து விடாதா?

அது பெரும்பாலோரின் கற்பனை. அது அவ்வாறு அல்ல. சராசரியாக நம் உடலில் ஐந்து லிட்டர் ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும். அதிலுள்ள ஹீமோகுளோபின் அணுக்களுக்கு தொண்ணூறு நாட்கள் தான் ஆயுள். பின்னர் உடனே அவைகள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும். அதுபோல ரத்த தானமும் தொண்ணூறு நாட்களுக்கு மேல் இடைவெளி விட்டுதான் மீண்டும் ரத்த தானம் தரவேண்டும். ஒரு நபர் ஒரு யூனிட் ரத்தம் தரலாம். ஒரு யூனிட் என்பது முந்நூற்றைம்பது மில்லி ரத்தம் ஆகும். ஒரு நபர் ஒரு தடவைக்கு முந்நூற்றைம்பது மில்லி ரத்தம் தருவதால் அவருக்கு உடல் சோர்வோ அல்லது களைப்போ ஏற்படுவதில்லை.

யார் யார் ரத்த தானம் தரலாம்? யார் யார் தரக் கூடாது?

ஒரு சொட்டு ரத்தத்தில் பன்னிரெண்டரை மில்லி கிராம் சிவப்பணுக்கள் உள்ளவர்கள் ரத்த தானம் தரலாம். ஒரு தடவை ரத்த தானம் தந்ததற்கு அடுத்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரே ஆண்கள் ரத்த தானம் தரலாம். இதுவே பெண்களுக்கு நான்கு மாதங்கள் கடந்தாக வேண்டும். இயல்பாகவே ரத்த தானம் தருபவர்களில் பெண்கள் சற்றுக் குறைவு.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், தாய்ப்பால் புகட்டும் பெண்கள் ஆகியோர் ரத்த தானம் தரக் கூடாது.

பதினெட்டு வயது முதல் அறுபத்தைந்து வயது வரை ஆரோக்கியமாக இருப்பவர்கள் ரத்த தானம் தரலாம்.

நீங்கள் இதுவரை எத்தனை தடவை ரத்த தானம் தந்துள்ளீர்கள்? அதில் உங்களால் மறக்க முடியாத ரத்த தானம் எது?

கடந்த முப்பது ஆண்டுகளில் நூற்றியொரு தடவை நான் ரத்த தானம் தந்துள்ளேன். இதில் சமீபத்தில் இரண்டு வயது குழந்தைக்கு ரத்த தானம் தந்திருந்தேன். அந்தக் குழந்தைக்கு ரத்த சோகை நோய். அந்தக் குழந்தைக்கு பி நெகடிவ் க்ரூப் ரத்தம் நூறு மில்லி தேவை என்றார்கள். சமீபத்தில் கடைசியாக அந்தக் குழந்தைக்குதான் ரத்தம் தந்தேன். குழந்தை நன்றாகித் தேறிவிட்டது. இது நான் தந்திருக்கும் நூற்றியோராவது ரத்த தானம் ஆகும்.

என்னால் மறக்க முடியாத ரத்த தானங்கள் அவைகள். அதனைச் சாதனை என்றும் கூறுகிறார்கள். 1991ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம். அந்தப் பெண்ணின் பெயர் செல்வி. அந்தப் பெண்ணுக்கு பி நெகடிவ் க்ரூப். நான் ரத்த தானம் தந்தேன். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செல்விக்கு ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாகிறாள். அவள் பெயர் ஜெயா. அதற்கு திருமணம் ஆகிறது. 2௦13ல் ஜெயாவுக்குப் பிரசவ காலம். அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இந்தப் பெண்ணுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. இதற்கும் பி நெகடிவ் க்ரூப் ரத்தம். ஜெயாவுக்கும் நான் தான் ரத்த தானம் தந்தேன். அறுவை சிகிச்சை முடிந்து நல்லபடியாகக் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம். ஆக 1991ல் செல்வி என்கிற பெண்ணுக்கு ரத்த தானம் தந்துள்ளேன். அதே செல்வியின் மகள் ஜெயாவுக்கு 2௦13ல் ரத்த தானம் தந்துள்ளேன். தாயக்கும், 22 ஆண்டுகள் கழித்து அதே தாயின் மகளுக்கும் ரத்த தானம் தந்துள்ளேன். இறைவன் தந்துள்ள பெரும் பேறு இது எனக்கு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com