ஆன்லைன் ரம்மி என்பது ஒரு வகை எலெக்ட்ரானிக் போதை

ஆன்லைன் ரம்மி என்பது ஒரு வகை எலெக்ட்ரானிக் போதை
Published on

? ஆன்லைன் ரம்மிக்கு தேசிய அளவில் தடை கொண்டு வரத் தடையாக இருப்பது எது?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

நமது சட்டத்திலுள்ள ஓட்டைகள். நீதிபதிகளின் கருணைப்பார்வை, அரசியல் பின்புலமுள்ள லாபிக்கள்.  இந்தியாவில் ஆன்லைன் ரம்மியை வரைமுறைப் படுத்துவதற்கு நிலையான சட்டங்கள் இல்லை. சில மாநிலங்களில் மட்டும் சில இணையதளத்தை ப்ளாக் செய்தாலும் வி.பி.என். மூலம் இயக்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆகையால், மக்கள்தான் முதலில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மி என்பது ஒரு வகை எலெக்ட்ரானிக் போதைதான். அதற்குள் போய்விட்டால் மீண்டு வருவது கடினமாக இருக்கும்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அவசரச் சட்டம் பிறப்பிக்கும் வகையில் அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அதன் அறிக்கையை அரசிடம் கொடுத்திருக்கிறது. நல்ல காலம் பிறக்கும், தமிழ்நாடு இந்தியா முழுவதற்கும் வழிகாட்டும்  என நம்புவோம்.

? அக்னிபத் திட்டத்தின் மூலம்  நான்கு ஆண்டுகளுக்குப்பின் அரசுப்பணிகளுக்கு ஒதுக்கிடு உத்தரவாதம் இருக்கும்போது ஏன் எதிர்க்கிறார்கள்?
– சகிரா ராஜேந்திரன், விருதுநகர்

இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மைதான். மத்திய அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வங்கிகளிலும் முன்னாள் ராணுவத்தினருக்கென இட ஒதுக்கீடுகள் ஏற்கெனவே உண்டு. இது புதிய விஷயம் இல்லை. ஆனால், உண்மையில் அவை நிரப்பப்படவே இல்லை. வெறும் எழுத்து வடிவில்தான் இருக்கிறது.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமே ஓரளவுக்கு இந்த இட ஒதுக்கீட்டை ராணுவத்தினருக்கு வழங்கியுள்ளன. மற்ற எந்தத் துறைகளும்  முன்னாள் ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ஒழுங்காக கடைப்பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு(2020) மத்திய அரசுப்பணிகளில் ஒதுக்கப்பட்டது  20%. ஆனால், நிரப்பப்பட்டிருப்பது 2.66% மட்டுமே.  ஆயுதப்படையில் ஒதுக்கப்பட்டிருப்பது 19% . ஆனால், நிரப்பப்பட்டிருப்பது 0.47% மட்டுமே. அதனால்தான் அரசின்  இந்த வாக்குறுதிகளை நம்ப மறுக்கிறார்கள்
நம் இளைஞர்கள்.

? உச்ச நீதிமன்றம் நுபூர் சர்மாவை கண்டித்திருக்கிறதே?
– அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை

வெறும் கண்டிப்பில்லை, கடுமையான வார்த்தைகளினால் சாடியிருக்கிறது. நுபூர் ஷர்மா தன் செயல்களுக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும். அவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் இந்த அளவு கலவரங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காக அவர் தேசத்தின் முன் மன்னிப்பு கேட்க வேண்டும்,' என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. ஆனால், இதற்கு முன்னர் இப்படிப்பட்ட கருத்துக்களைப் பலர் வெளிப்படுத்தி, அதன் மூலம் சட்டம் ஒழுங்குப் பிரச்னை வந்தபோது, நீதிமன்றம் கருத்து சுதந்திரத்தின் பக்கம் மட்டுமே நின்றது.  மாறாக  இம்முறை உச்ச நீதிமன்றத்தின் கருத்து மத நல்லிணக்கத்தைச் சரி செய்ய எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. மத வெறுப்பினை ஊக்குவிக்கவே உதவப் போகிறது. கூடவே "கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை மேலும் நெறிக்கவும் உதவப் போகிறதோ" என்ற அச்சம் எழுகிறது.

? "அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் இல்லை" என்று அறிவித்துவிட்டார்களே?
– ஜோஷ், அயன்புரம்

2021 ஜனவரி 9 ஆம் தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப் பாளராக எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டனர். இந்த தாற்காலிக நியமனங்கள் அடுத்த பொதுக்குழுவில் உறுதிசெய்யப்படும் என்றார்கள்.

அந்தத் தீர்மானமும் இப்போது பொதுக்குழு நடக்காமலேயே   நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், "இதுவரை இந்த இணைப்பாளர்களின் செயல்கள் அனைத்தும்  பொதுத்தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தியது உட்பட அனைத்தும்  நிராகரிக்கப்படுகிறது" என்று பொருள். பெரும்பான்மை பலம் இருப்பதாலேயே இ.பி.எஸ். அணி அவசரப்பட்டுச் செய்யும் காரியங்களினால் சட்ட சிக்கல்களில் சிக்கப்போகிறார்கள்.

? நடிகர் சூர்யா ஆஸ்கர் விருது கமிட்டியில் இடம் பெறப்போகிறாராமே?
– வர்ஷணி பிரகாஷ் பெங்களூரு.

தமிழ் சினிமாவை நேசிக்கும் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். ஆஸ்கர் விருது என்பது ஒவ்வொரு கலைஞனும் பிரம்மிப்பாக பார்க்கும் ஒரு விஷயம். சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படம் ஆஸ்கர் விருதிற்குப் பக்கத்தில் சென்று மிஸ் செய்தது.

தற்போது  ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைந்து பணியாற்ற 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்தியாவின் உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு வந்துள்ளது. "ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர்" என்ற பெருமையைப் பெற இருக்கிறார்… வாழ்த்துவோம்.

? பல  இடங்களில்   பிரம்மாண்டமான  தெய்வச்சிலைகளை  நிறுவி  வழிபடுகிறார்களே?
– கோகிலன், நத்தம்

அவசியமற்றது.  நம் நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கான புராதனக் கோயில்கள் சரியாகப்  பராமரிக்கப்படாமலிருக்கும் நிலையில் இது தேவையற்ற  செயல். பெரும்பாலும் இத்தகைய சிலைகள்  அதை  அமைத்தவர்களின் பெருமையைப் பேசும் சின்னங்களாகத்தானிருக்கின்றன.

? தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள  குழப்பங்களுக்கு யார் காரணம்?
– K.R.G.ஸ்ரீராமன், பெங்களூரு – 560 077

நிச்சயமாக இரு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்தான்.

? மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே  ஆட்சி கவிழ்ந்ததற்கு  உண்மையான காரணம் என்ன?
-என்.கே.சுப்ரமணி,  சென்னை

ஒரே பதவியில் இருவருக்கும் உள்ள ஆசையின் விளைவு.

? G 7 மாநாடு வெற்றிதானே?
-ஆரோக்கியதாஸ்,  தேனி

உக்ரைன் போர் உச்சத்திலிருக்கும் சூழலில் "போரை முடிவுக்குக் கொண்டு வர உறுதியான திட்டங்கள் அறிவிக்கப்படும்" என்ற எதிர்பார்ப்புகள்.  வழக்கமான சம்பிரதாய  வாசகங்களுடன் கூடிய  அறிக்கையாக ஏமாற்றத்தில் முடிவடைந்தது.   'ஜி 7 நாடுகள்' என்ற கூட்டமைப்பில் இந்தியா இல்லாவிட்டாலும்  'அதை ஒதுக்க முடியாது' என்ற நிலை ஏற்பட்டிருப்பது தான் நமக்குக் கிடைத்த வெற்றி.

?  "தமிழையும், தமிழர்களின் பெருமையையும் உலகறியச் செய்தவர் பிரதமர் மோடி" என்று அண்ணாமலை கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி – 605001

மோடி பிரதமராவதற்கு முன் தமிழனையும் அவன் பெருமைகளையும் உலகில் யாருக்கும் தெரியாது  என்பதுதான் அவர் அறிந்த உலகம்.

? 'அரசுப் பள்ளி நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களை விருந்தினராக அழைக்கும்படி ' பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான் குளம்.

அப்போதாவது தங்கள் தொகுதியிலிருக்கும் பள்ளிகளின் நிலைமையைப் பார்க்கட்டும் என்ற நல்லெண்ணம்தான்.

? "ஆன்மிகமும் காவியும் இல்லாமல் தமிழ்நாட்டின் கலாசாரம் இல்லை" என்ற ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து பற்றி…
– எம். நிர்மலா இராமதாஸ், ரங்கநாதபுரம்

காவியில்  கலாசாரம் இருப்பதில்லை.  காவியங்களிலிருக்கிறது.

? 50க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகளைப் பணி மாறுதல் செய்த பின் அரைகுறை ஆவணங்களை வைத்துக்கொண்டு அண்ணாமலை பொதுவெளியில் சவால் விடுவது குறைந்திருப்பதைக் கவனித்தீர்களா?
– ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்

அரசியல்வாதிகள் பொதுவெளியில்  சவால் விட அதிகாரிகளின் துணை அவசியமில்லை. ஏனென்றால் அத்தகைய சவால்கள் மற்றவரால் ஏற்கப்பட்டதும் இல்லை.  சவால் விடுபவர்களால் நிருபிக்கப்பட்டதும் இல்லை.

? தராசார் நிலவுக்கு சென்றால் என்ன செய்வார்?
– நெல்லைகுரலோன்,   நெல்லை

அடுத்த வார நீங்கள் கேட்டவைக்கு
இ – மெயில்கள் வர  இணைய இணைப்புகள்  இங்கு ஒழுங்காக கிடைக்குமோ என சிந்தித்துக்கொண்டிருப்பார்.

? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன ?
– எஸ். ராமதாஸ், வாணரப்பேட்டை, புதுச்சேரி 

கவுன்சிலில் இருக்கும் உறுப்பினர்கள் சரியான முறையில் சிந்திப்பதில்லை என்பதுதான்.

?  "எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இன்னும் அ.தி.மு.க.வில் இருக்கிறார்கள், தேவைப்படும்போது வெளியில் வருவார்கள்" என்று டி.டி.வி. தினகரன் கூறியிருப்பது பற்றி…
 டாக்டர். இரா. அருண்குமார், புதுச்சேரி

 அவர்கள் எல்லாம் ஸ்லீப்பிலிருந்து விழித்துக்கொண்டு   சென்ற இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டார்கள் என்பது இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும்  இவருக்குத் தெரியாது.

 ? ஜனாதிபதி  தேர்வில்   உங்கள்  ஆரூடம்  என்ன ?
– சேஷன் ராமரத்தினம், குணசீலம்

அனைவரும் அறிந்த விஷயத்துக்கு ஆருடம் எதற்கு சார்?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com