இது இந்தியாவின் பெருமை

இது இந்தியாவின் பெருமை
Published on

வினோத்

இந்தியாவின் கடற்படை வரலாற்றில் இதுவரை கட்டப்பட்டதில் மிகப் பெரியதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலுமான ''INS விக்ராந்த்" கப்பலை பிரதமர் நரேந்திர மோதி  அண்மையில்  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அதிநவீன ஆட்டோமேஷன் அம்சங்களுடன் கூடிய போர்க் கப்பலின் செயல்பாடுகளை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல் ஐ.என்.எஸ் விக்ராந்த்.

சமஸ்கிருதத்தில் 'விக்ராந்த்' என்றால் 'துணிச்சலானவர்' என பொருள். 'விக்ராந்த்' என்ற பெயர், சில பத்தாண்டுகளுக்கு முன்பே நம்மில் பலருக்கு அறிமுகமானது.  இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்தப் பெயரில்தான் அழைக்கப்பட்டது. கடற்படை சேவையில் இணைய தயார் நிலையில் விக்ராந்த் போர் கப்பல் பிரிட்டிஷ் கடற்படையிடம் இருந்து 1961இல் இந்திய கடற்படை சேவையில் சேர்க்கப்பட்டபோது, அந்தக் கப்பல் ''ஐ.என்.எஸ். விக்ராந்த்" என அழைக்கப்பட்டது. 1997இல் அந்த கப்பல் அதன் சேவையை நிறைவு செய்தது.

அதைத்தொடர்ந்து, இன்றைய விக்ராந்த் கப்பல் சுமார் 1,700 வீரர், வீராங்கனைகளின் பணி வாழ்விடமாக விளங்கப் போகிறது. இதுநாள் வரை இந்தக் கப்பல் அதன் கட்டுமான பணிக்காக 2,000 ஊழியர்களுக்கு வேலை கொடுத்து வந்திருக்கிறது.

விக்ராந்த் கப்பலுக்குள் வெவ்வேறு பகுதிகள்  உள்ளன. உள்ளே 2,300க்கும் மேற்பட்டோர் இப்போது வேலை செய்கிறார்கள். கப்பலுக்கு உள்ளே நுழைந்த மறுகணமே இது ஒரு கப்பல் என்பதை நீங்கள் எளிதாக மறந்து விடுவீர்கள். ஆம் அது ஒரு குட்டி நகரம்.

262 மீட்டர் நீளம், கிட்டத்தட்ட 60 மீட்டர் உயரம் இருக்கும் இந்தக் கப்பல் நடுக்கடலில் பயணம் செய்யும்போது, எவ்வளவு உயர அலைகள் வந்தாலும் அதன் தாக்கம் உள்ளே தெரியாது. அதுவே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தால், கப்பலுக்குள் எந்த சலனமும் இருக்காது. விசாலமான பாதைகளும் ஏணிகளும் கப்பலை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் இணைக்கின்றன. அதனால் எளிதாக இதனுள் நடமாடலாம்.

இது வெறும் போர் கப்பல் மட்டுமின்றி, இதில் 30 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வசதியைப் பெற்றுள்ளது.

விமான தளத்தின் அளவு கிட்டத்தட்ட 12,500 சதுர மீட்டர், கிட்டத்தட்ட இரண்டரை ஹாக்கி மைதானங்களின் அளவைக் கொண்டது. ஒரே நேரத்தில் 12 போர் விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்களை இங்கிருந்து இயக்க முடியும். இது நமது முந்தைய விமானம் தாங்கி கப்பல்களைவிட பெரியது.  ஆனால், உலகில்  விமானந்தாங்கி கப்பல்களில் இதற்கு அண்ணன்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

பிரிட்டன் ராயல் கடற்படைக்கு சொந்தமான 'அரசி எலிசபெத்' என்ற பெயரிலான போர்க்கப்பல், சுமார் 40 விமானங்களைத் தாங்கியிருக்கிறது.

அமெரிக்க கடற்படையின் 'நிமிட்ஸ் கிளாஸ்' கப்பல் 60 விமானங்களைத் தாங்கிச் செல்லும் ஆற்றல் கொண்டுள்ளது.

விக்ராந்தின் ஹாங்கரில் இரண்டு ரஷ்ய தயாரிப்பு விமானங்களான மிக் 29K போர் விமானம் மற்றும் கேமோஃப் 31 ரக முன்னெச்சரிக்கை ஹெலிகாப்டர் பின் முனையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மற்ற போர்க் கப்பலைப் போல இல்லாமல், ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் வழங்கும் நன்மை, பயணத்தின் தேவைக்கேற்ப ஒரு முழு விமான நிலையத்தையும் இயக்கும் ஆற்றலைக் கொண்டதாக இறுக்கும்.

விக்ராந்தின் சேர்க்கையுடன், இந்தியா இப்போது இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை கொண்டுள்ளது. ஆனால், இந்திய கடற்படையோ இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து மேலும் ஒரு போர்க்கப்பல் தேவை என்கிறது.

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் – சில தகவல்கள்:
  • ராணுவத் துறையில் தற்சார்பை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாக "ஐஎன்எஸ் விக்ராந்த்" என்ற முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாகும்.
  • இந்திய கடற்படையில் ஏற்கெனவே "ஐஎன்எஸ் விக்ராந்த்" என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இருந்தது. இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்தக் கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1961 முதல் 1997-ம் ஆண்டு வரை பணியாற்றியது. 1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் போரில் இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், 2002 முதல் 2012-ம் ஆண்டு வரை அருங்காட்சியகமாக இருந்தது. அதன்பிறகு பயனற்ற நிலைக்கு சென்றதால், கடந்த 2014-15-ல் இந்தக் கப்பல் உடைக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படையில் அதே பெயரில் புதிய விமானம் தாங்கி கப்பலை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
  • புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதன் மொத்த எடை 40,000 டன்கள். கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும். மொத்தம் 14 அடுக்குகள் கொண்ட இந்தக் கப்பலில் 2,300 அறைகள் உள்ளன. கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் கப்பலில் இருப்பார்கள்.
  • 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது.
  • ரூ.20,000 கோடி செலவில், கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பலில் பல நவீன தானியங்கி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 100க்கும் மேற்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்தக் கப்பலில் இடம்பெற்றுள்ளன.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com