அரசின் கல்விக் கொள்கைகளும் அவதிப்படும் மாணவர்களும்

அரசின் கல்விக் கொள்கைகளும் அவதிப்படும் மாணவர்களும்
Published on

தலையங்கம்

2014ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு கல்விக்கொள்கையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டு உள்ளது. "ஒரே நாடு, ஒரே கல்வி" என்ற அடிப்படையில்  அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. ஆனால், இதை ஒருமனதாக எல்லா மாநிலங்களும் ஏற்க தயாராகயில்லை. மாநிலங்கள் தங்கள் உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடுவதாகக் கருதுகின்றன.

ஒன்றிய அரசு ஒவ்வொரு முறையும் கல்வியை மேம்படுத்தப்போவதாக அறிவிக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் மாணவர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கட்டணக் கொள்ளையை குறைக்கப்போவதாக அறிவித்து நாடு முழுவதும் கட்டாய நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு எந்தவித மதிப்பும் இல்லாமல் நீட் மதிப்பெண் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு இப்போது மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகிறது. தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு மாணவன் படிக்க வேண்டும் என்றால் குறைந்தது
ரூ.1 கோடி இல்லாமல் அங்கு படித்து முடிக்க முடியாது. இன்றைய மருத்துவ படிப்பின் யதார்த்த நிலை இதுதான்.

அடுத்தக்கட்டமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலையிலும் மாணவர் சேர்க்கைக்கு "கியூட்" தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு, முதல்கட்டமாக இந்த ஆண்டு மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனோவால் கடந்த கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் இரண்டு பருவமாக நடத்தப்பட்டன. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்ட பின்னரும், சி.பி.எஸ்.இ.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் பல்வேறு பல்கலையில் படிக்க விண்ணப்பித்த மாணவர்கள் தவித்தனர். இறுதியாக ஜூலை 22ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதற்குள் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டு விட்டதால் இப்போது வரை உரிய கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தவிக்கின்றனர்.

இப்படி கல்விக்கொள்கைகளில் "சீர்திருத்தம்" என்ற பெயரில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளால்  மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருக்கிறார்கள்.

தொலைநோக்குடன் திட்டமிட்டு, சம்பந்தபட்ட அனைவருடன் விவாதித்து கலந்தாலோசித்து அறிமுகப்படுத்த வேண்டிய திட்டங்களை இப்படி அள்ளிதெளித்த கோலமாக அவசரமாக செயல்படுத்த முயற்சி செய்வது  மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆபத்தில் முடியும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com