இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்

இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்
Published on

? அ.தி.மு.க. வழக்கில் நீதிமன்றத்தில் மாறி மாறி தீர்ப்பு வருகிறதே?
– மன்னை நடராஜன், திருச்சி

! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: தர்மம் மறுபடி வெல்லும். மறுபடி கவ்வும்

? இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தாய் மண்ணுக்கு திரும்பி இருக்காரே?!
– நெல்லை குரலோன்

! அவர் தன் நட்பு நாடுகள் என்று கருதியவை எதுவும் அவருக்கு அடைக்கலம் தரத் தயாராகயில்லை, இலங்கையில் இப்போது ஆளுவோரின் ஆதரவு அவருக்கு இருக்கிறது.

? டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்
– இராமதாசு, திருச்சி

! முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அண்மையில்  கண்ணீர் மல்க டென்னிசில் இருந்து விடைபெற்றார். இந்த அமெரிக்க ஓபன் போட்டியுடன் விளையாட்டில் இருந்து ஒதுங்கி தனது அடுத்த கட்ட விஷயங்களில் கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருக்கிறார்.  அவர் தனது முதலாவது கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றிய அமெரிக்க ஓபன் போட்டியிலேயே கனத்த இதயத்துடன் ஓய்வு பெற்றார். 'எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் ஒரு போதும் விட்டுக்கொடுத்தது கிடையாது. இந்த போட்டியிலும் நான் விட்டுவிடாமல் இறுதி வரை வெற்றிக்காக போராடினேன். எனது வாழ்க்கையில் இது மிகவும் நம்ப முடியாத அருமையான பயணமாகும். எனது டென்னிஸ் வாழ்க்கை பெற்றோரிடம் இருந்து தொடங்கியது. அவர்கள் எல்லாவற்றுக்கும் தகுதியுடையவர்கள். அவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என்ற

அவரது ஆட்டத்தை காண 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குழுமியிருந்தனர். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் இந்த மாத இறுதியில் 41-வது வயதை எட்டும் செரீனா வில்லியம்ஸ் டென்னிசில் அதிக ஆண்டுகள் கொடிகட்டி பறந்தார். அவர் 319 வாரங்கள் ஒற்றையர் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்துள்ளார். 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை (ஆஸ்திரேலிய ஓபன்-7, பிரெஞ்ச் ஓபன் -3, விம்பிள்டன்-7, அமெரிக்க ஓபன்-6) வென்று இருக்கிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் 14 முறையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2 தடவையும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை தனதாக்கி இருக்கிறார்.

? அ.இ.அ.தி.மு.க சிதைந்து போனால் ஆபத்தா?
– மஹாலஷ்மி, திண்டுக்கல்

! அ.இ.அ.தி.மு.க சிதைந்து போனால் திராவிட அரசியலே பலவீனப்பட்டுவிடும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றெல்லாம் பலரும் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல.  அ.இ.அ.தி.மு.க அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை இழந்துவிட்டது. இனிமேல் அதனை மீட்டெடுப்பது சட்ட ரீதியாக சாத்தியமானாலும், தேர்தல் களத்தில் வெற்றியை ஈட்டுவது கடினம். தொடர்ந்து தோல்விகளை தாங்கிக்கொண்டு நிலைத்து நிற்க அது தி.மு.க அல்ல. அதை சாதிக்க கலைஞர் போன்ற வரலாற்று ஆளுமையும் அங்கில்லை.

? அன்னா ஹசாரேயின் கடிதம் கெஜ்ரிவாலுக்கு..!
– மஞ்சு வாசுதேவன், பெங்களூரு

! அவ்வப்போது  தானும் களத்தில் இருக்கிறேன் என்று நினைவுபடுத்திக்கொண்டிருப்பவர்.

? மனிதர்களைப் போல மிருகங்களுக்கும் கடவுளும் பக்தியும் உண்டா?
– மலர்விழி, சேலம்

! வாய்ப்பில்லை. கடவுள், பக்தி என்பவற்றை படைத்தவன் ஆறறிவு பெற்ற மனிதன்.   நல்லவேளை மிருகங்களுக்கு கடவுளும் இல்லை, வழிபாடும் இல்லை. இல்லாவிட்டால் அவை மனிதனை தங்கள் கடவுளுக்கு பலி கொடுத்துக்கொண்டிருக்கும்.

?  "மகாத்மா காந்திக்கு பிறகு மக்களின் இதயத்தை புரிந்து கொள்ளும் தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது மோடி தான்" என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறாரே…
– ஜெ. கிருஷ்ணதேவு, புதுச்சேரி – 605107

! சற்றுப் பொறுங்கள். இன்னும் சில நாட்களில் மோடி தான் தன் வாரிசு என காந்தி அறிவித்திருந்ததை காங்கிரஸ் இருட்டடிப்புச் செய்துவிட்டது என்பார்.

? கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் நீதிமன்றத்தில் வேறு பாதையில் போகிறதா?
– சி. கார்த்திகேயன்,
சாத்தூர் – 626 203

! குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கோர உரிமையுண்டு.  அதை அனுமதிப்பதும், நிராகரிப்பதும் நீதிபதியின் உரிமை. ஆனால், இந்த வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்னரே நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

? தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை என்று முதல்வர் கூறியுள்ளாரே..
– வாசுதேவன் பெங்களூரு

! "ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைகளை எதிர்க்கிறோம்" என்று சொல்லும் போது "அப்படியானால் உங்கள் கொள்கை என்ன" என்று கேட்பவர்களுக்கு அதிகார பூர்வமாக அறிவிக்க இப்படி ஒரு  கொள்கை அவசியமாகிறது.

? இந்தியாவில் மீண்டும் மன்னர் ஆட்சி வந்தால்  எப்படி இருக்கும் ?
– சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

! "இப்போது என்ன ஆட்சி நடக்கிறது" என்று நினைக்கிறீர்கள்?

  ? "2047-ம் ஆண்டுக்குள், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளாரே…
 எம். நிர்மலா, வாணரப்பேட்டை

! 'வல்லரசு' என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது  'வளர்ந்த நாடு' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  அதுவரை  அவரது கட்சியின் ஆட்சி தொடரும் என அவர் நம்புகிறார் போலும்.

? கை தட்டுவதற்கு பிள்ளையார் சுழி போட்டது யார்? அல்லது எந்த தேசம்?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

! விலங்குகளை விரட்ட ஆதிமனிதன் ஓசை எழுப்ப கண்டுபிடித்த எளிய ஆயுதம். தொடர்ந்து வந்த காலங்களில்  உணர்வுகளைச் சொல்லும் ஒரு கருவியாக வளர்ந்திருக்கிறது. உலகின் மிகப்பழமையான ஓவியங்கள் இருக்கும் எகிப்தின் பிரமிடுகளில் மனிதன் மிருகங்களை கைதட்டி விரட்டும் ஓவியங்கள் இருக்கின்றன.  உலகின் எந்த இசையிலும் கையால் எழுப்பும் தாளம் ஓர் அங்கமாகயிருக்கிறது.  கைதட்டுவதின் மூலம் மகிழ்ச்சி பாராட்டு,  ஒப்புதல் போன்ற பல விஷயங்கள் எளிதாகச் சொல்லப்படுகின்றன. பேச்சாளாரின் பேச்சு போரடித்தால்  அதை நிறுத்த தனி வகை  கைதட்டலை கண்டுபிடித்த பெருமை நமக்கு மட்டுமே.

? ரேஷன் கடைகளில் பிரதமர் படம்  இல்லாததை கண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்திருக்கிறாரே?
– எஸ் மோகன், கோவில்பட்டி

! ஆணவம். சர்வாதிகாரி ஹிட்லர் கூட "உணவுப்பொருள் வழங்குமிடத்தில் தன் படம் இருக்கவேண்டும்" என்று சொன்னதில்லை.  "பிரதமரின்  படம்,  எங்கு, எந்த அளவில்,  எந்த அலுவலகங்களில்  வைக்கப்படவேண்டும்" என்ற அரசின்  விதிமுறைகளில் ரேஷன் கடைகள் இல்லை.

? பட்டாசு  வெடிப்பது நமது வழிபாட்டு முறையா?
– கண்ணபிரான், சென்னை

!இல்லை. எல்லா மதத்திலும் ஒளியேற்றி வழிபடும் வழிபாட்டுமுறைகள் இருக்கின்றனவே தவிர, இந்த பட்டாசு வெடிக்கும் முறை சொல்லப்படவில்லை. இது இடையில் புகுத்தப்பட்ட ஒரு வணிக தந்திரம்.

? திருக்குறளில் ஜி.யு போப்  கடவுளை மறைத்து  மொழிபெயர்த்து விளக்கம் சொல்லியிருக்கிறார் என்கிறாரே  கவர்னர் ரவி?
– லியாகத் அலி, பொள்ளாச்சி

! திருக்குறளை இந்துத்துவா நூலாக்கும் முயற்சி சில காலமாகவே நடந்துகொண்டிருக்கிறது. குறள் தெய்வம் பற்றி பேசுகிறது.  ஆனால் அது ஆர்ய அல்லது திராவிட தெய்வம் இல்லை. மிக உயர்ந்த ஒழுக்கத்தை வழிபாட்டு பொருளாகச் சொல்லுகிறது. ஜி.யு. போப் தமிழுக்கு ஆற்றிய பெரும் பணி தமிழர் அல்லாத தமிழ் இலக்கியம் படிக்காத  ஆளுநர் ரவிக்கு தெரியாது.  எல்லாவற்றையும் போல் இதையும் அரசியலாக்குகிறார்.

கனடாவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்தவர் ஜி.யு. போப். கிறிஸ்தவ சமய போதகராகத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றாலும், இங்கே வந்து தமிழ் கற்றபின், தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். 1886ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். அதன்பின்னர் நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். சில ஆங்கில இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் புலமை உள்ளவர். ஆனால், இறப்புக்குப் பின் தனது கல்லறையில் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்" என்று கூறினார். அந்தளவு தமிழ் மீது பெரும் பற்று கொண்டவர். அப்படிப்பட்ட அறிஞரை பற்றி ஆளுநர் கூறியுள்ளவை அவர் பதவிக்கு அழகு சேர்ப்பவை அல்ல.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com