ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சூர்யா நடிப்பு சூப்பர்

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சூர்யா நடிப்பு சூப்பர்
Published on

விக்ரம் சினிமா விமர்சனம்

– லதானந்த்

டத்தில் அடிதடி சண்டைகள் இருக்கலாம்; ஆனால் படம் முழுக்க குத்து, வெட்டு, துப்பாக்கிச் சூடு, கொப்பளிக்கும் ரத்தம் எனவே இருந்தால் எப்படி? விகரம் அப்படித்தான் இருக்கிறது.

ஒரு புறம் காவல்துறை அதிகாரிகளை மாஸ்க் அணிந்த கும்பல் கொல்கிறது; அவர்களைப் பிடிக்க ஃபகத் ஃபாஸில் நூல் பிடித்துத் துப்பறிந்துகொண்டு அலைகிறார். அவருக்குப் படத்தின் ஆரம்பத்தில் மற்ற பாத்திரங்கள் வழியே கொடுக்கப்படும் பில்ட் அப் டூ மச்!

இன்னொரு புறம் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல் 2 லட்சம் கோடி மதிப்புள்ள் Erythroxyllum என்ற போதை வஸ்துவைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரபஞ்சன் என்ற பெயரில் உலவும் கமலை இறந்துவிட்டதாக ரசிகர்களைப் படத்தின் முற்பாதியில் நம்பவைத்துப் பின்னர் இடைவேளைக்குப் பின் ஏஜெண்ட் விக்ரமாக மறு உயிர்ப்பிக்கச் செய்து ஒரு தனி ட்ராக்கில் கதை செல்கிறது.

திரைக்கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாக அமைத்திருக்கலாம். பல பாத்திரங்களும் காட்சிகளும் ஏன் படத்தில் வருகின்றன என்பது புரியவில்லை. உதாரணமாக ஃபகத் ஃபாஸில் வீட்டில் பரட்டைத் தலையர் ஒருவரை ஏன் கட்டிவைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. அதைப்போலவே அவர் நூடுல்ஸ் சாப்பிடும் காட்சியும் அனாவசியமாகத் தோன்றுகிறது.

கமல் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்குப் போய் ஏன் அந்தப் பெண்ணை விலங்கிட்டுக் கட்டிவைத்துவிட்டு ஜன்னல் வழியே வெளியேறி, மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து வருகிறார் என்பதும் அதுவரை அந்த அம்மணி ஏன் அனத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் பிடிபடவில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுவும் ஒரு பழிவாங்கல் ஃபார்முலா கொண்ட கதைதான். ஆனால் அது தெரியாமலிருக்கக் கமலே அடிக்கடி, "இது வெறும் பழிவாங்கல் மட்டும் இல்லை. போதைப் பொருட்களுக்கெதிரான யுத்தம்" எனத் தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொள்கிறார்.

"ஒரு முகமூடியைக் கழட்ட இன்னொரு முகமூடி போட்டவனால்தான் முடியும்" என்பன போன்ற பஞ்ச் வசனங்களுக்கும் பஞ்சமில்லை!

"ஒரு காட்டில் மான், சிங்கம் இருந்துச்சாம்" என்பன போன்ற தெலுங்குப் பட சாயல் வசனங்கள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. "One man's revelution is another man's terrorism" – வசனம் பொருள்பொதிந்தது.

"we declare a war against the system; Don't take it personally!" எனக் கரகரத்த குரலில் சொல்லிவிட்டுக் கழுத்தை அறுக்கும் காட்சிகள் குலை நடுங்கவைக்கின்றன.

வித்தியாசமான நடையுடன் விஜய் சேதுபதி அதி பயங்கர  வில்லனாக அசத்தியிருக்கிறார். சபாஷ்!

பல பாத்திரங்கள் பேசும் தமிழ், வேற்று மொழியினர் வித்தியாசமான தமிழ் உச்சரிப்பைக்கொண்டிருப்பது ஏனோ?

சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. பாராட்டுகள்.

"பத்தல், பத்தல" காட்சிக்குக் கமல் ஆடும் நடன அசைவுகள் ஸ்லோ மோஷனில் ஆடுவதைப் போல இருக்கின்றன. மிச்சம் இருக்கும் பாடல்கள் அப்படி ஒன்றும் வெகுவாக ஈர்க்கவில்லை. ஆனால், பின்னணி இசை பட்டையைக் கிளப்பியிருக்கிறது.

படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை தொய்விலாமல் படம் போகிறது.

திடீர் திடீரென ஏஜெண்டுகள் டீனா, லாரன்ஸ், உப்பிலியப்பன் என முளைக்க வைத்து, அதைப் படத்தின் ஆகப் பெரும் திருப்பங்கள் என இயக்குநர் நினைத்திருக்கிறார். என்ன சொல்ல…

பட இறுதியில்  மெஷின் கன்னால் கமல் மானாவாரியாகச் சுடும் காட்சி – ஜாங்கோ படத்தில் 'சுட்ட' காட்சி.

கட்டக் கடைசியில், ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சூர்யா நடிப்பு சூப்பர். படத்தின் அடுத்த பாகம் இன்னும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்!

மொத்தத்தில் விக்ரம் : மிக உக்ரம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com