பாசமழை

பாசமழை
Published on

கொட்டும் மழையில் நடுங்கியபடி செல்லும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியில்  வடிந்து கொண்டிருக்கும் உயிரோடு போராடிக் கொண்டிருப்பவர் பரமசிவம். தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது.பேரன் அருணோடு  பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர் தான்.  அடுத்த இரண்டு தினங்களில் ஆரம்பித்த மழை சென்னையைக்  குளமாக்கிய மழை,  அவரின் தளர்ந்த உடலையும் தாக்கியது.

ஒருநாள் குடையோடு சேர்ந்து நனைந்தபடி திரும்பியவர் வீட்டுக்குள் நுழைந்து குடையை மடக்கியதும்  தானும் சேர்ந்து மடங்கி மயங்கிச்  சாய்ந்தார்.  பேரனின் குரல் ' தாத்தா' என்று அலறியது  கேட்டது. தாறுமாறான மூச்சை மாத்திரைகள் மூலம்  சமநிலைக்குக் கொண்டு வந்த டாக்டர் ரமணனோடு  சேர்ந்து இப்போது குடும்பமே அவரோடு வந்த ஆம்புலன்ஸில் . மனைவி நர்மதா மகள் சுந்தரி.  பேரன் அருணின்  விரல்கள் அவர் கை  மேல் படர்ந்தபடி.

பரமசிவத்திற்கு  மழை மிகவும் பிடிக்கும். தளர்ந்த மூச்சோடு வெளியே கொட்டும் மழைக்கு அவர் மனம் தாளம் போட்டுக்கொண்டு இருந்தது . மின்னல் வேகத்தில் அவர் முன் ஓடின சில மழைக்  காட்சிகள்.

பத்து வயதில் வீட்டு முற்றத்தில் விட்டு தூம்பு வழி வெளியேறி  வாசல் பக்கம் வந்த  காகிதக்  கத்திக்  கப்பல்.  இருபது வயதில் அப்போதைய காதலி, பிறகு  மனைவியான  நர்மதாவோடு  பாதி நனைந்தபடி பிடித்துப்போன இளமைக் குடை.  முப்பது  வயதில் குழந்தை சுந்தரியோடு  கொட்டும் மழையில்  சினிமாவுக்குப் போன  ரிக்ஷா. ஐம்பது  வயதில் மகளின் கல்யாண அழைப்பில் பட்டுவேட்டி மாப்பிள்ளை நனையாமல் பிடித்துப்போன மாமனார் குடை.

அதற்குப் பிறகு சில வருடங்களில் பிறந்த பேரன் அருணுக்குக்  காட்டி ரசித்த ஜன்னலோரத்  தூறல் மழை. அப்போது  மலர்ந்த அவனது புன்னகை.  இன்று அறுபத்து ஐந்து  வயதில் அடங்கிக் கொண்டிருக்கும் உயிரோடு, அந்த மழைச் சத்தம் ஒரு ராகமாக அவருக்குள் ஓடுகிறது. 'அருண் ஒரு நல்ல தோழன்' என்று நினைத்துக் கொள்கிறார்.

திடீரென்று இடியும் மின்னலும் அவரைச் சேர்த்து அள்ளிக்கொண்டு போவது  அவருக்குப்  புரிந்தது. ஆனால், அவரின் கையை இறுகப் பிடிக்கும் அருணின் பிஞ்சு விரல்கள் அவரை இங்கே இழுத்து வருவதையும் அவரால் உணர முடிந்தது. அவர் மூச்சு நிதானமாகக்  கண்கள் திறந்தன எதிரே  பேரனின் கண்ணீர் பொங்கும் பாசமழை அவருக்குப்  புதிதாக இருந்தது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com