
ஜூன் 3ம் அதுவுமாய் கலைஞா் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞா் படம் அட்டைப்படமாக அலங்காிக்கும் என நினைத்தேன். இருப்பினும் சொல்லாமல் சொல்லும் விதமாய் பிரதமா் மோடி – முதல்வா் ஸ்டாலின் படத்தைப் போட்டு வரப்போகும் உறவுக்கு கைகொடுக்க வைத்து விதை நட்ட வித்தியாசமான விவேகமான சிந்தனை கொண்ட கல்கியை பாராட்டுகிறேன்.
– ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்
சுவாமி முக்தானந்தாவின் எளிமை நிறைந்த அருளுரையைப் படித்ததும், உள்ளத்தில் மகா வெளிச்சம் பரவிய பரவச உணர்வு கிடைத்தது. உண்மை!'மனிதர்கள் நடைபாதையில் தான் நடக்க வேண்டும். கார்கள் சாலையில் தான் ஓட வேண்டும். ' என்பதை சரியான – செறிவான விளக்கத்துடன் கூறி வாழும் நெறிக்கு இலக்கணம் வகுத்து கற்பித்த விதமும் நேர்த்தியும் அற்புதம்…அற்புதம்!
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
"புலி ஆடு புல்லுக்கட்டு" சிறுகதை சிறிய வயதில் படித்ததாக இருந்தாலும் அதை வைத்து எழுதப்பட்ட இந்தக் கதையை படித்ததும் கண்களில் நீர் வந்தது. ஒரு எதார்த்தமான சம்பவத்தை மிக அருமையான கதையாக வடித்த கதாசிரியருக்கு பாராட்டுக்கள். மிக மிக அருமையான சிறுகதை. – பிரகதாநவநீதன், மதுரை
பட்டமளிப்பு விழாக்கள் அரசியல் மேடைகளாகி வருவதை வருத்தத்தோடு தலையங்கத்தில் எழுதியிருப்பது வேதனையடைய செய்கிறது. பட்டங்கள் பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு வாழ்த்துகளோ, அறிவுரைகளோ கூறாமல் கட்சியின் குடும்ப நிகழ்ச்சியின் விழாக்களின் போது பேசப்படும் அரசியல் பேச்சுகளாவே பட்டமளிப்பு விழாக்கள் நடப்பது வருங்காலங்களை இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். தேவை நல்ல விடியல்!
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
கல்வி தொடர்பான பட்டமளிப்பு விழா மேடை அரசியல் மேடைகளாக மாறி பல ஆண்டுகள் ஆனாலும் அரசியல் தலைவர்கள் அரசியல் பேசுவது சாதாரண நடைமுறை. ஆனால் அரசு பிரதிநிதிகள் கவர்னர்கள் பேசுவது சாசனத்திற்கு எதிரான நிலை.
பி.ஜே.பி. ஆளும் பல மாநிலங்களில் பிரதமர் மோடி பல திட்டங்கள் காணொளி மூலம் நிகழ்த்திய வேளையில் தமிழகத்திற்கு நேரில் வருவது வாக்கு வங்கி அரசியல் என்றாலும் கூட தமிழகத்தில் வாக்காளர்கள் தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருப்பதுதான் உண்மை.
– சி. கார்த்திகேயன், சாத்தூர் – 626203
வாராவாரம் தராசு பதில்கள் கலக்கல்! தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக யாரை கூறலாம் என்பதற்கு , இருசக்கர வாகனத்தில பல பைகளில் காய்கறிகளை எடுத்துக்கொண்டு செல்லும் வியாபாரியின் படத்தை போட்டது 'இவரே'. 'திராவிடர் என்பதில் மகாத்மா காந்தியையும் விட்டுவிட்டார்களே' என்ற எள்ளல் தராசார் வெளுத்து வாங்குகிறார்.
– லட்சுமி கண்ணன், திருமங்கலம்
தலையங்கத்தின் மூலம் பட்டமளிப்பு விழாவில் நடக்கும் மாற்றங்களை பற்றி அறிய முடிந்தது. பட்டதாரிகளின் கல்விநிலை அங்கே மதிக்கப்படவில்லை.
– கலைமதி, திருச்சி
ஜோக்ஸ்கள் அனைத்தும் அருமை.
– கிருஷ்ணவேணி, சேலம்
ஹெச்.என். ஹரிஹரனின் 'மஞ்சரி சுடப்பட்டாள்' சிறுகதை விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.' 'மஞ்சரிக்கு ஒரு கப் டீயோ, ஆப்பிள் ஜூஸோ நிச்சயம்' என்று சந்திரன் எண்ணிக்கொள்வது என்று கலகலப்பாக நகைச்சுவையால் படிப்பவர்களை சுட்டுவிட்டார் எழுத்தாளர்.
– கண்ணன், நெல்லை
தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதியை எடுப்பதால் மட்டும் ஜாதிகளை ஒழித்துவிட முடியாது என்பது உண்மை. ஜாதி கட்சிகளையும் ஊக்குவித்துக்கொண்டு இம்மாதிரி செய்வதெல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட். ஜாதிப்பெயரை சுட்டிக்காட்டும் கிராமங்களின் பெயர்களை என்ன செய்யப் போகிறார்கள்?
– மலர் விழி, கோவில்பட்டி.
கடைசி பக்கத்தில் வரும் "சுஜாதா தேசிகன்" அவர்களின் ஒவ்வொரு அனுபவம் மிகவும் அருமை. அவர் சிறுவனாக இருந்தபோது படித்த காமிக்ஸ் புத்தகத்தை இன்றும் பத்திரமாக வைத்திருப்பது அவருடைய புத்தக ஆர்வத்தைக் காட்டுகிறது. திரைப்படமாக எடுத்தால் அந்தப் படத்திற்கு வசனம் எழுதுவேன் என்று சொல்வது மிகவும் பாராட்டுக்குரியது.
– ராதிகா, மதுரை