நம்மை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நம்மை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Published on

– தனுஜா ஜெயராமன்

ந்த கோவிட் காலக்கட்டத்தில் கொரோனாவைப் போலவே நாமும் நம்மை புதுப்பித்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. கொரோனாவைப் போலவே நாமும் உருமாறி பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறோம் என்பதும் நிஜம். இந்த கொரோனா எல்லாரையும் போலவே மாணவர்களையும் அதிகம் புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த பள்ளி  விடுமுறை காலங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவ – மாணவிகளே!

பள்ளிகளின் நீண்ட விடுமுறை தற்போது பள்ளிகள் திறந்த பிறகும் சரியாக நடைபெறுவதில்லை என்பதெல்லாம் அதற்கு பெரிதும் காரணமாக அமைந்துவிடுகிறது. மழை – வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் வேறு மாணவர்களின் இயல்பு வாழ்க்கையை பதம் பார்த்து வருகிறது.  நீண்ட விடுமுறை காலங்கள் மாணவ மாணவிகளின் கல்வியில் தனிபட்ட குணங்களில் மிகப்பெரிய மாற்றத்தை விளைவித்திருக்கிறது என்பதில் ஐயமேதுமில்லை.

ஆரம்பக் கல்வியையே இரு வருடங்களாக காணாத குழந்தைகள்.  தேர்வுகளையே சந்திக்காத நடுத்தர வகுப்பு குழந்தைகள்.  இரு வருடங்களாக பள்ளிகளே இயங்காமல் குழப்பமாகவே பொதுத்தேர்வை சந்திக்கும் பத்தாம் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களென அனைவருக்குமே சிக்கலை ஏற்படுத்தும் சூழல்தான். முதல் வருடம்  ஆறு மாதம் மட்டுமே கல்லூரிக்கு சென்று வீட்டிலேயே கல்லூரியை முடித்த மாணவ – மாணவிகள் பலருண்டு. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரிக்கே போகாமல் கடைசி வருஷம் கல்லூரிக்கு போகும் மாணவச்செல்வங்கள் என பல்வேறு குளறுபடிகள். இவர்கள் கற்கும் கல்விகள் தரம் எப்படியானதாக இருக்குமென நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. வேலைக்காக நேர்முக தேர்வுகளை இவர்கள் சந்திக்கும் காலத்தில் இது இவர்களுக்கு சற்று பின்னடைவை தரும் என்பதில் ஐயமேயில்லை.

இவர்களில் பள்ளி மேல்நிலை வகுப்புக்கள் பயிலுபவர்கள் மற்றும்  கல்லூரி மாணவர்கள் பலர் இன்று பகுதிநேர வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். பலவழிகளில் பணம் சம்பாதிக்கவும் கற்று வருகின்றனர்

கிராமங்களில் கிடைத்த சிறு வேலை செய்து பணம் சம்பாதிக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் எதிர்கால மேற்படிப்புகள் கேள்விக்குறியாகி வருவதும் நிதர்சனம்.

அதேபோன்று நகர்புற மாணவர்கள் பலர் உணவு மற்றும் காய்கறி டெலிவரி செய்யும் வேலைகளை செய்து வருவது கண்கூடு. அதில் பணம் கணிசமாக கிடைக்க அதையே பலர் தொடர விரும்புவது அவர்களின் கல்விகற்கும் திறனை நிச்சயமாக பதம்பார்க்கவே செய்யும்.

இதுதவிர, இன்று மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆன்லைன் கலாசாரம். 'ஆன்லைன் கல்வி' என்ற வாய்ப்பின் மூலம் சிறு குழந்தைகளிடம்கூட இன்று மொபைல் போன் சர்வசாதாரணமாக புழக்கத்தில் வந்துவிட்டது. இது மிகவும் ஆபத்தான விஷயம். இது ஏற்கெனவே ஆசிரியர், மாணவர் உறவுகளில் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே. குழந்தைகளிடையேயான மொபைல் புழக்கங்கள் அவர்கள் எதை காண்கிறார்கள் என்பதில் தொடங்கிவிடுகிறது. பல்வேறு பிரச்னைகள்.
ஒரு தொடு திரையில் உலக நல்லது கெட்டதுகள் அனைத்தும் அவர்களின் உள்ளங்கைகளில்.  ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகள் போதாதென்று தற்போது நாள்தோறும் புதுப்புது அனுபவங்கள் மற்றும் சிக்கல்கள் பெருகுகிறது.

மொபைல்போன் புழக்கம் மாணவசெல்வங்களிடையே அதிகரித்ததால் இன்று பலர் குழந்தை யூடியூபர்களாகவும் மற்றும் பலர் தனி வீடியோ போடுபவர்களாகவும் இருப்பது மிக சகஜமான நிகழ்வாக மாறிவிட்டது. இதன் ஆபத்தை உணராமலே பணத்திற்காகவும் புகழுக்காகவும், பெற்றவர்களும் இதை அனுமதிக்கிறார்கள்.

இன்று நாம் சந்திக்கும் பல குழந்தைகள் சிறுவயதிலேயே பணம் சம்பாதிக்க பழகிவருகிறார்கள். இது சரியான போக்காக தோன்றவில்லை.

வெளிநாடுகளில் இப்படி தானே சம்பாதிக்கிறார்கள் என வாதிடுவதில் அர்த்தமில்லை. வெளிநாடுகளில் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் வசிப்பதில்லை. அவர்களே சம்பாதித்து தனியாக வசிப்பது அவர்கள் விருப்பம்போல் வாழ்வது இயல்பான ஒன்று. இப்படியான கலாசாரம் இங்கேயும் பரவும் ஆபத்துக்கள் உண்டு.

இன்று சந்திக்கும் மூன்றில் ஒரு மாணவசெல்வங்கள் வீடியோ போடுவதாகவும் , உணவு காய்கறி டெலிவரி வேலைகளை செய்வதாகவும் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே ஆன்லைன் கல்வியால் பல்வேறு பிரச்னைகளை மாணவர்கள் சந்தித்து வரும் வேலையில், இந்த சிறு வயதில் பணம் சம்பாதிக்கும் கலாசாரம்  எங்கே கொண்டு செல்லும் என்று ஐயமாக உள்ளது.

தற்போது குழந்தைகள் போடும் வீடியோக்கள் இணைய உலகில் பெறும் வரவேற்பை பெறுவதோடு அதன் மூலம் அவர்களுக்கு பண வரவும் கிடைத்துவிடுகிறது. இணையமெங்கும் இருவயது குழந்தைகள் முதல் வயதுவந்த பிள்ளைகளின் வீடியோக்கள் வரை கொட்டிக்கிடப்பதே இதற்கு சான்று.

இந்த கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு மாணவ – மாணவிகளின் உளவியல் சார்ந்த சிக்கல்களை பெற்றவர்களும், கல்வியாளர்களும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதில் தான் இந்த மாணவச் செல்வங்களின் எதிர்கால வாழ்வு அடங்கியிருக்கிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com