கருந்திரையான  கருங்குன்றம்

கருந்திரையான  கருங்குன்றம்
Published on

நூல் அறிமுகம்

மஞ்சுநாத்

கருங்குன்றம்The Black Hill 

ழுத்தாளன் உருவாக்கும் முக்கிய கதைமாந்தர்களின்  ஒளியுருவம் மீதான  பார்வையை தாழ்த்திக் கொண்டு வாசகன் அகப்பார்வையை கூர்மையாக்கும்போது புனைவின் பெருவெளியில்  நிழல் உருவாய்த் திரியும் உபமாந்தர்களின் உயிர் திரளின் திரட்சை பேருவுருவாய் கொள்ளும்.  சில நேரம் அகத்தில் விரியும் பேருவுரு மாயத்தின் முடிச்சுகளை அவிழ்க்கும் உபயமாகக்கூட அமைந்துவிடும்.

உறைநிலையை நெருங்கும் தட்பவெப்பம். எலும்புகளை துளைக்கும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. மலை மீது இருக்கும் சிறிய கிராமத்திற்கான வழி செங்குத்தாக சுற்றியபடி மேலுறுகிறது. குறுகிய தெருவுக்குள் அடுக்கப்பட்ட கற்களாலான  குடிலின் கீழ் தளத்தில் அகலமாக அமைக்கப்பட்ட கணப்படுப்பு தனது வெம்மையின் மூலம் மரத்தடுப்புகளால் அமைக்கப்பட்ட மேல் தளத்திற்கு கதகதப்பை அளித்துக் கொண்டிருந்தது. அறையோரம் கிடந்த கட்டிலில் ஒரு நோயாளி பெண் படுத்துக் கிடக்கிறாள். அவளருகில் மர மேஜை ஒன்றை துடைத்து கொண்டிருக்கும் 12 வயது நிரம்பிய சிறுவன் அவேசா தனது தந்தையை நீண்ட காலம் கழித்து பார்த்த உவகையில் தன் கையிலிருந்த துணியைக் கீழே போட்டுவிட்டு "அப்பா…" என்று சிரிக்கிறான். அவன் வாயிலிருந்து குழறலான வார்த்தைகள். அவனது மெலிந்த உடலில் தனித்து தெரியும்  பொருத்தமற்ற தலை பருத்திருக்கிறது. தான் அணிந்திருந்த அழுக்கான வெள்ளைக் கம்பளி தொப்பியை கையில் எடுத்து முறுக்கியவாறு கன்றிய முகத்தில் உணர்ச்சிகளை வழிய விட்டபடி தனது  தந்தை கஜின்ஷாவையும் அவன் புதிதாக மணம் செய்து  உடன் அழைத்து வந்திருப்பவளையும் பார்க்கிறான்.

கஜின்ஷா பல்வேறு இனக்குழுக்களாக  பகுக்கப்பட்டிருக்கும் மிஷ்மி பழங்குடி மக்களின் ஒரு குழுவிற்கு தலைவன். இனக் குழுவிற்குள்ளான உறவு பந்தத்தின் நிலைப்பு நிர்பந்தத்தின் பொருட்டு கரம் பிடித்த நோயாளி மனைவியையும் அவளுக்கு பிறந்த உறுதியில்லாத பிள்ளை அவேசா மீதும் அவனுக்கு ஒட்டுதல் வரவில்லை. எனவேதான் திபெத்திய எல்லையில் இருக்கும்  சொம்மேவு கிராமத்திற்கு அவன் வருகை புரிவது அரிதாக இருக்கிறது.

மெபோ கிராமத்தில் வளர்த்த அபோர் இனத்தைச் சேர்ந்த கிமூர் மீது காதல் உறவு கொண்டு அவள் சமூகத்திற்கு தெரியாமல் அவளை மணம்புரிந்து உயிரைப் பிடுங்கக் காத்திருக்கும் காடுகளையும், மலைகளையும், பிரம்மபுத்திரா நதியின் பேரலைகளையும் கடந்து பல நாட்கள் தொடர்ந்த கடினமான பயணத்திற்கு பின்பு தனது பிரதேசமன திபெத்தின் ஜாயுள் பள்ளத்தாக்கிற்கு அவளை அழைத்து வந்துவிட்டான். உயர்ந்த பனிச் சிகரங்களுக்கு அருகில் தாவு ஆறு தோன்றுமிடத்தில் இவர்களது முரட்டுத்தனமான காதல் வாழ்வும் துவங்குகிறது.

திபெத் ஒரு வசீகரமான பூமி மட்டுமல்ல. மிகவும் மர்மமானது. புராதனமான தாந்ரீக மரபுகள் தோன்றியது மட்டுமல்ல;  சரியான  முறையில் நடைமுறைக்கு உட்படுத்தலும் திபெத்தில் மட்டுமே சாத்தியமாகிறது. திபெத்தை  உலகின் கூரையாக அன்னாந்து பார்த்து உலகம் வாய் பிளந்தாலும் அது தனது கதவுகளை அந்நியர்களுக்கு குறிப்பாக மிக்லுண்கள் என்று கூறப்படும் வெள்ளைக்காரர்களுக்கு திறப்பதில்லை. தன் பிரதேசத்தின் காற்று கூட வெளியேறி விடாதவாறு கதவுகளை இறுக சாத்தியே வைத்துள்ளது.

வெள்ளைக்காரர்கள் முதலில் வணிகம் பேசுவார்கள். அதைக்கூட எல்லையில் வைத்து தீர்த்து விடலாம். ஆனால் தங்களிடம் உலகிற்கு கூற ஒரு நற்செய்தி இருப்பதாக கனிவான முகத்துடன் மற்றவர்கள் கலாசாரத்தில் அத்துமீறும்போது அது கலவரத்திற்கும் அச்சத்திற்கும்  வழி வகுத்து விடுகிறது. பாதிரிகளுக்கு வழிவிட்டால் அவர்கள் காலடி தடத்தை பின்பற்றி துப்பாக்கி ஏந்திய படை வீரர்களும் உள்நுழைந்து விடுவார்கள்.

தற்காலத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பிறகே இப்பிரதேசத்தை திபெத் என்ற பெயரால் அறிகிறோம். இது லாமாவின் தேசம். ஜாக்ட் அல்லது ஜாம் என்றே அதனை அக்காலத்தில் குறிப்பிட்டனர். பழங்குடிகள் 'தேலாங்'  என்று அழைத்தனர்.

ஒரு நாட்டை அபகரிப்பதைவிட அதன் பழமையான கலாசாரங்களை தாக்கி பலவகையில் அதனை சீரழிப்பதோடு ஏதேச்சதிகாரத்தின் வல்லமையோடு தங்களது கலாசாரத்தின் விதைகளை தூவி விடுவதிலுள்ள அடிப்படை சாரத்தின் பலத்தையும் பலனையும் உணர்ந்த ஐரோப்பியர்கள் தங்கள் மதங்களை திசையெட்டும் கொண்டு செல்வதை அரசியல் கொள்கையாக  கையாண்டனர். சீனாவின் மிங் அரசு இதற்கு தலையாட்டினாலும் அதற்கு பின்பு அதன் வீழ்ச்சியில் அமர்ந்த மஞ்சு அரசு மிஷினரிகளை சீனாவிலிருந்து துரத்தி கி.பி.1724 ல் கிறித்துவத்தை அங்கு தடை செய்தது. ஆனால் அபினி போரில் பிரிட்டனிடம் தோற்று கி.பி1842-ல் போடப்பட்ட "நான்ஜிங் உடன்படிக்கை"படி சில இடங்களை தாரைவார்த்ததோடு  தனது வணிக சந்தையை ஐரோப்பியர்களுக்கு விசாலமாக திறந்தும் விட்டது. பிரெஞ்சுகாரர்கள் இந்த சிறப்புரிமையுடன் "சகிப்புத்தன்மை உடன்பாடு" மூலம் சீன தேசத்தில் சமயப்பரப்பில் ஈடுபடுவதற்கான அனுமதியை வலிந்து பெற்றார்கள்.

இருப்பினும் சீனாவின் மேற்கு பகுதி வழியாக திபெத்துக்குள் பிரவேசித்து திபெத் மிஷினரி உருவாக்கும் கனவு ஈடறேவில்லை. சீன அரசும் அதற்கு செவி சாய்க்கவில்லை. இருக்கும் ஒரே வழி பிரிட்டிஷ் இந்தியாவின் தெற்கு இமாலயப் பகுதி. அதன் வழியாக உள்நுழைந்து திபெத் மிஷன் கனவை நனவாக்கி கொள்வது. இதற்கு தடையாக பூடானின் தேப்ராஜ் அரசு வழிவிட மறுத்தது. இன்னொரு பகுதியான அசாமின் கடுமையான வனந்திரங்களையும்  பிரம்மபுத்திராவின் சவாலான வழித்தடத்தையும் கூர்மையான நெடிய மலைகளையும் கடந்து இன்றைய அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மிஷ்மி மற்றும் அபோர் பழங்குடிகளின் உதவியோடு திபெத்தை அடைந்து விடலாம். இது சாதாரணமான காரியமல்ல. உயிரையே பணயம் வைப்பது.

நிகோலஸ் மைக்கேல் கிரிக் எனும் அசாத்தியமான மனோதிடம் கொண்ட மனிதரை  ரோமன் கத்தோலிக்க  திருச்சபையின்  தலைமைப் பீடம்  பிரான்சிலிருந்து அவரை சமயப் பரப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கிறது. நான்கு மாத கடற்பயணத்திற்கு பின்பு 1850-ல் சென்னை மைலாப்பூரில் துவங்கும் அவரது பயணம் அசாம் நோக்கி நீள்கிறது.  குறைந்தபட்ச உணவுக்கூட இல்லாமலும் , கால்களையும் இடுப்பையும் கதற வைக்கும்  அப்பயணமானது மலைக்காடுகளையும், ஆறுகளையும் கடந்து கனிக்க முடியாத கடினமான வானிலைகளில் சிக்கியும், வழிக்காட்டிகளின் சூழ்ச்சிகளில் மனம்வாடி, வழியற்று தவித்தும், எந்நேரமும் விரலிடிக்கில்  வழியும் நீர் போல் உயிரை வலியோடு விரயம் செய்தும், எல்லையில் அந்நியரை நெருங்க விடாதவாறும் தங்கள் பிரதேசத்தைக் கடந்து செல்லக்கூட அனுமதி மறுக்கும் முரட்டுத்தனமான பூர்வீக ஆதி பழங்குடிகளின் ரௌத்திரத்தை எதிர்கொண்டும், கடுமையான உடலியல் மற்றும் உளவியல் சிதைவுகள்  இடைவிடாது தன்னை தின்று தீர்த்த போதும் மாயபிம்பங்கள்  உருவாக்கி சுயநினைவையும் சிந்திக்கும் திறத்தையும் அசரடித்த போதும் கிரிக் பாதரி தளர்ந்து போனாலும் தனது நோக்கத்திலிருந்து அசரவில்லை. "அடைந்தால் திபெத், இல்லையேல் மரணம்" என்ற தீவிரத்தால் ஒருவழியாக திபெத் எல்லைக்குள்  1952-ன் இறுதியில் நுழைந்து விடுகிறார். அவரது கற்றறியாத அனுபவ   கைமருத்துவம் மூலம் சில உள்ளூர்வாசிகளை தவிர அவரால் மக்களின் அபிமானத்தை பெறமுடியவில்லை. சில நாட்களிலே கடுமையான எச்சரிக்கையுடன் அங்கிருந்து  துரத்தப்படுகிறார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து மற்றொரு இளம் பாதிரியுடன் மீண்டும் அதே மாதிரி கடுமையாக பயணம் செய்து திபெத் சென்றடைகிறார். ஆனால்  இறுதி சாகசத்தின் பரிசாக திபெத் அவ்விருவர்களுக்கும் ருத்ர பூமியாகி விடுகிறது. தெற்கு திபெத் மிஷன் வெறும் கனவாகவே முற்று பெறுகிறது.

திபெத் மண்ணில் எந்தவொரு மதங்களும் இல்லை. ஆனால் ஒவ்வொரு பழங்குடி குழுக்களுக்கும் விதவிதமான நம்பிக்கைகள், சடங்குகள், கலாசார விழுமியங்கள் உண்டு. குழுவிற்கிடையே பூசல்களும் சண்டைகளும் அவ்வப்போது நிகழும். அங்கு வாழ்வதற்கு விசுவாசம் மட்டும் போதுமானதல்ல. உறுதியான உடலும் அதில் நன்கு சுருங்கி விரியும் காத்திரமான நுரையீரலும் அவசியம். துரத்தும் பொறியிலிருந்து தப்பித்து ஓடக்கூடிய வலுவான கால்களும் அவசியம். மரணம் ஒவ்வொரு நிமிடமும் அருகில் இருக்கும். அதைத் தவிர்க்கவும் எதிர்கொள்ளவும் விழிப்பு அதிகம் தேவை. உயிரற்ற கிரிக் பாதரியின் சடலத்திடம் கஜின்ஷா வருத்ததுடன் பேசுகிறான்…

"மனிதனுக்கு எந்தவிதமான நம்பிக்கையாவது இருந்துவிட்டு போகட்டுமே! உமது நம்பிக்கையிலிருந்து வேறுபட்டிருந்தால் என்ன ஆகிவிடப்போகிறது?"

 கஜின்ஷாவின் மனைவியான கிமூரின் சுதந்திரமான துடிப்பும், தீரமான பயணங்களும், முரட்டுத்தனமான காதலும், அவளது முன்னறிவிப்பு கனவுகளும், வாழ்வின் சூதாட்டத்திற்கு தரும் பதிலடிகளும், தனது குழந்தையின் பேரிழப்பிலிருந்து தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் வேகமும் திகைப்பூட்டும் வகைமை.

கஜின்ஷாகிமூர்கிரிக் இந்த பாத்திர இணைப்பில் உருவாகும் முக்கோண மையத்தில் திபெத்திய எல்லையோர பூர்வக்குடிகளின் ஒட்டுமொத்த வாழ்வின் உயிர் திரள் நிரப்பப்பட்டிருந்தாலும் அவேசா என்கிற சிறுவனின் கூக்குரல்  காதுகளில் ரீங்காரமாக சுழல்கிறது.

"வாழ்க்கை என்பது உருண்டோடும் கணப்பொழுதுகளின் ஓட்டப்பந்தயம். திடீரென்று நின்று விடுவதற்கு முன்பாக உயிர்த்து எழும், பிறகு சரிந்து விழும்."

கிரிக் பாதிரியின் முழுமை பெறாத குறிப்பேடுகள் வழியே இந்நூலாசிரியர் மமாங் தய் நேரேடியாக கதை பேசுகிறார். பதிலற்ற இடங்களை புனைகளால் நிரப்பினாலும் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் காடுகளையும் நெடிய மலைகளையும் திபெத்தின் தீவிர புவியலமைப்பினையும் நேரடி கள ஆய்வுகள் மூலம் கண்டுணர்ந்ததோடு தற்போது வரை நீடித்திருக்கும் மிஷ்மி மற்றும் வேறு சில பழங்குடி மக்களுடனான சந்திப்புகள் வழியே அழகாகக் கட்டமைத்துள்ளார். அதனால் இந்நூல் உயிர்ப்பான குரலில் நம்மோடு உரக்கப் பேசுகிறது.

அகில இந்திய வானொலியில் புதுச்சேரி நிலைய இயக்குனர் பொறுப்பில் உள்ள கண்ணையன் தட்சிணாமூர்த்தி  கருங்குன்றத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு சாரம் சிதையாமல் கச்சிதமாக மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆங்கில மூலமான The Black Hill  புதினத்தை 2014 ல் எழுதிய மமாங் தாய்(1957) அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் பெண் IAS அதிகாரியாக தேர்வு (1979) பெற்றும் இதழியல் துறையின் ஆர்வம் காரணமாக அதில் சேரவில்லை. சுற்றுச்சூழல், புதினங்கள், கவிதைகள், பத்திரிகைகள் என தனக்குப் பிடித்தமான வழிகளில் வெளிப்படுத்திக்கொண்டவர். தமது பழங்குடிகளின் சமூக முன்னேத்திற்காக இவர் ஆற்றிய செயலை பாராட்டி 2011-ம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதளித்தது. இவரது கருங்குன்றம் (The Black Hill) புதினம் 2017-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

கருங்குன்றம்The Black Hill
ஆசிரியர் : மமாங் தய் Mamang Dai
தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி
வெளியீடு (2021) : சாகித்ய அகாதெமி
பக்கங்கள் : 367

நன்றியும் அன்பும்

புதுச்சேரி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com