புதுக் கதையாக இருந்திருந்தால் வாகை சூடியிருக்கும்

புதுக் கதையாக இருந்திருந்தால் வாகை சூடியிருக்கும்
Published on

சினிமா விமர்சனம் 

– லதானந்த்

மூன்று குடும்பங்களுக்கு ஒரே வில்லனால் அநீதி இழைக்கப்படுகிறது. அந்த வில்லனைத் தேடிப்பிடித்து விஷால் பழிவாங்குவதுதான் கதை. பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களின் வேதனைகள் தனித் தனித் துண்டுகளாகக் காண்பிக்கப்பட்டு, பின்னர் மூன்றையும் ஒரு புள்ளியில் இணைத்திருக்கும் விதம் நேர்த்தியாக உள்ளது.

சிபிஐ டைரிக் குறிப்பு பட பாணியில், கொலை நடந்த சம்பவ இடத்திலிருந்து நூல்பிடித்துத் துப்பறியும் விதமாகக் கதை நகர்கிறது.

அரதப் பழசான கதைதான் என்றாலும் திரைக்கதை அமைப்பினால் விறுவிறுப்பாகவே படம் செல்கிறது. ஆரம்பத்தில் காவல்துறை சார் ஆய்வாளர் தேர்வு எழுதியவராக விஷாலைக் காண்பிக்கிறார்கள். நாமும் அவர் அந்த கெட்டப்பில் அதகளம் செய்வார் என்று காத்திருப்போம். கட்டக் கடைசியில் படம் முடியும்போதுதான் அவருக்குப் பணி நியமன ஆணையே கிடைக்கிறது.

'போரஸ்' என்ற வித்தியாசமான பெயருடன் வலம்வருகிறார் விஷால். பெயர்க் காரணத்தையும் படம் முடியும்போது விளக்குகிறார்கள்.

கொலைகளை சர்வ சாதாரணமாகச் செய்யும் வில்லன், "இதெல்லாம் பாவம் இல்லையா?'' என நக்கலாக அலுத்துக்கொள்வார். அப்போது அவரின் அல்லக்கை ஆசாமி ஒருவர், "அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லைங்க. சர்ச்சுக்குப் போய்ப் பாவமன்னிப்புக் கேட்டால் எல்லாம் சரியாகிவிடும்" என பதிலளிப்பார். தவிர்த்திருக்கப்படவேண்டிய விஷமத்தனமான உரையாடல் இது.

"தாடி மீசை வச்சவனெல்லாம் பொறுக்கி இல்லை" என்ற வசனம் தற்கால இளைஞர்களைக் கவரும். அதைப்போலவே, "தன்னைக் காப்பாத்த ஒருத்தன் இருக்கிறான் என்ற தைரியம் இருக்கும்போதுதான் குற்றவாளி உருவாகிறான்'' என்பது போன்ற சிந்திக்கத் தூண்டும் வசனங்களும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன.

பத்தாம் வகுப்பு மாணவி, மீசைகூடச் சரியாக முளைக்காத சக மாணவனுக்குக் காதல் கடிதம் கொடுப்பதும் பெறுவதும் என அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இயக்குனரின் சமூகப் பிரக்ஞை இன்மையையே காட்டுகிறது.

காதலிக்கும் பெண்ணை அந்தரங்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, நண்பர்களுக்கும் விருந்தாக்க முயல்வது போன்ற காட்சிகள் பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டுகின்றன.

காதலியின் வீட்டுக்குச் செல்லும் விஷால் – யோகிபாபு கூட்டணி, காதலியின் அப்பாவைக் கலாய்க்கும் காட்சிகள் செயற்கைத்தனமாக இருக்கின்றன.

பல படங்களிலும் பார்த்து அலுத்துப்போயிருக்கிற சுற்றுச் சூழல் போராளி மற்றும் நச்சுக்களை வெளியிடும் ஆலை நிர்வாகத்தின் மோதலும் துருத்திக்கொண்டு கதையில் கிளைத்துச் செல்கிறது.

ஒளிப்பதிவு துல்லியம். குறிப்பாக ஏரியல் வியூக்கள் திறம்பட அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் கொலைகளின் விதம் பற்றி விஷால் வகுப்பு எடுப்பார். அது சீரியல் ரகம். இடைவேளை வரை படம் மெல்லவே நகர்கிறது. பிறகுதான் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

பாடல்கள் படு சுமார் ரகம். ஆனால் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது.

கதாநாயகனின் அப்பாவைப் பயணமாகப் பிடித்துக்கொண்டு, கதாநாயகனை வில்லனின் இடத்துக்கு வரவழைக்கும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு டெக்னிக் இந்தப்படத்திலும் இருக்கிறது.

மொத்தத்தில்: புதுக் கதையாக இருந்திருந்தால் வாகை சூடியிருக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com