நினைத்துப் பார்க்கிறேன் ….

நினைத்துப் பார்க்கிறேன் ….
Published on

 – ஹரணி                                                                 

தினைந்து சதுரப் பரப்பிலான அந்த வீட்டின் முகப்பில் நுழைவுக் கதவருகே இடது காலை தரைமீது படிய வைத்து வலது காலைக் குத்துக்காலிட்டு அதனை வலதுகையால் சுற்றி வளைத்து அமர்ந்திருந்தாள் சாரதா. அவள் உட்கார்ந்திருந்த இடம் ஒரு சிறிய ஸ்டூல் வைக்கும் அளவே இருந்தது. அதுவே போதும் எல்லாவற்றுக்கும் என்கிற மனநிலைக்கு மாறியிருந்தாள் சாரதா. பெரிய வீடு கட்டி பல விசேஷங்களைச் செய்து பார்த்து அலுத்து சலித்துப்போயிற்று. 'இனி  இறுதி வரும் வரை இருக்க வேண்டியதற்கு இது போதும்' என்கிற நிலைக்கு மாறியிருந்தாள். அது போகிற வழி என்கிற உணர்வு இருந்தும் ஒருவர் போவதற்கு வழியை விட்டுத்தான் உட்கார்ந்திருந்தாள்.  எத்தனை பெரிய வீடாக இருந்தாலும் அவளுக்கு இதுபோல வாசலை மறித்துக்கொண்டு தெருவை வேடிக்கைப் பார்த்தபடி இருப்பது பழகிவிட்டது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாகிவிட்டது இப்படிப் பழக்கம் பழகியது.

உனக்கு அறிவே இல்லையா? எதுக்கு இப்படி வழிய மறிச்சிக்கிட்டு உக்காந்திருக்கே.'. கால் தடுக்கி விழுந்துட்டா.'.  கத்திவிட்டுப்போனான் நாராயணன். சாரதாவின் மகன்.

நான் ஒரு ஓரமாத்தானப்பா உக்காந்திருக்கேன். அதான் அவ்வளவு இடமிருக்கே..' என்றாள் பதிலுக்கு.

இவ்வளவு பெரிய வீட்டிலே உனக்கு இடமே இல்லியா?.'. எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசறே…

நான் ஏம்பா விதண்டாவாதம் பேசறேன்… உனக்குத் தெரியாதா… எனக்கு இப்படித் தெருவை வேடிக்கைப் பார்த்துக்கிட்டுத்தான் எதையும் செய்வேன்னு… என்றாள்.

ஏன் மத்தவங்களுக்கு அது இடைஞ்சலாக இருக்குன்னா மாத்திக்க மாட்டியா?  தடுமாறி விழுந்துட்டா என்ன பண்ணுவே?  அதைவிட உன் கால்ல மிதிச்சிட்டேன்னு ஊரே போய்க் கதை சொல்லிட்டு வருவே… இல்லே? என்றான் கோபமாக. அதற்குள் நாராயணன் மனைவி உள்ளிருந்து வந்தாள்.

இப்பப் புரியுதா உங்களுக்கு. நான் சொன்னா நம்ப மாட்டீங்க. நேர்ல பாக்கும்போது தெரியுது.

நீ வாய மூடு… நான் அவங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன்…

என் வாயத்தான் மூடச் சொல்லுவீங்க? உங்கம்மா வாய மூடமாட்டாங்க… என்றாள் நாராயணன் மனைவி.

பாத்தியா… உன்னால எவ்வளவு பிரச்னை பாரு…?

நான் என்னப்பா பண்ணறேன்?

நீ என்ன பண்ணலே… இப்படிப் பேசிப் பேசித்தான் அப்பாவ அனுப்பிச்சிட்டே.

நானா? அதிர்ந்தாள் சாரதா. கண்களில் சட்டென்று கண்ணீர் முட்டியது.

ஆமாம்… எத்தனை பேச்சு பேசுவே… தப்பெல்லாம் உன் மேல இருக்கும். அப்பா கேட்டா அத்தனைப பேச்சுப் பேசி அவங்கள வாயடச்சிடுவே… அப்புராணி மனுஷன்… கடைசி வரைக்கும் உனக்குத் தலையாட்டிட்டு வாய்ப் பேசா ஊமையாத்தானே இருந்துட்டுப் போய்ச் சேர்ந்தாங்க. ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறே… என்ன பாடுபடுத்துவே?

சாரதா பேசாமலிருந்தாள். கண்களில் முட்டிய கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.

இத ஒண்ண கத்து வச்சிருக்கே… எதுக்கெடுத்தாலும் அழுவுறே… பாக்கறவங்க… புள்ள கொடுமைப்படுத்துறான்னு சொல்லணுமில்லே… எக்கேடோ கெட்டுப் போ…

போய் விட்டான் வெளியே.

சாப்பிட வர்றீங்களா? இல்லெ வாசப்படிக்கு எடுத்திட்டு வரவா? என்றாள் மருமகள்.

பேசாமல் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து போய் தட்டில் நாலு இட்லியையும் சட்டினியையும் வாங்கிக் கொண்டு மறுபடியும் வாசல்படிக்கு வந்துவிட்டாள்.

மெல்ல இட்லியைப் புட்டு ஒவ்வொரு விள்ளலாக வைக்கும்போது ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது.

எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வாசல்படிக்கு வந்துவிடுவாள். தெருவைப் பார்த்துக்கொண்டு எந்த வேலையையும் செய்வது சாரதாவிற்கு வாடிக்கையாகி விட்டது. காய்கறி அரிந்து கொள்ள, கீரை ஆய, இப்படி எதுவாயினும் நிலைவாசல்படிக்கு பாதிக்கு மேல் அமர்ந்துகொண்டு வழியை மறித்துக்கொண்டிருப்பாள். அவள் கணவன் சங்கரன் உள்ளே வரும்போது

என்ன எப்பப் பாத்தாலும் இப்படி உக்காந்துக்கிறே… போறப்ப தடுமாறி விழுந்தா என்ன செய்வே?

வுழுங்க… யாரு வேணான்னா… தாண்டிப் போவ வேண்டிதுதானே?  எப்பப்பாரு எதாச்சும்  நொட்டம் சொல்லிக்கிட்டே இருக்கிறது… போங்க வேலயப் பாத்துக்கிட்டு…

ஏன் சாரதா நீ செய்யறது நியாயமா இருக்கா? வீட்டுலே அவ்வளவு இடமிருக்கு… சமையல் அறை அத்தனை பெரிசா கேட்டேன்னு கட்டிக் கொடுத்திருக்கேன்… இப்படி மறிச்சுக்கிட்டு உக்காந்துதான் எல்லாத்தையும் செய்வேன்னா என்ன பண்ணறது?  எப்பவும் ஜாக்கிரதையாவே போக முடியுமா? அமைதியாகக் கேட்டார் சங்கரன். கேட்டதுதான் போச்சு என்று பேச ஆரம்பித்துவிட்டாள்.

இதுல என்ன குத்தத்த கண்டுப்புட்டிங்க… எனக்கு இதான் வசதியா இருக்கு. அதான் இடமிருக்குல்ல தாண்டிப் போங்க… இது என்னோட வீடு… எனக்கு என்ன வசதியோ அப்படித்தான் இருப்பேன். எங்கம்மாயிதான் முதன் முதல்ல இந்த இடத்த வாங்கும்போது கீரை வித்த காச முடிஞ்சிருந்து கொடுத்துச்சு. அதுக்கப்புறம்தான் நீங்க வீடு கட்டினீங்க.

உண்மைதான் சாரதா. உங்கம்மாயி கொடுத்த பணத்ததான் திருப்பிக் கொடுத்திட்டனே. அப்புறம் ஏன் அதையே பேசறே. என்றார் சங்கரன்.

கொடுத்திட்டா சரியாயிடுமா?  முதன் முதல்ல அதுதானே கொடுத்துச்சு. அதை மறக்க முடியுமா? நன்றி வேணும் மனுஷங்களுக்கு.

அதுக்காக இப்படித்தான் மறிச்சுக்கிட்டு உக்காருவியா என்றார்.

ஆமாம். கொஞ்சம் ஒரு ஆள் போறதுக்கு இடம் விட்டுத்தானே உக்காந்திருக்கேன். எனக்கு வேற பொழுதுபோக்கு இல்ல. தெருவ வேடிக்கைப் பார்த்துக்கிட்டு போறவங்க வர்றவங்ககிட்ட நாலு கதை பேசிட்டிருந்தா. வேலை அலுப்பில்லாம இருக்கும்.. காலம் முழுக்க சமையல்கட்டு… சமையல்… பொங்கிப்போடறது… சாமான்களை ஒழிச்சுப் போடறது.. விளக்கி வைக்கிறது மறுபடியும் அடுப்புல பொங்கறது… இப்படித்தானே நாப்பது வருஷமா போயிட்டிருக்கு என்றாள். பேச்சு வேறு திசைக்குப் போகிறது என்றதும் சங்கரன் உள்ளே போய்விட்டார்.

நாராயணன் அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான்.

அம்மா… நவுந்து உக்காந்து காய் அரியும்மா…  தடுமாற வேண்டியிருக்கு.

போடா… நாயே… தாண்டிப்போ… சின்னப்புள்ளதான… இது என் வீடு…

சின்னச் சின்ன விஷயங்கள்ல சாரதா பெரிசா எடுத்துக்கிட்டு கத்துவது வழக்கமாகிவிட்டது.

சாப்பிடும்போது எப்படியாவது சிறு துளி சட்டினியோ சாம்பாரோ சிந்தி விடுவது சங்கரன் வழக்கம்.

அறிவே இல்ல உங்களுக்கு… இப்படிச் சிந்தியா சாப்பிடுவீங்க…

நான் துடச்சிடுறேன் சாரதா என்பார் சங்கரன்.

என்ன துடக்கிறீங்க… அதென்ன சிந்தாம சாப்பிட முடியாதா?

நல்ல பசியில் இந்த விவாதம் நடக்கும். பாதிப் பசியில் பிடுங்கிக் கொண்டதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும் விவாதம்.

வேணுமின்னா சிந்தறேன்… தெரியாமப் பட்டுடுச்சி…

தெரியாம… சோத்த விட்டுட்டு வேற திம்பீங்களா? என்பாள் சூடாக.

பசியே மரத்துப் போய்விடும். சப்தம் போடாமல் கீழே சிந்தியதைத் துடைத்துவிட்டு அத்தோடு சாப்பாட்டை முடித்துக்கொள்வார்.

செஞ்ச தப்ப சொன்னா பொத்துக்கிட்டு வருது… மிச்சமிருக்கிற இட்லிய எவ திம்பா…

நாய்க்கிட்ட போடு.

இப்ப சாப்பிட்டது யாராம்? என்பாள் கொஞ்சங்கூட யோசிக்காமல்.

உள்ளுக்குள் வெப்பம் பரவி வெடிக்க நினைக்கும். அடக்கிக்கொள்வார் சங்கரன். பிள்ளை இருக்கான். அவன் மனசு காயப்படும். வேண்டாம் என்று விலகிவிடுவார் சங்கரன்.

குப்பையிலே கொண்டு போய் கொட்டு.

அரிசியும் உளுந்தும் என்ன விலை விக்குதுனு தெரியும்ல… என்பாள்.

நான்தான வாங்கித் தரேன் என்பார் சங்கரன்.

சம்பாதிக்கிறோங்கற திமிறு.

இடையிலே வேறு வழியில்லாமல் நிறுத்திக் கொண்டு போய் விடுவார்.

**** ****

ன்னும் வேணுமின்னா இட்லி இருக்கு எடுத்துக்கங்க… அப்புறம் சூடு ஆறிப்போச்சின்னு ரிப்போர்ட்டு போவும் மவன்கிட்டே… நினைவு கலைந்தாள்.

மருமகள் கத்தி விட்டுப் போனாள்.

எனக்குப் போதும் என்றாள் சாரதா.

முன்னாடியே சொல்லித் தொலைக்கலாம்ல… நினச்சிக்கிட்டா ஒருநாளக்கி வளச்சிக்கிட்டுத் திங்கறது… இல்லாட்டி அடச்சிக்கிட்டு வேண்டாங்கறது… என்றாள் கோபமாக மருமகள்.

இல்லம்மா… என்னால இன்னிக்கு திங்க முடியலே… வயிறு சரியில்ல…

முன்னாடியே சொல்லியிருந்தா ஒரு ஈடு ஊத்தாம இருந்திருப்பேன்ல. இப்ப மிச்சப்பட்டத என்னா பண்ணறது?

யார்கிட்டயாவது கொடுத்துடும்மா.

நல்லாயிருக்கு நாயம். அரிசியும் உளுந்தும் என்ன விலை விக்குதுன்னு தெரியுமில்ல… சம்பாதிச்சா அருமை தெரியும். எம்புருஷன்ல ராவுப்பகலா ஓடிச் சம்பாதிக்கறாரு..

சரி வச்சிடும்மா… ராத்திரிக்கு அத உதுத்துப்போட்டு இட்லி உப்புமா செஞ்சு கொடுத்துடு நான் சாப்பிட்டுடறேன்.

ஏன்… அதுக்கும்தான் குறை பேசுவீங்க உங்க புள்ளகிட்ட… அது என்னன்னு தெரியாமலேயே கத்தித் தீர்க்கும். எங்கம்மாவுக்கு பழைய இட்லிய உதுத்துப்போட்டியான்னு. அதுவும்  உங்க மவன் கேக்கற மாதிரி அவரு இருக்கறப்ப சாப்பிட உக்காருவீங்க… வேண்டாம். பேசாம மீந்தத எந்த நாய்க்காவது போட்டுடறேன்.

**** ****

றுபடியும் நினைவுக்குப் போனாள்.

என்ன சாப்பிட இருக்கு சாரதா பசியாயிருக்கு என்பார் சங்கரன்.

இட்லி உப்புமாவைக் கொண்டு வந்து டக்கென்று வைப்பாள்.

காலையில சுட்ட இட்லியா?  நாந்தான் பழச சாப்பிட மாட்டேன்னு தெரியுமில்ல சாரதா என்பான்.

அப்படியே ராஜா வம்சம்தான்… எந்த நாய்க்கும் போடலே… அரிசி விக்கற விலையிலே ஒருநா பழச சாப்பிட்டா உசிரு போயிடாது.

சரி தொட்டுக்க என்ன?

பழைய சாம்பாரு இருக்கு. சாப்பிடலாம் என்றபடி அதையும் கொண்டு வந்து வைப்பாள். இரண்டு நாளைக்கு முன்பு சமைக்கவில்லை என்று ஹோட்டலில் வாங்கி வந்த டிபனில் மீந்த சாம்பாரை குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைகாத்து வைத்திருந்து தருவாள்.

ஜில்லென்ற அந்த சாம்பார் கசக்கும்.

ஒரு மிடறு தண்ணீரும் ஒரு வாய் இட்லி உப்புமாவுமாக உள்ளே போகும்.

இரவெல்லாம் சாரதாவை நினைத்துக்கொண்டே படுத்திருப்பார் சங்கரன். ஏன் இப்படி இருக்கிறாள்?

வரும்போது பிஞ்சாக கிடைத்தது என்று பீர்க்கங்காய் வாங்கி வருவார் சங்கரன்.

இருக்கறதயே சமைக்க முடியல்ல. இந்த எளவு வேறயா?

துவையல் நல்லாயிருக்கும் சாரதா.

அது ஒண்ணுதான்  கொறச்சல் என்பாள்.

அப்புறம் பீர்க்கங்காய் வாங்கி வந்ததையே மறந்துவிடுவான். நாலைந்து நாட்கள் கழிந்தபின் அது வாடி வதங்கி சுருங்கிப்போயிருக்கும். நல்ல பசியோடு வருகையில் அதை துவையல் செய்து வைத்திருப்பாள்.

என்ன இது? சாம்பார் வைக்கலியா?

வதவதன்னு காய்கறிய வாங்கி வந்து போட்டா என்னத்த சமைக்கறது? அதான் துவையல் அறச்சேன்… சாப்பிடுங்க… நல்லதுதானே என்பாள்.

பீர்க்கங்காய் சாப்பிடும் ஆசையே போய்விடும்.

எதையும் நினைத்தபோது செய்து தருவதில்லை என்பதை விடாப்பிடிக் கொள்கையாய் வைத்திருந்தாள்.

இந்த முருங்கைக் கீரையை ஆஞ்சிக்கொடுங்க… கூட்டு வைக்கணும்.

மறுபடியும் மருமகளால் நினைவு கலைந்தாள் சாரதா.

பிஞ்சா உருவிப்போடுங்க. அப்படியே காம்போட போட்டுடாதீங்க. இத்தன வருஷமாயியும் ஒரு கீரை உருவத்தெரியல. கேட்டா நான் அத்தனை சம்பந்தம்போட்டு சாலையேறினேன்னு பேச்சுவேற.

சாரதா பேசாமல் வாங்கி கீரையை உருவ ஆரம்பித்தாள்.

வீட்டில் இருக்கும்போது வெங்காயம் உரித்து அரிந்துகொடுத்து. காய்கறிகள் நறுக்கிக் கொடுத்து. கீரையை அவ்வளவு அழகாக ஆய்ந்து கொடுப்பது எல்லாம் சங்கரன் வழக்கம்.

என்னது இப்படி காம்போடு ஆஞ்சிருக்கீங்க… ஒரு கீரை உருவித் தர துப்பில்ல என்பாள்.

ஒரேயொரு காம்பிருக்கும்… அதை எடுத்துக்கூட போடமாட்டாள். சங்கரன் பார்த்து எடுத்துப்போடுவார்.

எதற்கெடுத்தாலும் பேசுவாள். சமயங்களில் எதையாவது சாரதா சிந்திவிடுவாள்.

சங்கரன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருப்பார்.

வெட்டி வம்பிழுப்பாள். என்ன பாக்குறீங்க? இவ மட்டும் சிந்திட்டான்னா.. நான் சிந்துவேன்.. நான்தானே நாள் முழுக்க வீடு கூட்டித் துடைக்கிறேன்.. என்பாள் தானாகவே. அதற்கும் சங்கரன் எதுவும் பேசமாட்டார்.

இந்தக் கீரை ஆயறதுக்கு இவ்வளவு நேரமா? கொடுங்க… நான் பாத்துக்கறேன். ஒருவேலைகூட ஒழுங்கா செய்ய முடியறதுல்ல. ஆனா வாய்க்கு வக்கணையா திங்கணும்… நொட்டம் பேசணும்.

சாரதா எதுவும் பேசாமல் கீரையை எடுத்துத் தந்தாள்.

சங்கரனை நினைத்துக்கொண்டாள். குரங்காட்டிப் போல அவரை ஆட்டிப் படைத்ததை எண்ணிக் கொண்டாள். மனசுக்கு என்னவோ செய்தது. "அவரின் அருமையை உணராமல் அன்பைப் புரிந்துகொள்ளாமல் நழுவ விட்டுவிட்டோம்" என்று எண்ணியபோது கண்களில் கண்ணீர்ப் பெருகியது. யாருமறியாமல் துடைத்துக்கொண்டாள். நல்லவனோ கெட்டவனோ கணவன் இறந்த பிறகு மனைவிக்கும் அல்லது மனைவி இறந்த பிறகு கணவனுக்கும் இந்தப் புரிதல் வருகிறது. ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடுகிறது. இப்போது வாசல்படியை விட்டு உள்ளே ஹாலுக்குள் போய் யாருக்கும் இடைஞ்சல் இல்லாத இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டாள்.

எதற்கும் பதில் பேச மாட்டார்  சங்கரன். எல்லாவற்றையும் செய்வார் முகஞ்சுளிக்காமல்.

நாராயணன் கேட்டான் ஏம்பா அம்மா இப்படி எதுக்கெடுத்தாலும் கத்திக்கிட்டு… நொட்டம் பேசிக்கிட்டிருக்காங்க…

அது அவளோட இயல்புப்பா… ஆனா ரொம்ப நல்லவ.. அடுத்தவங்க வம்புக்குப் போக மாட்டா… கதை பேச மாட்டா… எல்லாமும் நம்பகிட்டதான்.

அது உண்மைதாம்பா என்பான் நாராயணன்.

சங்கரன் இறந்துபோய் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் ஒவ்வொரு செயலின்போதும் அவர் இருந்துகொண்டேதான் இருக்கிறார்.

சாயங்காலம் வரும்போதே நாராயணன் கேட்டான்… என்னம்மா இது உள்ளே வந்து உட்கார்ந்திருக்கே..

வெளியே குளிருதுப்பா. கொசுக்கடி வேற. அதான் இங்க வந்து உக்காந்திருக்கேன். சாப்பிட்டியாம்மா?  என்றான்.

சாப்பிட்டேம்பா என்றாள் சாரதா.

என்ன சாப்பிட்டே?

சூடா இட்லி ஊத்திக் கொடுத்தா பாப்பா? பூண்டு துவையல் வேற நல்லெண்ணெய் விட்டு ரெண்டு இட்லி கூடவே சாப்பிட்டேம்பா.

உள்ளிருந்து வந்த மருமகள் இதைக் கேட்டாள். அவளுக்கு சாரதாவின் திடீர் மாற்றம் விளங்கவேயில்லை.

நாராயணன் பசிக்குது… எனக்கும் இட்லியும் பூண்டு துவையலும் கொடு… அம்மாவுக்கு டீவிய போட்டுவிடு என்றான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com