சமூக நீதி காத்த முதல் தமிழனுக்குச் சிலை.

சமூக நீதி காத்த முதல் தமிழனுக்குச் சிலை.
Published on

– ஆதித்யா

ண்மையில் பிரதமர் மோடி ஹைதராபாத் நகரில் ஒரு பிருமாண்டமான ராமானுஜர் சிலையைத் திறந்து வைத்தார். இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது. சிலைக்கு 'ஸ்டாச்சு ஆப் ஈக்குவாலிட்டி' எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

ராமானுஜர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சிபுரத்தில் கல்வி பயின்றவர். காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியின் பக்தர்.  ராமானுஜர் இந்து பக்தி வழிபாட்டு மரபின் ஒரு முன்னோடி. இவர் 1017 முதல் 1137 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்தவர். ராமானுஜரின் 1000வது பிறந்தநாள் விழாவின்போது, இந்த சிலைக்கான ஏற்பாடுகள் தொடங்கின.

இவரது ஆன்மீகப் பணிகள்  பெரும்பாலும் ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டிருந்தன. இன்று பேசப்படும் சமூக நீதிக்கு  அன்றே வித்திட்டவர். சமஸ்கிருதம் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த கோயில்களில் தமிழைப் புகுத்தியவர். 'ஒரு கோயில் எப்படி நிர்வாகம் செய்யப்படவேண்டும்' என்ற விதிகளை வகுத்து ஒழுங்குபடுத்தியவர். 

தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ பீடாதிபதி திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமி தனது ஆசிரம வளாகத்தில்  இதை எழுப்பியிருக்கிறார். இத்திட்டம்  2014 தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டு முழு திட்டமும் நிறைவடைந்தபோதிலும் பிரதமரின் வருகைக்காக காத்திருந்தது.

இது வெறும் சிலையாக மட்டும் அமைக்கப்படாமல் மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு  வருவோரைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சிலை மட்டுமில்லை, அதோடு இணைந்த அனைத்தும் பிருமாண்டம். இந்த ராமானுஜர் சிலையின் உயரம் 108 அடி. இதன் மேடையின் மொத்த உயரம் 54 அடி கீழே உள்ள பீடத்துடன் சேர்த்து இந்த சிலை 216 அடி உயரம் உள்ளது. பீடத்தில் 54 தாமரை இதழ்கள், அவற்றின் கீழ் 36 யானை சிற்பங்கள், அல்லி இதழ்களில் 18 சங்குகள், 18 சக்கரங்கள், சிலைக்கு அருகில் ஏற 108 படிகள் ஆகியவை உள்ளன. ராமானுஜர் தியான நிலையில் காட்சியளிக்கும் இந்தச் சிலையின் விரல் நகங்களிலிருந்து 135 அடி உயரமுள்ள பிருமாண்டமான  தண்டம் (மடங்களின் தலைவர்கள் எப்போதும் கையில் பிடித்திருப்பது) வரை இந்த சிலை தமிழக சிற்ப பாணியில்  அமைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,FACEBOOK/JEEYARSWAMY

பீடத்தின் மேலே உள்ள முக்கிய சிலை மட்டுமில்லாமல், அந்த பத்ரபீடத்தில் 120 கிலோ எடையுள்ள தங்கச் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ராமானுஜாச்சாரியார் 120 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுவதால், அதே கிலோ எடையுள்ள தங்கச் சிலையை நிறுவியுள்ளனர்.

இந்த பிரும்மாண்ட சிலை தவிர, மேலும் 108 சிறிய கோயில்களில் 108 திவ்ய தேசங்களின்  திரு மூர்த்திகள்   ஒரே இடத்தில் அத்தனை திவ்ய தேசங்களையும் தரிசனம் செய்யும்  வாய்ப்பு.

இந்த சிலைகள் தவிர, ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தொகுப்புகள் உள்ள இடம், வேத நூலகம், அறிஞர் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கான அரங்கம், ஆம்னி மேக்ஸ் திரையரங்கம் ஆகியவை உள்ளன. வெளியே ஒரு  அட்டகாசமான  இசை நீரூற்று (musical fountain) அமைக்கப்பட்டிருக்கிறது.

மொத்த திட்டத்திற்கும் ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்திற்கான முழு நிலமும் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.  பிரபல தொழிலதிபர் ஜூபல்லி ராமேஸ்வர ராவ் இந்த நிலத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

'மை ஹோம்ஸ்' குழுமத்தின் தலைவர் ஜூபல்லி ராமேஸ்வர ராவ் தற்போதைய தெலங்கானா அரசுக்கு மிக நெருக்கமானவர். நன்கொடைகள் மூலம் ரூ.1,000 கோடி திரட்டியுள்ளதாக  ஒருங்கிணைந்த வேதிக் அகாடமி  அறிவித்துள்ளது. இந்த சிலைக்கு ரூ.1,000 கோடியிலிருந்து வரி தவிர, ரூ.130 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் நின்ஜியாங்கில் உள்ள செங்குவாங் குழுமத்தைச் சேர்ந்த எரோஜன் கார்ப்பரேஷன் (Erojan Corporation) என்ற நிறுவனம், இந்த சிலையை நிறுவத் தனது பங்கை அளித்துள்ளது. உலகம் முழுவதும் பல பிரும்மாண்ட சிலைகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவர்கள் தான் சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கியவர்கள்.

இந்த சிலை அமைப்பதற்கு  தங்கம், வெள்ளி, வெண்கலம், பித்தளை மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களின் 7000 டன்   கலவை   பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

சிலையின் பிரும்மாண்டத்துக்கு ஏற்ப அர்ப்பணிப்பு விழாவும் பிரும்மாண்டமாகியிருந்தது.  144 யாக சாலைகளில், 1035 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 1.5 லட்சம் கிலோ பசு நெய் மூலம் 5000 அர்ச்சகர்கள் பலவிதமான  யாகங்களையும்  ஹோமங்களையும் ஆகமவிதிகளின் படி  செய்தனர். இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த பூஜைகளில் பிரதமர் பக்தி பூர்வமாக, நெற்றியில் வைஷ்ணவ இலச்சினையான நாமம் தரித்து  ஆந்திரா  அர்ச்சகர் பாணியில் மஞ்சள்  பட்டு வேஷ்டி உத்தரீயம் அணிந்து கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார்.

"மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்த ஒருவருக்கு 1,000 கோடி ரூபாயில் சிலை தேவைதானா" என்றும், "ராமானுஜர் உண்மையாகவே சமத்துவத்துக்காக பாடுபட்டவரா" என்றும் தெலுங்கு சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்திருக்கிறது.

ஆனால்  நகருக்கு வெளியே மிகப்பெரிய பரப்பில்  இரவில் பல நிறங்களில் ஜொலிக்கும்  பிரும்மாண்டமான சிலை, இசைக்கேற்ப  நிறம் மாறும் பெரிய நடன ஊற்று,  இரவில் ஹை டெக்  லேசர் விளக்குகளில் அமைக்கப்பட்ட ஒலி ஒளி காட்சியில் ராமானுஜர் வாழ்க்கை என்று அமைந்திருக்கும் இந்த இடம்  நிச்சியமாக  ஹைதராபாத்தின் முக்கிய சுற்றுலா தலமாகப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com