
உனக்காக நானிருக்கிறேன். தேவையில்லாமல் கவலையே படாதே. கெட்ட கர்மாவில் இருந்து தப்பமுடியாது. அந்த கர்மாவின் பலனை நீ முடிக்கும் வரை உன்னருகிலேயே, உனக்காக நானிருக்கிறேன், கவலைப்படாதே.
எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று சோர்ந்து போகாதே. உன் வாழ்வில் கெட்ட கர்மாக்கள் இருந்தால், அதை அனுபவிக்க வேண்டும். யாரும் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஆனால் நிச்சயம் அதையடுத்து நல்ல வழி பிறக்கும். என்னை நம்பு. உனக்காக நான் இருக்கும்போது நீ கவலையேபடாதே!
இன்ப நிலை நீங்கி துன்பச் சுமையை சுமக்கிறாயே. அனுபவிக்க இன்னும் என்ன இருக்கிறது என்ற அளவில் துன்பத்தின் எல்லை வரை சென்றுவிட்டு, வெறுமையாய் நின்று என் முகத்தை உற்றுப் பார்க்கும் உன்னை நான் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்காதே.
உன்னை கரிசனத்தோடு தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உனது இழப்புகளை திரும்பிப் பார்த்தால் எனது மனம் கூட நடுங்கத்தான் செய்கிறது.
ஒவ்வொரு முறையும் உன்னை தைரியப்படுத்திக்கொண்டு வருகிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்.
இன்னும் நீ கடந்துபோக வேண்டிய தூரம் கொஞ்சம் இருக்கிறது. அதுவரை எல்லையற்ற பொறுமையோடு, தீவிர நம்பிக்கையோடு உனது சுமையின் கணம் தெரியாமல் இருப்பதற்காக எனது நாமத்தை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
எனது சத்தத்தை உணர்வுள்ள நீ கவனித்துக் கேட்டு அதன்படி நடந்துகொள்.
அப்போது உனக்கு ஆறுதல் கிடைக்கும். எதற்காகவும் கவலைபடாதே நான் கூடவே இருக்கிறேன். நான் உனக்குத் தேவைப்படும் நேரத்தில் அருள் செய்யக் காத்திருக்கிறேன்.
அல்லாஹ் மாலிக்…