
பாரதியின் உயர்ந்த கருத்துக்களை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா இன்றைய இளைய தலைமுறைக்கு நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம்தான்.
நாளுக்கு நாள் வளரும் இந்த டிஜிடல் உலகின் வளர்ச்சிக்கு ஏற்றபடியும், பல துறைப் போட்டிகளை சமாளிக்கவும் அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சிறு வயதிலிருந்தே எல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படுகிறார்கள்.
அவர்களது திறமையும் அறிவும் நவீன தொழில்நுட்பத்தில் அதிகரித்தே வருகிறது. இருந்தாலும், நம் தேசத்தின் பெருமையும் கலையும் கலாசாரமும், தெய்வீகமும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறதா?
அவற்றை போதிப்பதற்கான முயற்சிகள், பெற்றோரால் எடுக்கப்படுகிறதா?
பள்ளி கல்லூரிகளில் கற்றுத் தரப்படுகிறதா?
சுதந்திரத்திற்காக பாடுபட்ட நம் தலைவர்களின் தியாக வரலாறுகள் பாடத்திட்டத்தில் இருக்கின்றனவா?
இப்படி நம் முன் பல கேள்விகள்.
அநேகமாக அதற்கான முயற்சிகளில் நாம் பின் தங்கியிருக்கிறோம் என்பது தான் உண்மை.
நாட்டுப் பற்றையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் பாரதியார் பாடல்கள் பற்றி நம் மாணவர்களுக்கு என்ன தெரியும்?
கூட்டம் போட்டுக் கூப்பிட்டால் அவர்கள் வருவார்களா?
ஒரே வழி நாம் மாணவர்களை நேரடியாக சந்தித்து பாரதியின் உயர்ந்த சிந்தனைகளை அவர்கள் மனதில் விதைக்க வேண்டியதுதான் என்று ஒரு திட்டம் உருவானது.
அதற்கு பாரதி உலா என்று பெயருமிடப்பட்டது.
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், அமரர் நடிகர் இயக்குநர் விசு ,நடிகர் டெல்லி கணேஷ், உரத்த சிந்தனை அமைப்பின் பொதுச் செயலாளர் உதயம்ராம் ஆகியோர் ஒன்று கூடி சிந்தித்து செயல்படுத்தியதே பாரதி உலா.
பாரதியார் பிறந்த மாதம் டிசம்பர் அல்லவா?
ஆண்டுதோறும் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி இரண்டாம் வாரம் வரை, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளைத் தொடர்பு கொண்டு,
மாணவ / மாணவியரை பாரதியார் பாடல்களைப் பாட வைத்து, அவரது தேசபக்தி, பெண்விடுதலை, மனதில் உறுதி வேண்டும் போன்ற கருத்துக்களைப் பேச வைத்து அவர்களிடையே சிறந்த சிந்தனைகளைப் பதிய விடுவதுதான் பாரதி உலாவின் பிரதான நோக்கம்.
இதை கடந்த ஏழு ஆண்டுகளாக செய்து வருகிறது உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 முதல் 40 கல்லூரிகளிலும், மற்றும் சில பள்ளிகளிலுமாக பாரதி உலா நடைபெற்று வருகிறது.
சென்னை, தஞ்சை, திருச்சி, கோவில்பட்டி, திருநெல்வேலி, உத்தமபாளையம், சிதம்பரம், சிவகாசி, குமாரபாளையம், தேனி என்று தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள கல்லூரிகளிலும் பாரதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஹைதராபாத் உரத்த சிந்தனை கிளை சார்பில் நடைபெற்ற பாரதி உலாவில் பல மாணவ / மாணவிகள் பங்கேற்கின்றனர்.
ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு பள்ளி / கல்லூரி மாணவர்களையும் உரத்த சிந்தனை இணைத்தது.
இந்த உலாவில் பல துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
உள்ளூர், வெளியூர் கல்லூரி, பள்ளிகளுக்கு வந்து மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய சிறந்த கருத்துக்களைக் கூறுகிறார்கள்.
தற்சமயம் மணிப்பூர் மாநில ஆளுனராக இருக்கும் திரு. இல.கணேசன், திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், மறைந்த இயக்குனர் விசு, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், ஆடிட்டர் ஜே. பாலசுப்பிரமணியம், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன், இயக்குனர் ராசி அழகப்பன், இன்னும் தபம்ஸ் நிறுவனர் மேகநாதன், டெக்னோ ப்ராடக்ட்ஸ் முரளி ஸ்ரீனிவாசன், சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸ் நிறுவனர் பஞ்சாபகேசன், இயக்குனர் யார் கண்ணன் உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்கள் பலரும் பாரதி உலாவில் உரத்த சிந்தனையின் சிறப்பு விருந்தினர்களாக இணைந்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகளில், "கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 65 ஆயிரம் மாணவ / மாணவியர்களிடம் பாரதியின் கருத்துகளை கொண்டு சென்றிருப்பதில் பெருமிதம் அடைகிறோம்" என்கிறார் உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான உதயம் ராம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பள்ளிகள் / கல்லூரிகள் இயங்காத சூழலில் இணையம் வழியே கல்லூரிகளுடன் இணைந்து பாரதி உலா வெற்றிகரமாக நடைபெற்றது.
2021ம் ஆண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் வந்ததால், சில கல்லூரிகளுக்கு நேராகச் சென்று மாணவரிடையே பாரதி உலாவை நடத்த முடிந்தது.
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியிலிருந்து ஆறு தலைப்புக்கள் உரத்த சிந்தனையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
அந்தந்த தலைப்பிற்கேற்ப மாணவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்து சிறப்பாக உரையாற்றுகின்றனர்.
இதன் மூலம் அவர்களின் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள முடிகிறது.
எதிர்காலத்தில் இவர்களிலிருந்து சிறந்த மேடைப் பேச்சாளர்கள் உருவாவார்கள் என்பது உரத்த சிந்தனையின் கருத்து.
பாடல்களைப் பொறுத்தவரை மாணவர்களின் சாய்ஸ்தான் என்றாலும் பெரும்பாலும் திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியார் பாடல்களையே பாடுகின்றனர்.
திரு.ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த 'பாரதியார்' திரைப் படத்திலிருந்து இளையராஜா இசையமைத்த பாடல்கள் பெரும்பாலும் பாடப்படுகின்றன.
இந்த பாரதி உலாவில் கவனிக்கத்தக்க ஒரு அம்சம், மாணவர்களைவிட, மாணவிகளே அதிகம் பங்கு பெறுகிறார்கள்.
இவர்களுக்கு, பாரதியார் பாடல்கள் புத்தகம், சான்றிதழ்கள், மற்றும் நினைவுப்பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன.
இவர்களில் இருந்து ஒவ்வொருவர் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெறும் பாரதி உலா நிறைவு விழாவில், பிரமுகர்கள் முன்னிலையில் பேசுவார்கள். பாடுவார்கள்.
இவர்களுக்கு, பாரதி நூல்கள், நினைவுப் பரிசு தவிர, காசோலையும் வழங்கப்படுகிறது.
கோவில்பட்டி போன்ற ஊர்களில், பாட்டு, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் எல்லா பள்ளி மாணவ / மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பாரதி நூல்கள் வழங்கப்படுகின்றன.
கல்லூரிகள் தவிர்த்து மும்பை, தில்லி, ஹைதராபாத்திலுள்ள தமிழ் அமைப்புகளுடனும் , பஹ்ரைனிலுள்ள சொல்வேந்தர் மன்றங்களுடனும் இணைந்து கருத்தரங்கம் பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பன்னாட்டு மாணவர்கள் பங்கேற்கும் பேச்சரங்கம்,பட்டிமன்றம் நிகழ்ச்சிகளும் இணையம் மூலம் நடைபெறுகின்றன. இதில் அமெரிக்காவில் இருக்கும் மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் பிரபல கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இணையம் வழியே இளைய தலைமுறையினரின் இதயங்களில் பாரதியின் சிந்தனைகளை விதைக்கும் உரத்த சிந்தனையின் பணி இது.
மாணவ / மாணவிகளின் சிறந்த பேச்சுகளின் தொகுப்பு உரத்த சிந்தனை முகநூல் மற்றும் உரத்த சிந்தனை டிவி (யூ டியூப்) யில் ஒளிபரப்பாகின்றன.
கடந்த ஆண்டும் நவம்பர் 30ம் தேதி துவங்கி ஜனவரி இரண்டாம் வாரம் வரை பாரதி உலா நிகழ்ச்சிகள் பல கல்லூரிகளில் நடைபெற்றன.
இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், நடிகர் டெல்லி கணேஷ், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குனர் ராசி அழகப்பன்,
ஆடிட்டர் ஜே. பாலசுப்பிரமணியம், உட்பட பல பிரமுகர்கள் நேரிலும், மற்றும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸ் நிறுவனர் பஞ்சாபகேசன், கிரிஜா ராகவன் உட்பட பல பிரமுகர்கள் இணையம் வழியாகவும் பாரதி உலா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
பாரதி உலாவின் ஏழாம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில், 'பாரதியார்', 'பெரியார்', 'மோகமுள்' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த விழா, வாணிமஹாலில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி மிகச் சிறப்பாக ஆடிட்டர் ஜெ. பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஆடிட்டர் என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன்,
டெல்லி கணேஷ்,ராசி அழகப்பன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், முரளிசீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டோ மணி குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில்,பாரதி உலா நிகழ்ச்சிகள், நேரலையாக உரத்தசிந்தனையின் யூ டியூபில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.