மாண்புமிகு தமிழக முதல்வரே…

மாண்புமிகு தமிழக முதல்வரே…

Published on

தலையங்கம்

க்ரைன் போர்க்களத்தில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்கத்  தமிழக அரசு சார்பில் நால்வர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்தக் குழுவினர்,  'உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று தமிழக மாணவர்கள் நாடு திரும்ப உதவும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பார்கள்' என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இது தமிழக அரசு, மத்திய அரசின் செயல்பாடுகளில் தலையிடும்  செயல்.  இதுபோன்ற வெளியுறவுத்துறை செயல்பாடுகளில்  ஒரு மாநில அரசு தலையிடுவது மத்தியில்  'கூட்டாட்சி' என்ற கோட்பாடுகளுக்கு எதிரானது. உக்ரைனில் சிக்கியிருப்பது தமிழக மாணவர்கள் மட்டுமில்லை; இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்.  இதுபோல் ஒவ்வொரு மாநிலமும் ஒரு குழுவை அனுப்பத் திட்டமிட்டால் என்னவாகும்?

மேலும் இந்தப் போர் கொடுமையினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இந்திய மாணவர்கள்.  அந்த நிலையில் தமிழக மாணவர்களை மட்டும்  மீட்க  ஒரு குழு அதுவும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உயர் மட்டக் குழு அமைத்திருப்பது மற்ற மாநில மாணவர்களிடமிருந்து  தமிழக மாணவர்களைப் பிரிப்பது என்பதாகும். இது  மற்ற மாநிலத்தவருக்குத் தமிழர்கள்  மீதான  வெறுப்புணர்ச்சியை தூண்டும்.

'பிரிவினை வாதம் பேசும் கட்சி தி.மு.க.' என்ற பெயர் மெல்ல மெல்ல மங்கி, தேசிய அளவில் மதிக்கப்படும்  ஒரு கட்சியாக வளர்ந்து வரும் நேரத்தில்  'ஏன் இப்படி ஒரு விபரீத யோசனை எழுந்திருக்கிறது' என்று புரியவில்லை.

போர்ச் சூழலில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு  ஒன்றிய அரசு உதவிக்கரம் நீட்டாமலிருந்தால் கூட இம்மாதிரியான செயல்பாடுகளை  ஓரளவு  நியாயப்படுத்த முடியும். ஆனால்  ஒன்றிய அரசு இதற்கான ஒரு திட்டத்தை ஒரே இரவில்  தயாரித்து  அமைச்சரவையின் ஒப்புதலுடன்  உக்ரைனின் அண்டை நாடுகளின் அரசுகளிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி, போர் விமானங்கள்  உட்பட பல முறை விமானங்களை அனுப்பி நம் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்துவிட்டார்கள். சிக்கித் தவிக்கும் 20000 மாணவர்களில் 6 நாட்களில்  13200 மாணவர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள். தொடரும் மீட்புப்பணிகளால் மற்றவர்களும் பாதுகாப்பாக சில நாட்களில்  திரும்பப் போவது நிச்சியம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கூட  உக்ரைனில் தவிக்கும் தங்கள் மக்கள் நாடு திரும்ப இதுபோல் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.  ஆனால் இந்தியா உலகநாடுகளை  இந்தச் செயலால் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஆட்சியைப் பிடித்த மிகக் குறுகிய காலத்தில் பொறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்  முதல்வர்  ஸ்டாலின், இந்த விஷயத்தில் சறுக்கிவிட்டார்.  ஒன்றிய அரசின் குழுவுடன் எங்கள் மாநில அரசின் குழுவையும் அழைத்துச்சென்று இந்திய மாணவர்களைக்  காப்பாற்றும் பணிகளில் ஈடுபடுத்துங்கள் என்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் அகில இந்திய அளவில் அவர்  மதிப்பு உயர்ந்திருக்கும்.

அதை விடுத்து  பிரதமர் மோடியின் ஸ்டைலைப் பின்பற்றிக்  கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இதுபோல விளம்பரத்துக்காக செயல்படுவது  வருங்காலங்களில் அவரது அரசியல் வாழ்க்கையைப்  பாதிக்கும்.

மாண்புமிகு முதல்வரே இதுபோன்ற  செயல்களால் உங்களது மதிப்பை  நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com