போரும் அமைதியும் – 2

போரும் அமைதியும் – 2
Published on

சிறப்புக் கட்டுரை

– ரமணன்

என்று மடியும்  இந்த "வெளிநாட்டு மருத்துவர்" மோகம்?

உக்ரைன் போரின் விளைவாக எழுந்த சூழலினால் நமது மாணவர்கள் அங்குச் சிக்கித் தவித்ததும்  அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து அவர்களை மீட்டதும் நாம் அறிந்த கதை. அறியாத கதை அந்த மாணவர்களின் உண்மையான நிலை.  போர்ச் செய்திகள் வந்த  கால கட்டத்தில்  பலரிடம் எழுந்த கேள்வி இவ்வளவு இந்திய மாணவர்களா அங்கு  மருத்துவம் படிக்கிறார்கள்?

உக்ரைனில் மட்டுமில்லை சீனா, ரஷ்யா, கிரிகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா, ஆர்மேனியா போன்ற பல நாடுகளில் இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கிறார்கள். சராசரியாக ஆண்டுதோறும் 20000 முதல் 25 ஆயிரம் மாணவர்கள்  இந்த நாடுகளுக்குச் செல்லுகிறார்கள். இதில் முதலிடம் சீனா, அடுத்தது ரஷ்யா. அதற்கடுத்தது உக்ரைன். அங்குதான் அதிக மாணவர்கள் செல்லுகிறார்கள். இது ஏதோ இப்போது நடப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்கிறது. ஆண்டுதோறும் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு என்ன காரணம்?

"நீட் தேர்வு"  என்று நமது முதல்வரும், அண்டை மாநில அரசியல் வாதி குமாரசாமியும் சொல்லுகிறார்கள்.  ஆனால் இது சரியான காரணம் இல்லை. முக்கியமான  முதல் காரணம்: கல்விக்கட்டணம்.  இந்தியாவில் மருத்துவம் படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு போதுமான  அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. தனியார் கல்லூரிகளின் கட்டணங்கள் மிக அதிகம் என்பதும் காரணங்களில் ஒன்று. இந்தியாவில் அரசுக் கல்லூரிகளில் பல லட்சங்களும்,  தனியார் கல்லூரிகளில் கோடிகளில் செலவாகும் இந்த மருத்துவப் படிப்பை, அதிகபட்சம் 4 ஆண்டு  படிப்பையும் 25 லட்சத்துக்குள் இந்த நாடுகளில் படிக்க முடிகிறது.

நீட் தேர்வில் தேர்வு பெறாதவர்கள், தேர்வு பெற்றும் தகுதிப்பட்டியலில் இடம் பெறாதவர்கள், இட ஒதுக்கீட்டால்  அவர்களுக்கான இடம் கிடைக்காதவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணங்களைச் செலுத்த முடியாதவர்களின் 'மருத்துவர் ஆக வேண்டும்' என்ற கனவை இதன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.  நமது கல்வி முறையிலிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையினால்,  மதிப்பெண்கள் இருந்தும்  இங்கு மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற முடியாத மாணவர்களும் இதில் அடக்கம்.

கடந்த சில ஆண்டுகளில் இந்த நாடுகளின்  மருத்துவக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க ஏஜென்சிகளை நியமித்திருக்கிறது. இவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களால்,மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளின் மூலம்  இந்த மாணவர்களின் கனவை காசாக்கிக்கொள்கிறார்கள்.

இன்று இந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. அவர்களுக்கு இங்கு படிப்பைத் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல் கூட எழுப்பப்படுகிறது.

ஆனால் அவர்களின்  உண்மை நிலையை அதிகமாக ஊடகங்கள் பேசுவதில்லை. வெளிநாட்டு கல்லூரிகளில் கல்விக்கட்டணம் குறைவாகவிருக்கலாம்.  ஆனால் தரம் ஒரு கேள்விக்குறியாகத் தானிருக்கிறது.

இம்மாதிரி வெளிநாட்டு கல்லூரிகளில் மருத்துவம் பயின்றவர்கள், இங்கு வந்தவுடன்  மருத்துவப் பணியைத் தொடங்க முடியாது. அரசுப்பணி என்றில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் கூட பணியாற்ற முடியாது. அதுமட்டுமில்லை, தனியாக  ஒரு மருத்துவமனையைக்கூட தொடங்க முடியாது. அந்தத் தகுதியைப்பெற  ஒரு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும். FMGI என்ற அந்தத் தேர்வுதான் இந்த மாணவர்களின் மருத்துவ அறிவுத்தரத்தை மதிப்பிடுகிறது.  அதில்  ஆண்டுதோறும் 14% முதல் 20% தான் தேர்வாகிறார்கள். மற்றவர்கள்?  வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றும் மருத்துவராக முடியாமல் கருகிய கனவுகளுடன்  வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். பலர் தனியார் மருத்துவமனைகளில் நிர்வாகப்பணிகளை மேற்கொள்கிறார்கள்.  அல்லது வளர்ச்சி அடையாத சிறிய ஆப்பிரிக்க  அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மிகக் குறைந்த ஊதியங்களில் பணியில் சேருகிறார்கள்.

ஒருபுறம் 138 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில்  1000 பேருக்கு 1.34  டாக்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.  மறுபுறம் 'மருத்துவராக வேண்டும்'  என்ற லட்சியக்  கனவில்  15 லட்சம் மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த இரண்டு புள்ளிகளையும் இணைத்து இந்தப் பிரச்னைக்கு ஒன்றிய அரசு தீர்வு காணவேண்டும்.  தமிழகத்தைப்போல்  எல்லா மாநிலங்களிலும்  மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும்.  இந்தியாவில் 'அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை' என்ற நிலை உருவாக வேண்டும். அதேபோல், 'தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு கல்லூரி கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும்'  என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை  உடனடியாக  செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது.

பிரதமரின் "எல்லாவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சி  திட்டம்"  மருத்து கல்வியிலும்  இருக்க வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com