ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறதா?

ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறதா?
Published on
 – ஹர்ஷா
"முகநூல் இன்றி இல்லை உலகு" என்று சொல்லும் அளவிற்கு  இன்று அது பலகோடி மக்களின் வாழ்க்கையில் அவசியமாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபேஸ்புக்கை, உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இளைய தலைமுறையினர் உள்பட அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி, பயன்பாட்டு சாதனமாகவும், தொழில் செய்யும் இடமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள், மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா உள்பட பல நாடுகளில், ஃபேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் திடீரென மணிக்கணக்கில் முடங்கின. இதன் காரணமாக பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் 6 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு 52 ஆயிரத்து 217 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 44 ஆயிரத்து 351 கோடி ரூபாயில் இருந்து, 9 லட்சத்து 7 ஆயிரத்து 93 கோடி ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது. இப்படி 'ஃபேஸ்புக் இயங்காவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும்'  என்ற நிலையில் இருக்கும் ஃபேஸ்புக்கின்  பெயர் மாற்றப்போவதாக செய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.

உண்மை நிலை என்ன?

இந்நிலையில், ஃபேஸ்புக் ஆண்டு கூட்டத்தின்போது பேசிய அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் 'மெட்டா' என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் சிந்திக்கவைக்கிறது. ஃபேஸ்புக் என்பது அதன் தாய் நிறுவனத்தின் ஓர் அங்கம். அந்த தாய் நிறுவனம்  VR (Virtual Reality) என்ற மெய்நிகர் உலகில் பல புதிய சாதனைகளைச் செய்ய கடந்த சில ஆண்டுகளாகத் திட்டமிட்டுக்கொன்டிருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக் நிறுவனம் உலகின் பல நாடுகளில் கடும் விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகி அதற்கான விளக்கங்களைக் கொடுத்து சில இடங்களில்  மன்னிப்புகளையும் கேட்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.  இந்த நிலையில்  தன் நிறுவனத்துக்கான விரிவாக்கத்துக்காக  அமெரிக்கப்  பங்கு சந்தையில் இறங்கினால் சரியான அளவில் வரவேற்பிருக்காது என்பதால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், நிறுவனங்களின் தாய் நிறுவனமான  ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை 'மெட்டா' என்று மாற்றியிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், அதன் பங்குதாரர்களின் கூட்டத்தில் அறிவித்தார். சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக்கொண்டதாகவும், அதனைக் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது. அதனால், இந்த மாற்றம்' என்று அறிவித்திருக்கிறார்.

மெய்நிகர் ஆன்லைன் உலகமான 'மெட்டாவெர்ஸ்' நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாக தெரிவித்த மார்க் ஜூக்கர்பெர்க்,  அதனை பிரதிபலிக்கும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றியிருப்பதாகவும்  சொல்லுகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்.

அது என்ன பெயர் 'மெட்டா'?

'மெட்டாவெர்ஸ்' என்ற பதத்தைப் பயன்படுத்தி ஒரு மெய்நிகர் ஆன்லைன் உலகை நிறுவுகிறார். இந்தப் பெயரில் எதிர்கால 3டி உலகம் எப்படி இருக்கும்? என கட்டுரைகளும்  ஸ்பீல்பர்க்கின் ஒரு திரைப்படமும் வெளியாகியிருக்கிறது.  இந்த மெய்நிகர் உலகில் எல்லாம் இருக்கும். இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் நானும் இந்த உலகில் உலவி நமக்குப் பிடித்ததைச் செய்யப்போகிறோம். அது விளையாட்டாக இருக்கலாம், கல்வி அல்லது ஏதாவது கலையாகக் கூட  இருக்கலாம். இதில், அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள் என்று  ஜுக்கர்பெர்க் மார்க்,  நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இவருடைய இந்த பெயர் மாற்ற அறிக்கையில் முக்கியமான விஷயம்.  ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே 'மெட்டா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆப்களின் பெயரில் எந்த மாற்றமுமில்லை என்பதுதான். அதாவது, ஃபேஸ்புக்கின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை. அதன் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டும் தான் மாறுகிறது. அதனால் நமக்கென்ன என்கிறீர்களா?  இந்த தாய் அதன் குட்டிகளைவிட பல அடிகள் பாயும் சக்தியுடன் புதுவடிவம் எடுக்கப்போகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com