கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே
Published on

முனைவர் அ.போ. இருங்கோவேள்,
மேலாளர்  – மருத்துவ சமூகவியல்,
சங்கர நேத்ராலயா,
சென்னை – 600006.

  நீரிழிவும் நம் விழிகளும்தேவை விழிப்புணர்வு

ருத்துவ துறையில் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மனித குலத்துக்கு ஒரு வரப்பிரசாதம். அந்த வகையில் ஒரு வரம் – இன்சுலின்.

அந்த இன்சுலின் கண்டுபிடிப்பின் பின்னணியில் ஒரு மாபெரும் அற்புதமான வரலாற்றுச் செய்தி இருக்கிறது.

  • 1921 ஆம் வருடம் டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஃப்ரெடெரிக் பாண்டிங்க் என்பவரும் அமெரிக்காவைச் சேர்ந்த பயோமெடிக்கல் சயிண்டிஸ்ட் சார்லஸ் பெஸ்ட் இருவரும் நாயின் கணையத்திலிருந்துதான் (Pancrease) இன்சுலினை கண்டுபிடித்தார்கள்.
  • இன்சுலினை, கணையம் நீக்கப்பட்ட நாயின் உடலில் ஊசி மூலம் செலுத்தினர். அதனை தொடர்ந்து கண்காணித்தபோது நாயின் இரத்தத்தின் குளுகோஸ் அளவு குறைந்ததை கண்டுபிடித்தனர்.
  • ஜேம்ஸ் காலிப் என்பவர் இந்த இன்சுலினை சுத்திகரித்து, மனிதர்களுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்தார்.
  • 1923ம் வருடம் ஃப்ரெடெரிக் பாண்டிங்க் மற்றும் மெக்லியோடு இருவருக்கும் மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 'பொதுமக்களிடையே நீரிழிவைப் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்த வேண்டும்' என்ற எண்ணத்தில் பன்னாட்டு நீரிழிவு நோய் கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க்கின் பிறந்தநாளை உலக நீரிழிவு தினமாக அறிவித்தது.
  • அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் நாள் 'உலக நீரிழிவு தினமாக' அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் நாள் 'உலக நீரிழிவு தினமாக' அனுசரிக்கப்படுகிறது.

நீரிழிவு அல்லது டயபெடிஸ் என்றால் என்ன?

  • டயபெடிஸ் மெல்லிடஸ் (diabetes mellitus) எனும் சர்க்கரை பிரச்னை அல்லது நீரிழிவு பிரச்னையானது நம் உடலின் சர்க்கரை சேமிப்பையும் அதன் உபயோகத்தையும் சேதப்படுத்துகிறது.
  • நமது உடல் பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது. நாம் அல்லது நமது உடலின் ஒவ்வொரு செல்களும் செயல்படுவதற்கு சக்தி தேவை. எனவே நாம் சாப்பிடுகிறோம்.
  • நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டிலிருந்து 'குளுக்கோஸ்' எனப்படும் சர்க்கரை தயாராகிறது.
  • இரத்த ஓட்டத்தின்போது,  இரத்தத்திலிருந்து குளுக்கோஸினை நமது உடலின் அனைத்து உயிருள்ள செல்களுக்கும் எடுத்துச் செல்வது இன்சுலின் எனப்படும் ஹார்மோன்கள் ஆகும்.
  • எனவே இந்த குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையை,  ஆற்றலை, சக்தியை இன்சுலின் துணையில்லாமல் நமது உடலின் செல்கள் ஏற்றுக்கொளவதில்லை.
  • இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது நமது உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி ஆகும்.
  • இந்த "கணையமானது தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போது", அல்லது "உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை நமது உடல் நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை"  – நீரிழிவு குறைபாடு எனப்படுகிறது.
  • இன்சுலின் எனப்படும் ஹார்மோன் கணையத்தில் உள்ள வலியுணர்வுப் பகுதியில் உள்ள பீட்டா செல்களில் தயாராகிறது.
  • இந்த நிலையில் நமது உடலின் சில உறுப்புகள் செயல் இழக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான உறுப்புகள் கண்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் நமது பாதங்கள்.

இதில் கண்கள் குறித்து கண்விழித்திரை நிபுணர் ராஜிவ் ராமனிடம் பேசியபோது…

விழித்திரை (Retina) என்பது என்ன?

நமது கண்களை போட்டோ கேமராவுக்கு ஒப்பிடலாம். (ஃப்லிம் கேமரா – டிஜிட்டல் கேமரா இல்லை).

விழித்திரை என்பது கேமராவினுள் இருக்கும் ஃப்லிம் போன்றது. நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்ணின் முன்புறம் உள்ள கார்னியா (Cornea) எனப்படும்  விழிவெண்படலத்தின் வழியே சென்று,லென்ஸில் ஊடுருவிச் சென்று கண்ணின் பின்புறம் – உட்புறச் சுவரான விழித் திரையில் பிம்பம் பதிவாகிறது. விழித் திரையிலுள்ள சிறப்பான செல்கள் பார்வைக்கான தூண்டல்களைப் பெற்று பார்வை நரம்பு வழியாக மூளைக்கு மாற்றியனுப்புகிறது. மேலும் விழித்திரையின் மையப்பகுதில் உள்ள மாக்குலா (Macula) என்னும் பகுதி நுட்பமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதியாகும்.

நீரிழிவு விழித்திரை நோய் யாருக்கு அதிகமாக வருகிறது?

நீரிழிவு விழித்திரை நோய், நீரிழிவு பிரச்னை உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீண்ட நாட்களாக நீரிழிவு பிரச்னை உள்ள ஆண்கள் பெண்கள் இருபாலாருக்குமே அதிகமாக வருகிறது. நீரிழிவு உள்ளவர்களில் பாதிபேருக்கு அவர்கள் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.

டயபீடிக் ரெட்டினோபதி  என்றால் என்ன?

நீரிழிவு பிரச்னை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு நீரிழிவு விழித்திரை நோய் (டயபீடிக் ரெட்டினோபதி – Diabetic Retinopathy) எனப்படுகிறது.

டயபீடிக் ரெட்டினொபதியினால் விழித்திரையில் என்ன நிகழ்கிறது? 

நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் மைக்ரோ ஆஞ்சியோபதி எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது.

இந்த கசிவுகள் ரெட்டினல் இடிமா மற்றும் கடின கசிவு (Hard exudates) எனப்படும் லைப்போ புரோட்டீன் வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்குலாவை பாதிக்கும்போது பார்வை குறையும். படித்தல் மற்றும் நுண்ணிய பொருட்களை பார்ப்பதில் சிரமம் ஏற்படும்.

டயபீடிக் ரெட்டினோபதிக்கான அறிகுறிகள் என்ன?

  • அடிப்படையில்  டயபீடிக் ரெட்டினோபதிக்கு என்று ஆரம்பக்கட்ட நிலையில் எந்த அறிகுறியுமே கிடையாது என்பதே உண்மை.
  • உங்களுக்கு நீரிழிவு இருப்பதாக நிச்சயிக்கப்பட்டால் வருடம் ஒருமுறை முழுமையான கண் பரிசோதனையை செய்து கொள்வதே நல்லது.(அவ்வாறு பரிசோதனை செய்துகொள்ளச் செல்லும்போது உங்கள் கண் மருத்துவரிடம் உங்களுக்கு நீரிழிவு பிரச்னை இருப்பதை மறக்காமல் முதலிலேயே சொல்லவும்)

டயபீடிக் ரெட்டினோபதிக்கு தீர்வு என்ன?

  • முதல் நிலையில் சிகிச்சை ஏதும் தேவைப்படுவதில்லை என்றாலும், நீரிழிவு விழித்திரை நோயைத் தவிர்ப்பதற்காக, நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் ரத்த சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு போன்றவை கட்டுக்குள் இருக்கும்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார்கள்.
  • நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அளவைப் பொறுத்து மருந்துகள் அல்லது லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்யலாம்.
  • உங்கள் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதே சிறந்தது.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் கண் பார்வையை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் ? 

நீரிழிவு நோயாளிகள் பத்தில் இரண்டு பேர்  டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்த  டயபீடிக் ரெட்டினோபதிக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இருப்பதில்லை.

  • முறையான திட்டமிட்ட கண் பரிசோதனைகள் மூலமும் தக்க சமயத்தில் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையும் கண் பார்வையை பாதுகாக்கும்.
  • லேசர் சிகிச்சை மூலம் பலருக்கு பார்வை இழப்பை தடுக்கலாம்.
  • அநேகமாக அனைவருக்கும் தக்க சமயத்தில் டயபீடிக் ரெட்டினோபதி கண்டறியப்பட்டால் நல்ல முறையில் சிகிச்சை பெற்று கண் பார்வையை பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • கண் பார்வை நமக்கு மிக மிக முக்கியம். நாம் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால் வருடாந்திர கண் பரிசோதனை மனதிற்கு நிம்மதி கொடுக்கும். வரும்முன் காப்போம்.  ஆரம்பத்திலேயே கண்டறிவோம். உடன் சிகிச்சை பெறுவோம். கண் பார்வையை பாதுகாப்போம்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com