பொண்ணு ஆடி அசத்தணும்!

பொண்ணு ஆடி அசத்தணும்!
Published on

சிறுகதை

ஓவியம் : தமிழ்

– ஜே.எஸ்.ராகவன்

(ஈவென்ட் மேனேஜர் விக்கியுடன் வேதிகா காபி ஷாப்பில் உற்சாகமாக பேசிக் கொண்டிருக்கிறாள்)

விக்கி: வேதி! நாங்க அரேஞ்ச் பண்ணின பெண் வீட்டு ஈவென்ட்டுகளிலே கல்யாணப் பெண்கள் எப்படி கிராண்டா என்ட்ரி குடுத்தாங்கன்னு இந்த பென் டிரைவைப் பாத்தாலே தெரியும். உங்க டேஸ்ட்டை சொல்றதுக்கு முன்னாலே எங்களோட லேட்டஸ்ட் சாம்பிள்களைப் பாருங்க.

வேதி: சூப்பர்! நான் ரெடி விக்கி. கோ அஹெட். ஷூட்.

விக்கி: இது ராக்கியோடது. அவ அப்பா, அம்மா, சித்தப்பா, மாமா எல்லாம் கமர்ஷியல் பைலட்டுகள். ஆகையினாலே ராக்கி ஹெலிகாப்டரில் பறந்து மண்டபத்து முன்னாலே ஹெலிபேடிலே இறங்கி கிராண்டா என்ட்ரி குடுத்தா. ஆனா ரொம்ப செலவாகும்.

வேதி: கேக்கும்போதே மனசு ஜிவ்வுனு ஆகாசத்திலே பறக்கிறது. ஆனா அவ்வளவு செலவு செய்ய முடியாது.

விக்கி: அப்போ அடுத்ததைக் காமிக்கிறேன்.  இந்தப் பொண்ணோட அப்பா டூ வீலர் கம்பெனியோட ஜி.எம். பொண்ணு சும்மா இருப்பாளா? புதுசா மார்க்கெட்டிலே இறக்கி இருக்கிற ஸ்கூட்டியிலே  அட்டகாசமாக மண்டப வாசலிலிருந்து மேடை வரை போய், வட்டமடிச்சு திரும்பிப் போறா பாருங்க. ஆனா அதிலே ஒரு சிக்கல் ஆயிடுச்சு. அதெல்லாம் எடிட் பண்ணிட்டோம். வராது?

வேதி: ஏன்?  செல்ஃப் ஸ்டார்ட்டர்  காலை வாரி விட்டுதா?

விக்கி: அதெல்லாம் இல்லே. மாப்பிள்ளையோட அப்பாதான் பிரச்னை பண்ணிட்டார். போலீஸ் ஆபீசர் ஆச்சே. பொண்ணு ஹெல்மெட் போட்டுக்கலேன்னு கேஸ் எழுதிடுவேன்னு சொன்னாராம். பொண்ணு சொல்லிச்சாம், இது பிரைவேட் பிளேஸ்தானே? பப்ளிக் ரோடு இல்லையே? அதோட இவ்வளவு செலவு பண்ணி கொண்டை போட்டிண்டு இருக்கேன் அதுமேல ஹெல்மெட் கடாயை கவுத்து அசிங்கம் பண்ணணுமா? ரப்பிஷ்னு காச் மூச்சுனு கத்த ஆரம்பிச்சுடுத்து.

வேதி: அவ சொன்னது  சரிதானே? அப்புறம் எப்படி மேட்டர் சால்வ் ஆச்சு?

விக்கி: பொண்ணு தன்னோட செகண்டு கசினின் சின்ன மாமனார் சிட்டிங் எம்.எல்.ஏ.ன்னு பயமுறுத்தி, போலீஸ் சம்பந்தியை ஆஃப் செஞ்சு, பையனை பின்னாலே ஏத்திண்டு அக்னியை வலம் வரா மாதிரி சபையை மூணு தடவை சுத்தி வந்தாளாம்.

வேதி: சூப்பர். அடுத்தது?

விக்கி: இது வன விலங்கு ஆர்வலர் ப்ரீத்தியோட என்ட்ரி. பொண்ணு ஒரு  யானை மேல ஏறி வரணும்னு ஆசைப்பட்டா… யானையைப் பிடிச்சுண்டு வர திருச்சூருக்கு ஆட்களை அனுப்ப ஏற்பாடு பண்ணும்போது பொண்ணு வேண்டாம்னு சொல்லிடுச்சு.

வேதி: பாத்தாலே தெரியறது. பொண்ணு தாராளமா பூசினா மாதிரி  இருக்கே. 'யானை தாங்கணும் இல்லயா?'

விக்கி:  தமாஷ்தான்.  யானையை விட்டுட்டு ராணி சம்யுக்தை மாதிரி மேட்சிங்கா டிரஸ் பண்ணின்டு குதிரை மேல வந்தா. என்ட்ரி என்னமோ கிராண்டா இருந்தது. ஆனா, மாப்பிளையோட சித்தப்பா  ஒரு ரேஸ் பைத்தியமாம். குதிரை வாசனையை கிட்டேந்து பிடிச்சவர் பரவசத்தோட 'கமான், கமான்'னு குரல் குடுத்தவுடன் அந்த பஞ்ச கல்யாணியும் 'ஹிஹி'ன்னு குஷியோட கனைச்சுண்டு, போனி டெயிலைத் தூக்கிண்டு  நாலு கால் பாய்ச்சலிலே கிளம்பி  ஓட ஆரம்பிச்சு கிண்டியிலே போய்தான் நின்னுச்சு.

வேதி:  ரியலி?  நிஜமாவா? கதை விடறீங்களா? ஆமா இது என்ன? பிளாக் அண்டு ஒயிட்டிலே.

விக்கி: (பதறி) அடடே…. இது வேணாம்.  என் அஸிஸ்ட்டென்ட் சக்தி சொதப்பிட்டான். இது, இது… இருக்கக் கூடாது.  எப்படி இந்த கலெக்‌ஷனிலே வந்ததுன்னு தெரியலே. இதெல்லாம் பழைய சமாசாரம். உனக்குப் பிடிக்காது.

வேதி:  நீயாவே எப்படிச் சொல்ல முடியும்? போட்டுக் காமி.

விக்கி: (தயங்கி) பார்க்கிறயா?… சரி, பாரு…. பொண்ணு சூரியகாந்திப் பூவா  தலையைக் குனிஞ்சிண்டு, ரெண்டு தோழிகள் அவளுக்கு ஏதோ நடக்கத் தெரியாத மாதிரி கையைப் பிடிச்சு அழைச்சு  அன்ன நடை நடந்து மேடைக்கு அழைச்சிண்டு போறாங்க.

வேதி:  ரியலி? தலையைக் குனிஞ்சிண்டு,  அதுவும் சூரியகாந்திப் பூவாவா? யூ மீன் சன் ஃபிளவர்? லாடின்லே ஹெலியான்தஸ்?

விக்கி: ஆமா, அப்போ பேக்ரவுண்டிலே ஒலிக்கிற பாட்டு என்ன தெரியுமா?

வேதி:  பூனாவிலே பொறந்து  ஒர்லியிலே வளர்ந்த எனக்கு எப்படித் தெரியும்? என்ன பாட்டு அது? ஆடியோ இருக்கா?

விக்கி: இருக்கு  கேளு… கேளு…

('மணமகளே மணமகளே வா…வா. உன் வலது காலை எடுத்து வைத்து வா வா…குணமிருக்கும் குலமகளே  வா…வா….என்று தொடர்கிறது.

 வேதி: (கை தட்டி) சூப்பர்! எக்ஸாடிக். நான் பாடறேன் பாரு… மணமகளே மணமகளே வா வா….

விக்கி: வேதி, ஹய்யா! சூப்பர்சிங்கர் வாய்ஸ் உனக்கு.

வேதி: (உற்சாகத்துடன் ) தாங்க்ஸ் விக்கி. இதான், இதான் எனக்கு வேணும். என் செல்ல ரங்கமணிப்  பாட்டி சொர்க்கத்திலேருந்து மகிழ்ந்து போய் ஆனந்தக் கண்ணீரை என் தலையிலே அருவியா விட்டு ஆசீர்வாதம் பண்ணுவாள். இதை விட்டுட்டு, ஹெலிகாப்டர், பெருச்சாளிகாப்டர், டூ வீலர், யானை, குதிரை, கழுதைன்னு டைவர்ட் பண்ணி  டயத்தை வேஸ்ட் பண்ணிட்டே. ஓ.கே. அரேஞ்ச் த சிங்கர்ஸ், தோழீஸ் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா…

(மணமகளே மணமகளே வா வா என்று குதூகலத்துடன் பாடிக் கொண்டே வேதி உள்ளே போகிறாள்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com