
மகிழ்ச்சி என்பது நம்முடைய அனுபவத்தினாலேயே வருகிறது. ஒரே பொருள் நமக்கு ஒரு சமயம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இன்னொரு சமயம், அளவு கடந்த வேதனையைக் கொடுக்கிறது.
ஒரு பெண் ஒரு வாலிபனை மிகவும் நேசிக்கிறாள். அவனுக்காக
உயிரையே கொடுக்கவும் தயாராக இருக்கிறாள். அவனை நினைக்கும் போதெல்லாம் அவளுடைய மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் அவளால் அவனை மணந்துகொள்ள முடியவில்லை. அவன் அவளைக் கைவிட்டுவிடுகிறான்.
அந்தப் பெண் இன்னொருவருடைய மனைவியாகிவிடுகிறாள். இப்போது அவளால் அவனைப் பற்றி நினைத்து மகிழ்ச்சி அடைய முடியவில்லை. அந்த எண்ணமே வெறுப்பாக இருக்கிறது. அவன் கண்ணிலேயே படக் கூடாது என்று நினைக்கிறாள். முன்பு தான் அவனைப் பற்றி நினைத்ததெல்லாம் தவறு என்று எண்ணுகிறாள்.
அதே வாலிபனும் அதே பெண்ணுமாக இருந்தும்கூட அன்று இன்ப நினைவுகளாக இருந்தது, இன்று துன்ப நினைவுகளாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம்?
அவனோ, அவளோ மாறாவிட்டாலும் அந்த உணர்வு நிலையானதாக இல்லாததால் மாறிவிட்டது. அந்த ஆனந்தம் நிலையாக இருந்திருந்தால் மாறி இருக்காது. இறைவனிடம் கொள்ளும் அன்பு நித்தியமானது. அதனால் கிடைக்கும் ஆனந்தமும் நித்தியானந்தம்தான். இப்படி நித்திய மானதாக இருப்பதனாலேயே அதன் தூய்மையும் பெருமையும் மிக உயர்ந்தது.
தெய்வீகமான அந்த உணர்வு மனிதர்களுடைய எல்லைகளையும் மனித வாழ்வையும் கடந்தது. அதில் பிரதிபலனை யாரும் எதிர்பார்ப்பதில்லை. "எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிட்டேன்" என்ற தியாக உணர்வே அதில் நிறைந்திருக்கிறது. தியாகேசுவரனான இறைவன் அதையே காணிக்கையாக ஏற்றுக் கொள்ளுகிறான்.