அழுத்தமான கிளைமேக்ஸ்

அழுத்தமான  கிளைமேக்ஸ்
Published on

விசித்திரன் பட விமர்சனம் 

லதானந்த்

விருப்ப ஓய்வுபெற்றுப் பணியில் இருந்து விலகி, தனியே குடியும் புகையுமாக இருக்கும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் வாழ்வில், பணியில் இருக்கும்போதும் விருப்ப ஓய்வுக்குப் பின்னும் நடக்கும் விபரீதங்களை அவர் நண்பர்கள் துணையுடன் புலனாய்ந்து, கண்டுபிடித்து முடிவுக்குக் கொண்டுவருவதுதான் விசித்திரனின் ஒன்லைன். இது ஒரு பாலா தயாரிப்புப் படம்.

ஆடம்பரமான அரங்க நிர்மாணங்கள் இல்லை; அசகாயசூர அடிதடிகள் இல்லை; அபத்த நகைச்சுவைகளும் அருவெறுப்பு அசைவு நடனங்களும் இல்லை; இவையெல்லாம் இல்லாமல் இருந்தும் இருக்கிறது நல்ல திரைக் கதையும் இயக்கமும்.

அதென்னவோ தெரியவைல்லை… தமிழிலாகட்டும் மலையாளத்திலாகட்டும் ஓய்வுபெற்று ஒதுங்கியிருக்கும் (எப்போதும் குடித்துக்கொண்டிருக்கிற) திறமையான அதிகாரிகளுக்கு சோகமான ஒரு ஃப்ளாஷ்பேக் இருப்பதும், பின்னர் அவர்களே துப்புத் துலக்கித் தருவதும் வாடிக்கையான நிகழ்ச்சிகளாகவே இருக்கின்றன.

மிகச் சிக்கனமான பொருட் செலவிலும் தரமான திரைப்படங்களைத் தயாரித்தளிக்க முடியும் என மலையாளப் படவுலகம் பல முறை நிரூபித்திருக்கிறது. அந்த வகையில் கடவுளின் தேசத்தில் வெளியான, 'ஜோசஃப்' என்ற படத்தின் மீள் வடிவம்தான் இயக்குநர் எம்.பத்மகுமார் இயக்கி வெளியாகியிருக்கும் இந்தப் படம்.

சி.பி.ஐ.டைரிக் குறிப்பு பட பாணியிலேயே நூல் பிடித்துத் துப்பறியும் கதைதான் என்றாலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமேயில்லை. சில பாடல்கள் படத்தின் வேகத்துக்குத் தடைபோடுவதைத் தவிரப் படம் முழுக்கத் தொய்வில்லாமல் போகிறது.

ஒரு சாதாரண கான்ஸ்டபிளுக்கு – அதுவும் – ஓய்வுபெற்ற ஒருவருக்கு – அவர் கோரும் அத்தனை உதவிகளையும் இவ்வளவு கச்சிதமாக இதர பணியாளர்கள் செய்துதருவது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது!

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மெயின் கதைக்குப் போவதற்கு முன்னர் அவரின் அசகாயசூரத் தனத்தைப் பதியவைக்கச் சிறியதாக முன்னொட்டுக் காட்சிகள் இருக்குமில்லையா? அதேபோல இதிலும் ஓய்வுபெற்ற கான்ஸ்டபிள் மாயனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷின் இன்க்வெஸ்ட் புலனாய்வுத் திறமை ஆரம்பக் காட்சிகளில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அவரது  'கிரைம் சீன்' அவதானிப்புகள் பலே!

உடல் உறுப்பு தானத்தில் இந்த அளவுக்கு முறைகேடுகள் நடக்குமா என ஆச்சரியமும் அச்சமும் படவைத்திருக்கிறார்கள். மிக நல்ல விழிப்புணர்வு மெசேஜ் தரப்பட்டிருக்கிறது. பாராட்டுகள்.

மலையாளப் பட ரீ மேக் என்பதாலோ என்னவோ கதாநாயகன் படம் முழுவதும் லுங்கியும் சட்டையும் அணிந்து, தொடர்ந்து பீடி புகைத்துக்கொண்டும் மது அருந்திக்கொண்டேயும் இருக்கிறார்.

மாயன் தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது ஏன் எனக் குழம்பவைத்து சாதுர்யமாக அதற்கான பதிலையும் கடைசியில் சொல்கிறார்கள்.

படத்துக்குப் பின்னணி இசை பக்கபலமாக இருக்கிறது. ஒலிப்பதிவும் துல்லியம். வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகளுக்குப் பதில் வித்தியாசமான – ஆனால் அழுத்தமான – கிளைமேக்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில்  'விசித்திரன்' வித்தியாசமான படம்; விரும்பக் கூடிய படம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com