புதிய முயற்சிகளை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்

புதிய முயற்சிகளை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்
Published on

 நேர்காணல்

– ஆதித்யா

"தேசபக்திப் பாடல்களால் மட்டுமே ஒரு கச்சேரி" என்ற  எண்ணம் எப்படி எழுந்தது?

ஆண்டுதோறும் அமரர் கல்கியின் நினைவுநாளைக் கொண்டாடும்  கல்கி அறக்கட்டளை அந்த நிகழ்ச்சியில் ஒரு பாரம்பரிய பாணி  இசைக்கலைஞரின்  இசைக்கச்சேரி நடைபெறும்.  இந்த ஆண்டு அந்தப் பெருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  "வழக்கமான பாரம்பரிய பாணி இசைக் கச்சேரியாக இல்லாமல் முழுவதுமே தேசபக்திப் பாடல்களால்  நிகழ்ச்சியை அமைக்க முடியுமா?" என்று பாருங்களேன் என்ற யோசனையைச்சொன்னவர் திருமதி.  சீதா ரவி. பாரம்பரிய பாணிக் கச்சேரிகள் செய்து வந்த எனக்கு அது புதுமையாகவும், சிறந்த தேச பக்தரான கல்கியின் விழாவுக்கு பொறுத்தமாகவுமிருக்கும் எனத்தோன்றிற்று.   அது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன்,  பாடல்கள் தமிழில் மட்டுமில்லாமல், பிற இந்திய மொழிகளில் அமையவேண்டும் என்று திட்டமிட்டேன்.

எத்தனை மொழிகளில் பாடல்களைத்  தேர்வு செய்தீர்கள்?

தமிழ்  தவிர, 10 மொழிகளில் பாடல்களைத் தேர்வு செய்திருந்தோம்.இதற்கு என் பள்ளி இசை ஆசிரியை திரும்தி லலிதா ஜெயராமன் பெரிதும் உதவினார்கள்

ஆனால் கச்சேரியின் நேரத்திற்கேற்ப தமிழில் கல்கியின் 2 பாடலக்ளுடன்  7 பிற மொழிப் பாடல்களை மட்டுமே பாட முடிந்தது.

பிற மொழிகளில் தேசபக்தி பாடல்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

இந்த நிகழ்ச்சிக்காக ஆராய்ந்ததில் நான் உணர்ந்தது -இது ஒரு மிகப்பெரிய சுரங்கம். ஒவ்வொரு மொழியிலும்  எத்தனை உணர்ச்சி மிகுந்த பாடல்கள்? எதை விடுவது? எதை எடுப்பது? என்ற அளவில் அத்தனை அருமையான  பாடல்கள்.   சில மிக பாப்புலராக அறியப்பட்டவை. பல அதிகம் அறியப்படாதவை. உதாரணமாகத் தமிழில் நாமக்கல் கவிஞரின் காந்தி-சாந்தி பாடல், ஸமஸ்கிருதத்திலிருந்து நொச்சூர் வெங்கட்ராமனின்   தேசபக்திப் பாடலான  'நமோ பாரதம்'  இப்படி பலவகைப்பாடல்கள்.  அவற்றிலிருந்து  ஒரு கச்சேரியை அமைக்கும் வகையில் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்தேன். சில மொழிப்பாடல்களில் சில வரிகளை மட்டும் தேர்வு செய்தேன்.  இது மாதிரியான பல மொழிப் பாடல்கள் இடம் பெறும்  ஒரு கச்சேரியில் ஒரே மாதிரியான பாணியில் அடுத்தடுத்த பாடல்கள் அமைந்துவிடக்கூடாது. சில பாடல்களை வேகமாகவும், சிலவற்றை மெதுவாகவும் பாடவேண்டியிருக்கும்.  எல்லாப் பாடல்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு நேரத்திற்குள் இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்களை பேலன்ஸ் செய்யவேண்டியது  சவாலாகத்தானிருந்தது..

பிறமொழிப் பாடல்களில் உச்சரிப்பு சரியாக இருப்பதற்காகத்  தனிப்
பயிற்சிகள் செய்தீர்களா?

ஆம். நிறைய.  நான் கேந்திரிய வித்தியா மாணவியாக இருந்ததால் இந்தி  நன்றாகத் தெரியும். கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசுமளவுக்குத் தெரியும். ஆனால் இந்தப் பாடல்களைப் பொறுத்த வரையில் உச்சரிப்பு  மட்டுமில்லை, அந்தப் பாடல்களின்  வரிகளுக்கும், வார்த்தைகளுக்கும் சரியான பொருளையும்  பாடப்பட்டிருக்கும் சூழலையும்  அந்தந்த மொழியில் இந்தப் பாடல்கள் பற்றி நன்கு   அறிந்தவர்களிடம் கேட்டுச் சரியாகப் புரிந்துக் கொண்டால்தான் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதால் அதை நன்கு அறிந்தவர்களிடமே கேட்டுப் புரிந்து கொண்டேன். நண்பர்களும் ஆசிரியர்களும் உதவினார்கள்.  வங்காள மொழியில் பாடல்களில் வார்த்தைகளின் உச்சரிப்பை மிகக் கவனமாகச் செய்ய வேண்டும்.  அதற்காக ஒரு பாடகரிடமே கேட்டுப் புரிந்து கொண்டேன்.  இப்படி இந்த நிகழ்ச்சிக்காக நிறையப் பயிற்சிகள் செய்தேன். "ஓர் இசைக்கலைஞருக்கு பாடல் வரிகளின் உச்சரிப்பு மட்டுமில்லை,  அந்த வரிகளின் முழுப்பொருளும் புரிந்திருக்க வேண்டும்"  என்று நம்புவள் நான்.

மாறுதலான இந்த இசைக் கச்சேரிக்கு உங்கள் வாத்திய குழுவை எப்படி தயார் செய்தீர்கள்?

வழக்கமான  கச்சேரிகளில் பாடல்களின் ராகங்களும், நான் பாடும்
பாணியும் அவர்களுக்கு நன்கு தெரியுமாதலால்  எளிதாகச் செய்துவிடுவார்கள். ஆனால் இங்கு ஒவ்வொரு பாட்டும் வேறு மொழிகளில், புதிய ராகங்களில் என்பதால் நிறையப் பயிற்சி தேவைப்பட்டது.  மேலும் வீணையையும் தபேலாவும் பக்க வாத்தியங்களாகியிருந்ததால்  நிறையப் பயிற்சி தேவைப்பட்டது. கொரோனா காலமாகவிருந்ததால்  ஓர் இடத்தில் சந்தித்து பயிற்சி செய்ய முடியவில்லை.  நானும் எனது குழுவும் ஒரு வாட்ஸப் குழுவாக இணைந்தோம். முதலில் நான் பாடலைப் பாடி அனுப்புவேன். அதைக்கேட்டுப் பாடலை புரிந்துக் கொண்ட அவர்கள் அதை வாசித்து அனுப்புவார்கள்.  நான்  அதைக் கேட்டபின்  அவர்களுடன் விவாதித்து  இணைந்து  மெருகேற்றுவோம். இப்படிப் பல நாள் பயிற்சி செய்தோம்.

நிகழ்ச்சிக்கு வரவேற்பு எப்படியிருந்தது?

மிக நன்றாகயிருந்தது. பலர் பாராட்டினார்கள். யு டியூபில் கேட்டவர்களும்  பாராட்டுகிறார்கள். பாரம்பரிய பாணி இசைக்கச்சேரிகள் செய்யும் கலைஞர்களின் இம்மாதிரியான புதிய முயற்சிகளையும் ரசிகர்கள் வரவேற்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com