குறுகத் தரித்த உலக சரித்திரம்

குறுகத் தரித்த உலக சரித்திரம்
Published on

நூல் அறிமுகம்

சித்தார்த்தன் சுந்தரம்

ரலாறு என்றாலே அதை ஓர் அசூயையாகப் பார்க்கும் போக்கு நம்மில் பலருக்கும் பள்ளிக்கூட நாட்களில் இருந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்குத் தந்த மதிப்பை நம்மில் பெரும்பாலோர் வரலாறுக்கும் புவியியல் பாடங்களுக்கும் கொடுத்திருக்க மாட்டோம். இதற்கு விதிவிலக்காக பெங்களூரைச் சேர்ந்த `ஹெட் ஸ்டார்ட் எஜுகேஷனல் அகாடமி'யில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் 10 வயது நிரம்பிய மாணவன் ஸாக் சங்கீத் (Zac Sangeeth) உலக சரித்திர நிகழ்வுகளை அவன் வயதை ஒத்த மாணவர்களுக்கும், வரலாற்றில் ஆர்வம் கொண்ட ஆனால், வாசிக்க நேரமில்லாதவர்களுக்கும் பயன்படும் வகையில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளில் ஒவ்வொன்றைக் குறித்தும் `நறுக்'கென்று மூன்று முக்கியக் குறிப்புகளைக் குறிப்பிட்டு வரலாற்றின் மீது ஆர்வம் வரும் வகையில் எழுதி வெளிவந்திருக்கும் ஆங்கில நூல் `வேர்ல்ட் ஹிஸ்டரி இன் 3 பாயிண்ட்ஸ் (World History in 3 Points) ஆகும்.

இந்தப் புத்தகத்தில் எகிப்து நாகரிகம், சிந்து சமவெளி, சீன நாகரிகம்,
வேத காலம், கிரேக்கப் பண்பாடு, மாயன் நாகரிகம் போன்ற புராதண நாகரிகங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றியும், நவீன கால நிகழ்வுகளான இந்து, சீன, இஸ்லாமியப் பொற்காலங்கள், காலனி ஆதிக்கம் ஆகியவை பற்றியும், போர் வீரர்கள், படைத் தளபதிகள், பரம்பரை ஆட்சிகள் குறித்தும், உலகின் பல பாகங்களில் நடந்த புரட்சிகள், போர்கள் குறித்தும், ஆப்ரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி, அடால்ஃப் ஹிட்லர் போன்ற அமைதியாளர்கள் மற்றும் கொடுங்கோலர்கள் பற்றியும், சாக்ரடீஸ், நீட்சே போன்ற தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள் குறித்தும், சன் சூ, சாணக்கியா, கார்ல் மார்க்ஸ், மாக்ஸ் வெபர் போன்ற பொருளாதார, சமூக, அரசியல் விஞ்ஞானிகள் என பல பிரபலங்கள், நிகழ்வுகள் குறித்தும் ஒவ்வொன்றும் 300 வார்த்தைகளுக்கு மிகாமல் 101 தலைப்புகளில் எழுதியிருக்கிறார் இந்த குட்டி எழுத்தாளர்.

வரலாற்றின் மீது ஆர்வம் எப்படி வந்தது எனக் கேட்டபோது, `நான் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது என் பெற்றோர்கள் விடுமுறைக்காக பாரீஸ் சென்று திரும்பி வந்தார்கள். அப்போது அவர்கள் லூவர் (Louvre) அருங்காட்சியகத்திலிருந்த ஒரு ஓவியத்தைச் சுற்றி மக்கள் கூட்டம் நின்று கொண்டிருந்த படத்தைக் காண்பித்தார்கள். அந்த ஓவியத்தில் இருப்பவர் 'மோனலிசா' என்று சொல்லிவிட்டு அவர் குறித்து அம்மா பல தகவல்களை என்னிடம் கூறினார். அதன்பின் என்னுடைய அப்பா எனக்கு `மியூஸியம் சீக்ரெட்ஸ்' என்கிற தொலைக்காட்சித் தொடரை அறிமுகப்படுத்தி வைத்தார். அதிலிருந்து எனக்கு வரலாற்றின் மீது ஒரு பேரார்வம் ஏற்பட்டது. வரலாறு என்பது ஒரு சமுத்திரம் என்றும் எல்லையற்றது என்பதும் எனக்கு அப்போது தெரிய வந்தது' என்கிறார்.

மேலும், இதற்குப் பிறகு வரலாற்று நிகழ்வுகள், அரசர்கள், நாகரிகங்கள், தலைவர்கள் என சரித்திரம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக தேடித் தேடிப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். அப்போது எனது கையெழுத்து நன்றாக இல்லை என்று அப்பா, அம்மாவிடம் எனது ஆசிரியர்கள் புகார் கூற, வாசித்த விஷயங்களை நோட்டில் எழுதி வைக்க ஆரம்பித்தேன். இதனால் எனக்கு கையெழுத்துப் பயிற்சியும் கிடைத்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!!

ஒவ்வொன்று பற்றியும் எந்த மாதிரியான விஷயங்களை எழுதுவது என்பதில் குழப்பம் ஏற்பட, இறுதியாக ஒவ்வொன்று குறித்தும் மூன்று விஷயங்களை அதாவது, தலைப்பு குறித்த அறிமுகம், அந்த நிகழ்வு / நபர் / இடத்தின் வரலாற்று முக்கியத்துவம், கடைசியாக அது எதிர்காலத்தில் ஏற்படுத்திய தாக்கம் என எழுதுவது என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தேன்` என்கிறார் உலகிலேயே இச்சிறுவயதில் அப்புனைவு நூல் எழுதியிருக்கும் ஸாக்.

இவர் இது போன்ற நூல்களைத் தொடர்ந்து எழுதித் தருமாறு உலகப் புகழ்பெற்ற இரண்டு பதிப்பகங்கள் Hachette, Harper Collins இவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றன. உலகளவில் இவரே இப்பதிப்பகங்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் அப்புனைவு எழுதும் எழுத்தாளர்களில் வயது குறைந்தவர் என இப்பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இவரது அடுத்த முயற்சி வரலாறு குறித்து நூல்கள் எழுதுவதோடு வரலாற்றை வீடியோ கேம் வடிவிலும் கொடுப்பதாகும். இவருக்குப் பிடித்த இரண்டு பேரரசர்கள் அலெக்ஸாண்டர் தி க்ரேட், அசோகா தி கிரேட்!

புத்தகம்: வேர்ல்ட் ஹிஸ்டரி இன் 3 பாயிண்ட்ஸ், 

ஆசிரியர்: ஸாக் சங்கீத்

பதிப்பகம்: Hachette

விலை : ரூ. 399/-

பக்கங்கள்: 256

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com